வியாழன், செப்டம்பர் 15, 2011

ஊரில் இருப்பவர்கள் ஏன் இப்படி..??


வெளிநாட்டில் இருப்பவன் எல்லோரும் தண்ணி பொண்ணு என்றுதான்
நித்தம் திரிகிறான் என்று  ஏன் நினைக்கிறார்கள்.

எப்போது போன் எடுத்தாலும் இன்னைக்கு வேலை இல்லையோ
என்பதைத்தான் முதல் கேள்வியாக ஏன் கேட்கிறார்கள்.

வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லோர்  வீட்டிலும்  காசு மரம்
இருப்பது போலவே ஏன் நினைக்கிறார்கள்.

கேக்கும் போதெல்லாம் பணம் கொடுக்க வேண்டும்,  இல்லையோ
அவன் மாறிவிட்டான் என்று நா கூசாமல் ஏன் சொல்கிறார்கள்.

அங்கே அவர்கள் ஜபோன் ஜபேட்  என்று வசதியாக இருந்து கொண்டு
அதேயே நாங்கள் இங்கே வைத்து இருந்தால் பழசை மறந்து
பந்தா காட்டுது பார் என்று ஏன் குசுகுசுக்கிறார்கள்.

திருமண வயதை தாண்டினால் கூட வருவாய் நின்றுவிடும் என்று
நினைத்து நீ இன்னும் சின்னபிள்ளை என்று சொல்லி சொல்லியே
ஏன் வஞ்சிக்கிறார்கள்.

இங்கிருப்பவர்கள் பணத்தில் செத்த வீட்டைக்கூட  திருவிழா போல
பகட்டாய்  ஏன்  கொண்டாடுகின்றார்கள்.

இங்கிருப்பவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அவர்களை 
ஒரு  பணம் தரும் இயந்திரமாகவே ஏன் பார்க்கிறார்கள்.

அவர்கள் பேஸ்புக், ஸ்கேப்  என்று அரட்டை அடித்தால் அது பொழுது 
போக்கு, வளர்ச்சி.   அதையே நாங்கள் செய்தால்,  பாரு  போன இடத்தில் 
உழைத்து முன்னேறாமல் தறுதலையா எந்த நேரமும் இதிலேயே 
நிக்குது  என்று ஏன் சொல்கிறார்கள். 

வசதியாக இருந்தால் கூட  வெளிநாட்டில் இருப்பவர்களிடம் தங்கள்
கஸ்ரங்களை மட்டும் எந்நேரமும் சொல்லி ஏன் புலம்புகிறார்கள்.

வீடாக இருந்தாலும் சரி விழாவாக இருந்தாலும் சரி,  எல்லாம்
வெளிநாட்டு முறையில்தான் செய்ய வேண்டும் என்று சொல்லி ஏன் அடம்பிடிக்கிறார்கள்.

ஆ.. ஊ..  என்றால் உடனே நீங்கள் வெள்ளைக்காரனுக்கு கோப்பை
கழுவது எங்களுக்கு தெரியாதாக்கும் என்ற தோணியில்
ஏன் பேசுகிறார்கள்.

தங்களுக்கு காதல் வந்தால் அது தெய்வீகம், அதே எங்களுக்கு வந்தால் 
போன இடத்தில் இந்த கண்றாவி எல்லாம் தேவையா என்று ஏன் 
சீறுகிறார்கள்.

ஊரில்  தங்கள் தாங்கள் பார்க்கும் பெண்ணைத்தான்  இங்கிருப்பவர்கள்
திருமணம் செய்ய வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள்.


டிஸ்கி:  இதில் எதுவும் என் அனுபவம் இல்லை என்ற போதிலும்,
எங்காவது ஒரு விழாவில் இங்கிருப்பவர்கள் ஒன்று கூடினால்
ஊரில் இருப்பவர்கள் ஏன் இப்படி.. என்று இவற்றை கூறுவதை
பார்த்து இருக்கேன் அதேயே இங்கேயும் தொகுத்துள்ளேன்.
ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் இப்படி இல்லை என்பது
என் அசைக்க முடியாத கருத்து அனுபவம். ஆகவே வழமைபோல்
இந்த பதிவிலும் என்னை கும்மாதீங்கப்பா..நானே சரண்டர்
ஆகிட்டேன் போதுமா... அவ்வ்.

