புதன், ஜூன் 29, 2011

பாசமாவது.. பந்தமாவது.. இது வெளிநாடு.

பல விடயங்களை நாம்  நினைத்தது போல் எழுதிவிடலாம், 
சில விடயங்கள் மட்டும் நாம் நினைத்தை அப்படியே எழுதி விடமுடியாது அப்படித்தான் இப்பதிவும் எனக்கு. பல நாட்களாக இதைப்பற்றி  எழுதணும் எழுதணும் என்று நினைப்பேன் பின் ஏதோ ஒன்று என்னை தடுக்க  அப்படியே  கிடப்பில் போட்டு விடுவேன்,  இன்று எழுதிவிடுவது என்ற முடிவோடு ஆரம்பித்து விட்டேன்.  இதை மேற்கொண்டது எழுதுவது மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதற்கு சமமானதுதான்  ஆனாலும் பரவாயில்லை இப்பதிவை படித்து ஒரு வெளிநாட்டு  உறவாவது   தங்கள் செய்கைகளையும் பார்வைகளையும் மாற்றிக்கொண்டால்  அதுவே 
எனக்கு போதுமானது.  

மனிதர்கள் எப்போதுமே பாசத்துக்கு அடிமைப்பட்டவர்கள்.  மனிதர்களின்
வாழ்க்கை சுற்றி சுற்றி உறவுகளால் பின்னப்பட்டது.  எனக்கு இப்போது கூட நினைவு இருக்குறது எங்கள் சொந்தங்கள் எல்லாம் வன்னியில்
இருந்த காலங்களில் எங்கள் குடும்பம் மட்டும் வவுனியாவில் இருந்தது,
வன்னியில் இருந்து கொழும்பு,வவுனியா வரும் என் அப்பாவின்
சொந்தங்களாக இருந்தாலும் சரி அம்மாவின் சொந்தங்களாக இருந்தாலும் சரி தங்கி செல்வது எங்கள் வீட்டில் தான்,  அதனாலே என்னவோ
எங்கள் வீட்டில் எங்கள் குடும்பம் என்று நாங்கள் எப்போதும் தனியாக இருந்ததே இல்லை எங்கள் வீட்டில் எப்போதும் யாராவது ஒரு விருந்தாளி  இருந்துகொண்டே இருப்பார்.  அம்மாவும் அப்பாவும் மனம் நோகாதபடி அவர்களை விழுந்து விழுந்து உபசரிப்பது இப்போதும்
என் கண்களில் நிற்கிறது.  அதை விட பாடசாலை விடுமுறை நாட்களில் யாரவது மச்சான்,மச்சாள் பெரியம்மா மகன்,மகள் என்று எங்கள் வீட்டில்தான் வந்து விடுமுறையை களிப்பார்கள். அப்படி வரும் நாட்களில்
என் பெற்றோர் எங்களை விட அவர்களைத்தான் அதிகம் கவனிப்பார்கள்.
எங்களுக்குள் சிறு சண்டை வந்தால் கூட என் பெற்றோர் அவர்கள் பக்கம் தான் நிப்பார்கள்.   சின்ன  வயசில் இதற்காக என் பெற்றோருடன்  சண்டை கூட போட்டு உள்ளேன் அதற்க்கு  அவர்கள்  சொல்லுவார் நீ என் பிள்ளை உன்னை கவனிக்கா விட்டாலும் பரவாயில்லை ஆனால் என்னை நம்பி அவர்கள் பெற்றோர் அனுப்பி இருக்கிறார்கள் அவர்களும்  என்னை நம்பி வந்து இருக்கிறார்கள் அவர்கள் மனம் நோகாது நடந்து கொள்வதுதான் எனக்கு மட்டும் அல்ல உனக்கும் மரியாதை பெருமை என்று.  அதை போல்  நாங்கள் வன்னிக்கு எங்கள் சொந்தகாரங்கள்  வீட்டுக்கு போனாலும் இதே கதைதான் அங்கேயும் அவர்கள் பிள்ளைகளை விட எங்களைத்தான் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் ஆக மொத்தம் ஊரில் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும்  பிற பிள்ளை தலை தடவினால் தன் பிள்ளை  தானே  வளரும் என்பது போலதான் அவர்கள் நடவடிக்கை அமைந்து இருக்கும்.  இதுவே அவர்களுக்கு சந்தோஷமும் கூட.