                   
              

ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

ஓரின செயற்கையாளர்களை ஆதரிக்கலாமா..??


ப்போதுமே அடுத்தவரின் அந்தரங்களுக்குள் புகுந்து நாட்டாமை பண்ணுவது என்றால் நம்மில் பலருக்கு அலாதி பிரியம். ஏதோ
தங்களை உத்தம சீலராக காட்டிக்கொண்டு அடுத்தவர்
அந்தரங்களுக்குள் புகுந்து சும்மா பிரித்து மேய்ந்து விடுவார்கள். ஒரு மனிதனின் தனி மனித சுதந்திரத்தையோ அவன் உணர்வுகளையோ
புரிந்து கொள்ள முடியாதவன் என்னைபொருத்தவரை மனிதனாய்
இருக்க எவ்வித தகுதியும் அற்றவன்.

ஓரின செயற்கை இன்று பெரும்பாலான நாடுகளில் அங்கீகரித்த
ஒன்று ஆனால் இதை பற்றிய தெளிவான அறிவோ அவர்களை புரிந்து
கொள்ளும் மனப்பக்குவமோ நம்மில் பலருக்கு இல்லை என்பதுதான்
கசப்பான உண்மை. மிக சின்ன வயதிலேயே பிரான்ஸ் வந்ததாலேயோ
என்னவோ என்னுடைய பாடசாலை வாழ்க்கையிலும் சரி இப்போது
வேலைசெய்யும் இடத்திலும் சரி நிறைய ஓரின செயர்க்கையாளர்களை
சந்திக்குறேன், அவர்கள் எனக்கு நண்பர்களாகவும் இருந்து
இருக்கிறார்கள்  ஏன் இப்போதும் இருக்கிறார்கள். நான் வேலை செய்யும் இடத்தில் ஜோன், ஜூலியத்  என்ற இரு  ஓரின செயர்க்கையாளர்கள் இருக்கிறார்கள். கிடத்தட்ட  100 பேர் வேலைசெய்யும் இடத்தில் இவர்கள் ஓரின செயர்க்கையாளர்கள் என்று தெரிந்தும்   இவர்களை சீண்டியோ மனம் நோகும்படியோ பேசியவர்கள் யாருமில்லை.  ஒரு வேளை
இதற்க்கு காரணம் என்னோடு வேலை செய்பவர்கள் பெரும்பாலும் 
வெளிநாட்டவராகவும்  நம்மவர் இல்லாமல்  இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.  அவர்களுடன் பழகும் போது "செக்ஸ் விருப்பு"   ஒன்றை தவிர வேறு எந்த வித்தியாசத்தையும் நான் அவர்களிடம் உணரவில்லை.  சொல்லபோனால் அவர்களைபற்றிய நல்ல புரிதல்  என்னிடம் எப்போதும் இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை செக்ஸ் என்பது அவரவர் விருப்பம்,
இரண்டு பேர் தங்கள் விருப்பத்துடனும் சம்மதத்துடனும் உறவில் ஈடுபடும்போது இங்கே தவறு  என்று சொல்ல என்ன இருக்கின்றது. அதைவிட நமக்கு ஒரு உணவு பிடிக்கின்றது அதை சாப்பிடுகிறோம், எங்களுக்கு பிடிக்காத ஒரு உணவை இன்னொருவன்
சாப்பிடுகின்றான்  என்பதற்காக அய்யயோ...  அவன் கெட்டவன், 
அவனை ஒதுக்கி வைக்க  வேண்டும், எங்கள் மானமே போய் விட்டது, என்று  கத்தி கூச்சல் போடவா  முடியுமா??

நான்  காலேஜ் படிக்கும் காலத்தில் அஸிஸ் என்று ஒரு அரபு நாட்டு
நண்பன் ஒருவன் இருந்தான். அவனும் ஓரின செயர்க்கையாளனே.
இது எல்லோருக்கும் தெரிந்து இருந்தும் அவனை வகுப்பிலேயோ
வெளியிலேயோ கேலி பேசியவர்கள் யாருமில்லை. பல தடவை அவன் வீட்டுக்கு கூட சென்று உள்ளேன். அவன் வீட்டில் அவன் தம்பி பெற்றோர் என எல்லோருக்கும் அவனைப்பற்றி தெரிந்து இருந்தும் அவர்கள் அவன் உணர்வுகளுக்கு மதிபளிக்கும் விதம் உண்மையில் என்னை பல தடவை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றது. அவன் உடனான என் நட்பை இன்றுவரை என்னால் மறக்க முடியாது காரணம் காலேஜ் வாழ்க்கையில் எனக்கும் தனிஷா என்ற  ஒரு இலங்கை பெண்ணுக்கும் ஏற்ப்பட்ட காதல்
அதனால் வந்த பல பிரச்சனைகளை என்னுடன் சேர்ந்து
எதிர்கொண்டவன்.  பின் காதலில்  ஏற்ப்பட்ட பல கசப்பான
சம்பவங்களால் என் காலேஜ் வாழ்க்கைக்கே நான் முற்றுபுள்ளி
வைக்க எதிர்பாராவிதமாக அவனுடனான என் நட்புக்கும் அது முற்றுப்புள்ளி ஆகிவிட்டது.

"தோஸ்தானா" திரைப்படத்தில்
     ஜான் ஆபிரிகாம்-அபிஷேக் பச்சான்.

இந்தியாவில் அதிகளவு ஓரின  செயர்க்கையாளர்கள் இருக்கிறார்கள்
என்று பல தகவல் மீடியாக்கள் சொல்கிறது. ஆனால் அங்கு  பலருக்கு ஓரினசெயர்க்கையாளர்களை பற்றிய புரிதல்  எவ்வளவு  இருக்கிறது என்பது இன்றளவிலும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் தைரியமாக ஓரின செயற்கையை
ஆதரித்தவர்கள் பழம் பெரும் நடிகர் எம்.ஆர் ராதா, அதன் பின்
நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் ஜான் ஆபிரிகாம் தான். அதிலும்
எம்.ஆர் ராதா அந்த காலத்திலேயே ஓரின செயற்கையை ஆதரித்தது மட்டும் இன்றி தானும் ஒரு ஓரின செயர்க்கையாளன் என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டது  உண்மையில் மிக தில்லான
பாராட்ட தக்க விடயமே. அண்மையில் ஓரின செயற்கை பற்றி விலாவாரியாக பேசி  வந்த ."கோவா" திரைப்படம் விமர்சனத்துக்கு உள்ளானது அவர்கள்  பற்றிய  "புரிதல்" எத்தகையது என்று காட்டிகொடுத்தது.  ஒரு முன்னணி வார இதழ் கோவா திரைப்பட விமர்சனத்தில் தடித்த எழுத்தில் சொல்கிறது. "ரஜனி மகள் ஓரினசெயர்க்கையாளர் பற்றி படம் எடுப்பது அவர்களுக்கு வேண்டுமென்றால் பெருமையாக இருக்கலாம், ஆனால் ரஜனி மகளுக்கு இது பெருமை இல்லை என்று"  ஹும்..  இப்படிப்பட்ட அறிவுஜீவி மீடியாக்கள் எல்லாம் இருக்கும் போது அவர்களை  குறை சொல்லி
என்ன பயன்.  ஆனால் பல ஹிந்தி திரைப்படங்கள் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஓரின செயற்கை பற்றி அழகாக சொல்லி போகிறது. 
அவற்றுள் அண்மையில் வெளிவந்த நந்திதா தாஸ் நடித்த (பயர் இல்லை)  ஒரு திரைப்படத்தை சொல்லலாம். ஏன் தேசிய விருது பெற்ற பாஷன் திரைப்படமும், தோஸ்தானா திரைப்படமும் அத்தகையதே. அதிலும் தோஸ்தானா திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் "அபிஷேக்பச்சனும்- ஜான் ஆபிரிகாம்" இருவரும் ஜோடியாக ஓரின செயர்க்கையாலர்களாக
நடித்து  காமர்சியலாகவே சூப்பர் ஹிட் ஆன திரைப்படம்..  நாம் மட்டும் அல்ல நம் ஹீரோக்களும் வளர இன்னும் நிறையவே  இருக்கு.