ஆனால் இதற்க்கு அப்படியே எதிர்மாரானவர்கள் நம் வெளிநாட்டு உறவுகள் என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை. 
பிறர் பிள்ளையாய் குட்டி வளர்த்தால் தன் பிள்ளை நல்லாய் வளரும் என்பது இவர்களின் கணக்கு. ஊரில் பெற்றோரால் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டு யுத்தம் காரணமாகவோ கஸ்ரம் காரணமாகவோ அல்லது வெளிநாட்டு மோகம் காரணமாகவோ அரும்பு மீசையுடன் கனவுகளையும் வளர்த்துகொண்டு வெளிநாடு வரும் இந்த அப்பாவி ஜீவன்கள் அடைக்கலம் புகுவது வெளிநாட்டில் வாழும் தங்கள் சொந்தங்களிடமே அங்கே இவர்களுக்கு கிடைப்பது ஏமாற்றமும் விரக்தியும் மட்டுமே. 
ஊரில் இருந்து வருவவர்கள் தாங்கள் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் செய்ய வேண்டும்,  மொத்தத்தில் தங்களுக்கு ஒரு நல்ல வேலைக்காரர்களாக இருக்க வேண்டும் என்பது அவர்களின்  அசைக்க முடியாத எண்ணம்.  தங்கள் பிள்ளைகளையும் ஊரில் இருந்து வரும் பிள்ளைகளையும் இவர்கள் பார்க்கும்  பார்வைகள் வேறு வேறு விதமாகவே இருக்கும்.  இரு பிள்ளைகளுக்கும் சம வயது இருந்தால் கூட தங்கள் பிள்ளைகளை நோகாமல் பார்த்துகொள்ளும்  இந்த  உத்தமர்கள்  ஊரில் இருந்து வந்த பிள்ளையை எடுப்பார் கைபிள்ளை போல்தான் நடத்துவார்கள் தங்களின் அந்த இழி செயல்களுக்கு கூட ஒரு நியாயமான! காரணத்தை தேடி கண்டு பிடித்து சொல்வார்கள் 'என் புள்ள இங்க பிறந்து வளந்தபுள்ள அது கஸ்ரம் நஸ்ரம் பாக்காதது அதுக்கு என்ன தலை எழுத்தா கஸ்ரப்படனும் என்று',  இதே ஊரில் இருந்து வந்த பிள்ளை என்றால் அங்கே சாப்பிட வழி அற்று நிறைய அடிபட்டு அவமானப்பட்டு இங்கே வந்தது அதனால் தாங்கள் எவ்வளவும் கேவலமாக அசிங்கப்படுத்தி கஸ்ரப்படுத்தினாலும் தாங்குவார்கள் தாங்கவேண்டும் என்பது இவர்களின் பணத்திமிரின் உச்சக்கட்ட தீர்ப்பு.  உண்மையில் கஸ்ரமோ  நஸ்ரமோ  ஊரில் இருக்கும் பெற்றோரும் தங்களை போன்றுதான் பாசத்தைக்கொட்டி தங்கள் பிள்ளைகளை பொத்தி பொத்தி   வளர்க்கிறார்கள்,  காக்கைக்கும்    தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதை ஏனோ இந்த ஓரவஞ்சக்காரர்கள்  சுலபமாக மறந்து விடுகிறார்கள். 

நான் பிரான்ஸ் வந்து படித்த காலங்களிலும் சரி இப்போது  வேலைக்கு செல்லும் காலத்திலும் சரி  ஊரில் செல்லமாக வளர்க்கப்பட்டு வெளிநாடு வந்து  இப்படிப்பட்ட சொந்தங்களிடம்! வீட்டு கொடுமைகளையும் 
அவமானங்களையும்  சகித்துக்கொண்டு வாழ்பவர்களை சந்தித்துகொண்டுதேதான்  இருக்குறேன். வெளியே சென்றால் அரவணைப்பார் இல்லாததாலும் விசா பிரச்சனை மொழி பிரச்சனை வேலைப்பிரச்சனை கூடவே வெளியே காத்திருக்கும் ஆபத்துக்கள் அதைவிட ஊரில் இருந்து பெற்றோர் உன் மாமா.. தானே சித்தி.. தானே சித்தப்பா தானே..  எனக்காக பொறுத்துக்கொண்டு இரு என்று  எங்கே வெளியே போனால் தன் பிள்ளை கெட்டுவிடும் என்ற அச்சத்தால் அவர்கள் இடும் பாசக்கட்டளைக்கும் இவர்கள் எல்லாத்தையும் சகித்துக்கொண்டு அடிமையாகவே இருந்து விடுகிறார்கள்.