ஊரில்தான் இப்படி என்றால் இங்கு ஓரின செயர்க்கையாளர்களை அங்கீகரித்த நாடுகளில் தஞ்சம் புகந்த   நம்மவர்கள் அவர்களைப்பற்றி அடிக்கும் கமெண்ட்ஸ் நா கூசும்படி இருக்கும்,  நம்மவர்கள் இடம் கொடுத்தால் மடம் கட்டுவார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். ஊரில் இருந்து இங்கு தலைதெறிக்க ஓடிவந்து நிம்மதியான காற்றை சுவாசித்த பின் தான் அவர்களுக்கு தங்கள் கலாச்சாரம் பற்றி நினைவு வருகிறது. இருக்கட்டுமே... இது நல்லதுதான் அதற்காக இருக்க இடம் கொடுத்தவன் சட்டதிட்டங்களிலேயே விமர்சித்து கேலி பேசுவது எந்த வகையில் நியாயம். அண்டி பிழைக்கவந்த நாட்டில் வரம் தந்த குற்றத்துக்காக அவர்கள் தலையிலேயே கை வைப்பதுதான் இவர்கள் கலாச்சாரம் சொல்லி தந்த தர்மமா??

இவர்களின் காலாச்சார பாசம் கடந்த கனேடிய தேர்தலில் அத்துமீறிப்போய் தமிழர்கள் அனைவரையையும் அசிங்க படுத்தியது
என்னை மிகவும் எரிச்சல் படுத்திய ஒன்று.  கடந்த கனேடியன் தேர்தலில் 
போட்டி இட்டவர்களில் "rob ford "  என்பவர் ஒரு  கட்சி சார்பாகவும்
"ஜோர்ஜ்  ஸ்மிதேர்மன்" என்பவர் ஒரு கட்சி சார்பாகவும் போட்டி இட்டார்கள்.  ஜோர்ஜ்  ஸ்மிதேர்மன் போட்டியிட்ட கட்சியே கனேடிய
தமிழர்கள் மேல் அக்கறை உள்ள கட்சி என்ற போதும்
ஜோர்ஜ்  ஸ்மிதேர்மன் தன்னைப்போல் ஒரு ஆணையே திருமணம்
செய்து வாழும் ஒரு ஓரின செயர்க்கையாளர் என்பதை காரணம்
காட்டி கனேடிய தமிழர்கள் ஜோர்ஜ்  ஸ்மிதேர்மனுக்கு எதிர் பிரசாரத்தை
மேற்கொண்டது மிக கண்டனத்துக்கு உரியது. அதிலும் இவர்கள்
ஒரு படி மேலே போய்  பிரபல கனேடிய தமிழ் வானொலியான
CTBC மூலம் ஜோர்ஜ்  ஸ்மிதேர்மனுக்கு எதிராகவும் ஒட்டு மொத்த
ஓரின செயர்க்கையாளர்களையும் சாடி வெளியிட்ட விளம்பரம் 
கனேடிய  மக்கள் மனதில் இவர்கள் மேல் ஒரு வெறுப்பை
ஏற்படுத்தியது. ஜோர்ஜ்  ஸ்மிதேர்மன் ஆணுடன் வாழ்ந்தால் என்ன பெண்ணுடன் வாழ்ந்தால் என்ன.. அவர், அவர் கட்சி உங்களுக்கு என்ன செய்தது என்ன செய்யபோகுது என்பதுதானே முக்கியம்.. அதை விட்டு
அவர் அந்தரங்களுக்குள் மூக்கை நுளைப்பதுதான் பாரம்பரிய தமிழன் என்று சொல்லிகொள்ளும் உங்களுக்கு அழகா?? இந்த விளம்பரத்தை  வெளியிட்ட CTBC  வானொலிக்கு செருப்பால அடிக்கணும். காசு இருந்தால் எவனும் வானொலி ஆரம்பிக்கலாம். அணைவு இருந்தால் எவனும் அறிவிப்பாளர் ஆகலாம் என்பதற்கு இந்த குப்பைகள் ஒரு
உதாரணம்.  உந்த விளம்பரத்தின் தாக்கம் எத்தகையது என்பதை புரிகிற அறிவு கூட அவர்களுக்கு இல்லை. சும்மாவா சொன்னார்கள் 'ஆட்கள் இல்லா ஊருக்கு அரைகுறைதான் நிறைகுடமாம்' என்று. சரி இங்கே  கலாச்சார  காவலர்கள்!  போல் தங்களை   காட்டிகொள்பவர்களுக்கு   
கனேடிய மக்களுடன் அந்த நாட்டின் கலாச்சாரத்துடன் ஒற்றுமையாக வாழ பிடிக்கவில்லை என்றால்   ஊருக்கு நடையை கட்ட வேண்டியதுதானே..??   இது வெளிநாட்டில் வாழும்  தமிழ்  கலாச்சார காவலர்களாக தங்களை  காட்டிகொள்ளும் எல்லா  அறிவு ஜீவிகளுக்கும் பொருந்தும்.

பிந்திய சேர்க்கை-: வானொலியில் வெளிவந்த சர்ச்சைக்குரிய நம்மவர் விளம்பரத்தின் ஒரு பகுதி. இந்த விளம்பரம் என்னைப்பொறுத்தவரை
மிக கண்டனத்துக்கு உரியது.


 





ஞாயிறு, செப்டம்பர் 04, 2011

கலைஞர் ஐயாவை பிடிக்கும்! காரணங்கள் சில..


ரு காலத்தில் புலிகள் வேறு ஈழத்தமிழர்கள் வேறு இல்லை என்று
சொன்னவர் நீங்கள். ஆனால்  உங்கள் தொண்டன் வைகோவுக்கு
கிடைக்கும் செல்வாக்கை பார்த்து எங்கே நான் பூதம் போல் பாதுகாத்து
வைத்திருக்கும் திமுகா என்ற சொத்து எனக்கு பின் என் வாரிசுகளுக்கு
போகாமல் வைகோவுக்கு போய்விடுமோ என்ற அச்சத்தில் கொஞ்சமும்
நா கூசாமல் "வைகோ புலிகளை வைத்து என்னை கொலை செய்ய
திட்டம் போடுகிறார்" என்று அத்தனை மீடியாவையும் அழைத்துவைத்து
அசராமல் பொய் சொன்னீர்களே அப்போதே உங்களை எனக்கு
ரெம்ப பிடித்து போய்விட்டது.

ல்லா நாட்டு, மாநில முதல்வர்களும் எப்போது பார்த்தாலும் நேரம் இல்லை நேரம் காணாது என்று பந்தா பண்ணுகிறார்கள், ஆனால்
நீங்கள் இவ்வளவு பிஸியிலும் "சித்தி" மெகா தொடர் வெற்றி
விழாவிலும் "மெட்டி ஒலி" மெகா  தொடர் வெற்றி விழாவிலும்  மேடை 
ஏறி ஒரு எபிசோட்டை கூட மிஸ் பண்ணாமல் பார்த்தேன் என்று
சொல்லி புகழ்ந்து தள்ளி அண்டை மாநில முதல்வர்களை மட்டும்
அல்ல கழக கண்மணிகளையும் வீட்டு பெண்மணிகளையும் உங்கள்
கலைத்தாகத்தை பார்த்து மூக்கில் விரலை வைக்க வைத்தீர்களே
அப்போதும்  உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ம்மையார் ஆட்சிக்கு வந்துவிட்டார். உங்கள் கைதும் நெருங்கி
விட்டது, உங்களை கைது செய்யும் நாளும் தெரிந்துவிட்டது.. அட
நேரம் கூட தெரிந்து விட்டது. சன் டிவி காரனுக்கு அதான் உங்க 
பேரணுக்கு போனைப்போட்டு  உங்கள் வீட்டுக்கு வெளியேயும்
உள்ளேயும் ஒளிந்து இருக்க செய்து விட்டு, போலிஸ் உங்கள் வீடு
வந்து கைது செய்த போது எதுவுமே தெரியாதவர் போல
"லுங்கியுடன்"  நின்று ஐய்யோ  கொல்லுறாங்களே.. அய்யோ   
கொல்லுறாங்களே..  என்று   கொஞ்சமும் கூச்சமே இல்லாமல்
கத்தி ஒளிந்து நின்ற பேரன்களைக்கொண்டு  படம் புடித்து அதை 
சன் டிவியில் ஒளிபரப்பு செய்து உலக தமிழருக்கே உங்கள் நடிப்பு திறமையை காட்டினீர்களே அப்போதும் எனக்கு உங்களை ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