ஊரில் செல்லமாக வளர்க்கப்பட்டு வசதி இருந்தும் வெளிநாட்டு மோகத்தால் பிரான்ஸ் வந்து இங்கே சொல்லனா துயரத்தை அனுபவித்த என் நண்பன் ஒருவனின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்து இருக்குறேன் நான்.  எனக்கு அப்போது  17  வயது.  பிரான்சில் காலேஜ்  படித்து கொண்டு இருந்த காலம் அது. அப்போதுதான் புதிதாக வந்து அறிமுகமானான் அவன்.  பெயர் கணேஷ்,  எங்கள் வகுப்பில் மட்டும் அல்ல எங்கள்   காலேஜ் இலேயே நாங்கள் இரண்டு பேர் மட்டுமே தமிழ் என்பதால் நாங்கள் விரைவிலேயே நண்பர்கள் ஆனதில் ஆச்சரியம் இல்லை. வகுப்பில் எப்போதுமே யாரையாவது கலாய்துகொண்டு கொண்டு
மொக்கை போட்டுகொண்டு இருப்பவன் நான். எனக்கு எதிர்மாறானவன் அவன்.  முகத்தில் எப்போதுமே ஒருவித சோகமும் விரக்தியும் அப்பியே இருக்கும் காரணம் கேட்டால் சொல்ல மாட்டான்.  சில நாட்களில் அழுத முகத்துடனேயே  காலேஜ் வருவான்  எங்கள் வகுப்பு ஆசிரியர் கூட அவனிடம் சந்தேகப்பட்டு  வீட்டில்  உனக்கு  ஏதும்  பிரச்சனையா  என்று கூட கேடடு உள்ளார் எல்லாவற்றுக்கும் அவன் பதில் மறுப்பான தலை அசைவும் புன்னகையுமே.  ஒரு நாள் அடிபட்ட காயங்களுடன் காலேஜ் வந்து விழுந்துவிட்டேன் என்று ஒற்ற வரியில் காரணம் சொல்லிவிட்டு இருந்தவனை என்னால் மட்டும் நம்ப முடியவில்லை தனியே அழைத்து போய் விசாரித்ததில் மழுப்பியவன் ஒரு கட்டத்தில் உடைந்து போய் தேம்பி தேம்பி அழவே தொடக்கிவிட்டான், அதன் பின் அவன் சொன்ன காரணங்கள் எல்லாம் பக் பக் ரகம்.