நீங்கள் ஒரு மிக சிறந்த நாத்திகவாதி!!. ஆனால் பேரன்களோ
தங்கள் டிவியிலும் பத்திரிகைகளிலும் ஆன்மிகம் வளர்த்து கல்லா 
கட்டுகிறார்கள் . ஏன் உங்கள் தொலைக்காட்சியிலேயே விநாயகர் 
சதுர்த்திக்கு விடுமுறை தினமென்று சொல்லி சிறப்பு படம்! காட்டுகிறீர்கள். 
உங்கள்  வீட்டு மனைவி-துணைவி உட்பட்ட உறவுகளே  கோயில் கோயிலாக ஏறி இறங்கி உங்கள் நலம் வேண்டி பிரார்த்திக்கிறார்கள்.
இது கூட பெரிய விடயம் இல்லை. பாபா என்ற சாமியாரை வீட்டுக்கு
அழைத்து அவர் மந்திரமாக வரவழைத்து தந்த மோதிரத்தை
கைவிரலில் ஆசையாக பாதுகாப்பாக போட்டு வைத்துள்ளீர்களே
அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துபோய்விட்டது.

ஜெயலலிதா-சசிகலா ஒரு  கோயில் விழாவில் பங்கேற்ற போது,
ஜெயலலிதா தனக்கு அணிவித்த மாலையை கழட்டி சசிகலா
கழுத்தில் போட்டார், உடனே நீங்கள் உங்கள் ஆக்களைகொண்டு
அதை படம் பிடித்து உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில்  திரும்ப  திரும்ப  ஒளிபரப்பாக்கி ஜெயாவும்-சசியும் மாலை மாற்றினார்கள்
என்று  "ஓரின செயர்க்கையாளர்கள்" என்ற ரேஞ்சில் சொல்லி 
நல்ல மனிதர்கள் பலரை உங்கள் முகத்தில் காரி துப்ப வைத்தீர்களே
(எழுத்தாளர் ஞானி கூட உங்களை குமுதத்தில் கண்டித்து இருந்தார்)
அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ருத்துக்கணிப்பு என்ற பெயரில் உங்கள் பேரன்-மகன்களுக்குள்
நடந்த பொழுது போக்கு சண்டையில் "தினகரன்" அலுவலகம்
கொளுத்தப்பட்டு அப்பாவி உயிர்கள் சில பலியாக பெரிய
நாட்டாமை போல் அவர்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை
என்று பேரங்களை தள்ளி வைத்தீர்கள். அவர்களுக்கு சன் டிவிக்கு
போட்டியாக மக்கள் சொத்தில் உங்கள் சொத்தாக கலைஞர்
தொலைக்காட்சியை ஆரம்பித்தீர்கள் எல்லாம் ஒக்கேதான் திடீர்
என ஒருநாள் உங்களுக்கு "இதயம் இனிக்க கண்கள் பனிக்க" 
சில லாபம் தேடி ஒட்டிவிட்டீர்கள் பேரன்களுடன். கழக கண்மணிகள்
கூட ஒருநிமிடம் ஆடித்தான் போய்விட்டார்கள். ஆனால் உங்களுக்கு
இதில் எத்தனை லாபங்கள்  அப்போதே யோசித்து பார்த்த உடனேயே
உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ழத்தில் இறுதிப்போர் ஆரம்பமாகிவிட்டது, கொத்து கொத்தாக எம்
சனத்தை எல்லாம் கொன்று குவிக்க ஆரம்பித்து விட்டான் சிங்கள
இனவெறியன். நாங்கள் கத்தினோம் கதறினோம் தமிழ்நாட்டில்
மக்கள் கொந்தளித்து வீதியில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டார்கள்.
"முத்துகுமார்" என்ற ஒரு புனித உயிர் எங்களுக்காக உங்களிடம்
மன்றாடி தீக்கு இரையாகிவிட்டது, உலக தமிழினமே உங்களிடம்
கையேந்தி நிக்குது அசைந்தீர்களா ?? நீங்கள். இப்போ பாருங்கள்
 பாசிச! ஜெயலலிதாவை  தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற
என்னால் முடியாது என்றவர் இந்த சிறு மக்கள் கொந்தளிப்பை
பார்த்தே மனம்மாறி அவர்களை காப்பாற்ற சட்டமன்றத்திலேயே
தீர்மானம் கொண்டு  வந்துவிட்டார் அடிகடி முடிவை மாற்றும் இவர்
எல்லாம் முதல்வரா?? ஆனால் நீங்கள் அப்படியா கடிதம் எழுதி
எழுதி, ஆர்ப்பாட்டக்காரர்களை  கைது செய்தும் கடைசி வரை
காங்கிரஸின் ஆசையை நிறைவேற்ற இத்தாலி அன்னைக்கு ஆதரவாக பக்க பலமாக இருந்தீர்களே, நீங்கள் அல்லவா முதல்வர்!! அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்துவிட்டது.

ழத்தின் இன அழிப்பு வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது.
மக்கள் கொந்தளிப்பையும் மீடியாக்கள் கேள்விக்கனைகனைகளையும்
சமாளிக்க முடியவில்லை உங்களால், திடீரென ஒருநாள்   காலையில்
பிரேக் பாஸ்ட் சாப்பிட்டுவிட்டு செரிக்காமல் மெரினாவீச்சுக்கு
காத்து வாங்க வந்த நீங்கள் சட்டென மனைவி தலைமாட்டுக்கும்
துணைவி கால்மாட்டுக்கும் இருக்க படுத்துவிட்டீர்கள் "உண்ணாவிரதம்"
என்ற பெயரில் மெரினாவில். சில மணித்தியாலங்கள் கரைய பசி
குடலை புடுங்க லஞ்சுக்கு வூட்டுக்கு போகணும் என்ற பரிதவிப்பில் "அங்கே" இருந்து போன் அடிச்சாங்க யுத்தம் எல்லாம் நின்னுட்டாம்.
என்று   சொல்லி விட்டு உண்ணாவிரதத்தை! நிறைவு செய்தீங்க
பாருங்க அப்பொழுதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

டுத்த நாள் மீடியாவே திரண்டு வந்து உங்களை செருப்பால
அடிக்காத குறையாக யுத்தம் எல்லாம் நின்னுட்டாம் என்று சொல்லி உண்ணாவிரதத்தை முடித்தபின்தான் கொத்துக்குண்டுகளில்
கொத்துகொத்தாக எம் இனம்  கொலைசெய்யப்பட்டதை சொன்ன போது
அசராமல்  உங்கள் அக்மார்க் புன்னகையோடு "மழை விட்டாலும்
தூறல் இன்னும் விடவில்லைப்போல்" என்று அந்த நேரத்திலும்
உங்கள் இலக்கிய திறமைய காட்டினீர்களே.. அப்போதும் உங்களை
எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ல்லாமே முடிந்துவிட்டது. சொந்த நாட்டிலேயே அகதி ஆகி
விட்டோம் நாங்கள். எங்களிடம் இருந்து உறிஞ்சப்பட்ட ரத்தம்
காங்கிரஸ் பற்களிலும் தெரிகிறது, அது உங்கள் கண்களுக்கும்
தெரிகிறது.அப்போது கூட நீங்கலாக விலக்க வேண்டாம் காங்கிரசை,
பிடிச்ச  சனியன் லேசில் போகாது இங்கே உங்களை விட்டு தானே
காங்கிரஸ் போகிறேன் என்று அடம்பிடிக்குது விட்டீர்களா? நீங்கள்.
கோவிச்சுக்கொண்டு அம்மா வீட்டுக்கு போன புது மனுசியை
சமாதானப்படுத்துவது போல் போய் கையில் காலில் விழுந்து
கூட்டி வந்து தேர்தலில் அத்தனை இடங்களை அள்ளி கொடுத்து
பார்த்து பார்த்து இடங்களை கூட தெரிவு செய்து கொடுத்தீர்களே
அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