வீட்டுக்கு ஒரே ஆண்பிள்ளை அவன், வெளிநாட்டு ஆசையில் படிப்பை குழப்பி அடித்துக்கொண்டு பிரான்ஸ் வந்தவன் அடைக்கலம் ஆனது தன்
மாமன் ஆனா தாயின் சகோதரன் வீட்டில்,  ஆரம்பத்தில் எல்லாமே நல்லாத்தான் போனது போக போக அவனை வீட்டு வேலைக்காரர் ஆக
பார்க்க தொடக்கிவிட்டார்கள் அவர்கள்,  அதைவிட  குடிகாரர் ஆன இவன் மாமா  விடியப்பறம்  இரண்டு மணிக்கு வந்தாலும் இவன்தான் எழுந்து
சாப்பாடு போட்டு கொடுக்கணும், அவர்கள்  பிள்ளைகள்   பாடசாலை 
முடிந்து வந்து இன்டர்நெட் இருக்கும் போது கூட அவர்கள்  பசி  அறிந்து  ஏதாவது  சாப்பிட மேசைக்கு கொண்டு போய் வைக்கவேண்டும்  அவர்கள்
பிள்ளைகள் ரியூசன் போனாலும் சரி விளையாட போனாலும் சரி பின்னால்
இவனும் காவலுக்கு போக வேண்டும்,  நண்பர்கள் சக உறவினர்களுடன் பேச
 தடை  மொத்தத்தில் வீட்டு சிறையில் அடைத்து வேலைக்காரன் ஆக வைத்து இருந்தார்கள். அவனுக்கு அவர்கள் கொடுத்த ஒரே சுதந்திரம் காலேஜ்  போக அனுமதித்ததுதான், அது கூட பதினெட்டு வயதுக்கு குறைய
இருப்பவர்களை படிக்க விடாமல் வீடோடு வைத்து இருந்தால் இங்கத்த அரசாங்கத்துக்கு பதில் சொல்ல வேண்ட்டும் என்ற பயத்தால். இத்தனை  கொடுமைகள் பத்தாது என்று அவன் செய்கைகளில் பிழை கண்டு பிடித்து அடித்து சித்திரவதை செய்யவும் ஆரம்பித்து விட்டார்கள். பல இரவுகள் அடித்து வீட்டுக்கு வெளியே விட்டும்  கதவை சாத்தி இருக்கிறார்கள்,  கணவன் மனைவிக்குள் வரும் சண்டை கூட இறுதியில் இவனை அடிப்பதில்தான்  முடியுமாம்.  இரவில் கண்ணீர் விட்டு அவன் தலையணையை   நனைக்காதா  நாட்களே இல்லை என்றான். இதையெல்லாம்  கேட்டு எனக்கு அவர்களை விட அவன் மேல் தான் அதிக கோவம்  வந்தது,  என்னைப்பொறுத்தவரை   குட்டுபவனை விட  குட்டு  வாங்குபவன்தான் முட்டாள்.