யுத்தம் என்ற பெயரில் சிங்கள காடையன் எங்களை  அழித்து கொண்டிருந்த  நேரத்தில் தமிழ் நாடே  கொந்தளித்துக் கொண்டு இருக்கும் போது தமிழ் நாட்டின் முக்கிய தலைவர்கள் சோனா நமிதா பாபிலோனா எல்லோரையும் அறிவாலயம் அழைத்து பேசி நாளொரு வண்ண புகைப்படத்தை முரசொலியில் பிரசுரித்துகொண்டு  
இருந்தீர்களே   அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ழத்து உயிர்களை  காப்பாற்ற சொல்லி  மத்தியரசுக்கு வெறும்  தந்தி
மட்டும் அடித்துக்கொண்டு இருந்த நீங்கள் உங்கள் வாரிசுகளுக்கு
பதவி வேண்ட மட்டும் புள்ளைகள் படை சூழ இந்த தள்ளாத
வயதிலும் தள்ளு வண்டியில் டெல்லி விரைந்தீர்களே அப்போதும்
உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும்.

னிமொழி மகளை முக்கிய புள்ளியாக வைத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் 
ஊழலில் மக்கள் பணம் ரூ. 1.76 லட்சம் கோடியை அலாக்கா கொள்ளை அடித்துவிட்டு அந்த பணத்தை மனைவி துணைவி மகள் என்று
எல்லோர் பெயரிலும் போட்டு கலைஞர் தொலைக்காட்சி வேறு ஆரம்பித்துவிட்டு கொஞ்சம்  கூட குற்ற உணர்வு இன்றி இப்படிப்பட்ட 
ஒரு ஊழல்  நடக்கவே இல்லை என்று சத்தியம் பண்ணாத 
குறையாக  அண்டைப்புளுகு புளுகினீர்களே அப்போதும் உங்களை
எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

திமுகாவை அதன் முந்தைய தலைவர்கள் வளர்த்து இந்த நிலைக்கு
கொண்டுவர எவ்வளவு பாடுபட்டு இருப்பார்கள். ஆனால் இன்று
நீங்கள் பார்த்துகொண்டு இருக்கவே காங்கிரஸ் மெல்ல தன்னுடன்
சேர்த்து திமுகாவையும் முழ்கடித்து கொண்டு இருக்குறது. ஆனால்
"திமுகா என்ன அப்பன் வீட்டு சொத்தா" என்ற கணக்கில் திமுகாவை
விட மகள்தான் எனக்கு முக்கியம் என்று இன்னும்  காங்கிரசின்
கால்கழுவி அவர்களிடம் வலுக்கட்டாயமாக ஒட்டிக்கொண்டு 
இருக்கிறீர்களே  இப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ண்மையில் ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு
தூக்கு தண்டனையை நிறைவேற்ற முயன்ற போது,  குற்றம் சாட்டப்பட்ட
அந்த மூவரையும் தூக்கில் போட பரிந்துரைத்தவர்  சிபாரிசு  செய்தவர் 
நீங்கள்தான் என்பதையும் மற(றைத்)ந்து, ஐயோ காப்பாருங்கள் என்று   
அம்மையாருக்கு கருணை மடல் வரைந்து கபட நாடகத்தை ஜோராக
அரங்கேற்றினீர்களே அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ட இப்போக்கூட பாருங்க....  பேரறிவாளன் முருகன் சாந்தன்
ஆகியோரை காப்பாற்ற சட்டமன்றத்தில் அம்மையார் தீர்மானம் கொண்டுவந்தது.நான் இந்த விடயத்தை கையில் எடுத்ததை பார்த்து பயந்துதான் என்று நேர்மையாக உண்மையாக அறிக்கை விட்டீர்கள் பாருங்கள் இப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துபோய்விட்டது.


குறிப்பு: பதிவின் நீளம் கருதி தலைவரை பிடித்ததின் காரணங்களின்
பகுதி-01 முற்றும்.









LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...