இவ்வளத்தையும்  கேட்ட பின் திரும்பவும் என் நண்பனை அவன் மாமா வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு சத்தியமாக இரவு என்னால் நிம்மதியாக தூங்கி இருக்க முடியாது,  என் நண்பனிடம் மனம் விட்டு பேசினேன் பின் அடுத்து என்ன செயலாம் என்று கூறி அதனால் வரும் நன்மைகளையும் தீமைகளையும் பட்டியல் இட்டு கூறிவிட்டு காலேஜ் மதிய சாப்பாட்டு நேரம் காலேஜ் கேட் ஏறி  குதித்து  ஒரு தமிழ் கடைக்கு வந்து நான்  போட்டு இருந்த சங்கிலி மோதிரம் இரண்டையும் வித்ததும் கையில் ஒரு 650ஜீரோ   கிடைத்தது (இந்த சங்கிலிமோதிரம் வித்து நான் வீட்டில் பட்ட பாடை ஒரு தனி பதிவாகவே போடலாம்) அந்த பணத்தை என் நண்பனிடம் ஏதும் அவசரம் என்றால் வைத்துகொள் என்று கூறி கொடுத்துவிட்டு அவனை அழைத்துக்கொண்டு பிரான்சில் ஆதரவு அற்றவர்களுக்கு உதவிசெய்யும் ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்று  அவன் நிலையை சொல்லி தங்கவும் படிக்கவும் உதவி கேட்டோம். அங்கே எங்கள் இருவருக்கும் பதினெட்டு வயதுக்கு குறைவு என்பாதால் அவர்கள் போலீஸுக்கு போன் பண்ண அவர்கள் வந்து எங்கள் இருவரையும் குண்டடியாக தூக்கி சென்று ஸ்டேசனில் வைத்துக்கொண்டு இருவீட்டாருக்கும் போன் பண்ணி வர சொல்லி விட்டார்கள்.  இருளத்தொடங்கிவிட்டது.  இருவரும்  இது  புதுஅனுபவம்  அதை விட இப்படியெல்லாம் நடக்கும் என்று நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை  என்பதால்  பயத்தில்  உறைந்துபோய் நிற்கின்றோம், சிறிது நேரத்துகெல்லாம் இரு வீட்டாரும் வந்து விட்டார்கள் விடிய விடிய நடக்கிறது விசாரணை இறுதியில் என் நண்பனை நாளை கோட்டில் ஆஜர் படுத்த போவதாக சொல்லி அவனை மட்டும் மறித்துக்கொண்டு எங்கள் எல்லோரையும் அனுப்புகிறார்கள் என் நண்பன் ஓடி வந்து என் கைகளை இறுக பற்றுகிறான் ஒரு பெண் போலீஸ் வந்து என் கையை பிடித்த அவன் கைகளை விலக்கி உள்ளே அழைத்து செல்கிறாள் எல்லாம் ஒரு கனவு போல் நடக்கிறது வெளியே வந்த எனக்கு  என்  நண்பனின்  மாமா கொடுத்த சாபங்கள்  இன்றுவரை  என்னால்  மறக்க முடியாதது.  எங்கள் வீட்டுக்கு வந்ததும் என் வீட்டார் எனக்கு செய்த அர்ச்சனைகள் எதுவுமே எனக்கு ஏறவில்லை மாறாக என் நண்பனின் அந்த கடைசி நேர பரிதாப முகமே கண்முன் நிழலாடுகிறது.  அடுத்த நாள் கோட்ஸ்க்கு  நண்பன் வருவான் என்று தெரியும் எவ்வளவு கெஞ்சியும் வீட்டில் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது,  மூன்று நாட்கள் வீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை  நாலாம் நாள்  என் நண்பனை  எதர்பார்த்த படி  காலேஜ்  விரைகிறேன் அங்கே அவன் இல்லை  நாட்கள்  வாரங்கள்  ஆகி  வாரங்கள் மாதங்கள் ஆகிறது  அவன்  தகவல்தான் ஏதும்  இல்லை,  சுத்தி சுத்தி  எல்லா இடமும் விசாரித்தும் பயன் இல்லை,  எங்கே நான் தான்  தப்பு செய்து விட்டோமோ என்று மனச்சாட்சி உறுத்த முள்ளின் மேல் இருப்பதை போல் நாட்களை  கடத்திக்கொண்டு இருக்கிறேன்.  பல மாதங்களின் ஒரு நாள்  காலேஜ்  வகுப்பில் நுழைந்து என்  அருகே வந்து அமர்கிறான் என் நண்பன், சத்தியமா என் வாழ்க்கையில் அன்று அனுபவித்த சந்தோஷத்தை இன்றுவரை அனுபவித்தது இல்லை, எங்கே என் நண்பனின் வாழ்க்கையை நானே அழித்ததுவிட்டேனோ என்று குற்ற உணர்வில் துடித்துக்கொண்டிருந்த எனக்கு அவனது வருகையும் புன்னகை முகமும் பெரும் மனநிறைவை  தந்தது.  "மச்சான் இப்போதுதாண்டா  நான் வெளிநாட்டில் இருப்பதை  போல் உணர்கிறேன்டா.. இந்த சந்தோஷம் உன்னால் வந்தது தேங்க்ஸ்டா துஷி" அவனுடைய இந்த ஒரு வார்த்தை போதும் அவனுக்காக நான் பட்ட காயங்களையும் அவமானங்களையும் ஆற்ற.

வெளிநாடுவாழ் உறவுகளே..  தயவுசெய்து  உங்கள் பிள்ளைகள் மேல் காட்டும் அன்பில் ஒரு சிறிய அளவையேனும் உங்களையே தஞ்சம் என
நம்பி வந்து இருக்கும் அப்பாவி ஜீவன்கள் மேலும் காட்டுங்கள் அல்லது
அன்பைக்காட்டாவிட்டாலும் அவர்கள் மேல் வெறுப்பையேனும் உமிழாமல்
இருங்கள். ஒன்றை மட்டும் உங்கள் மனதில் ஆழமாக பதித்து வையுங்கள்
நீங்கள் எவ்வளவு கஸ்ரப்பட்டு பத்துமாசம் சுமந்து பிள்ளையை பெற்று
எடுகிறிர்களோ அதேபோல்தான் ஊரில் இருப்பவர்களும், அவர்கள்
குறைமாதத்திலோ அல்லது எந்தவித வலியையும் அனுபவிக்காமலோ
குழந்தையை பெற்ரெடுப்ப்பது இல்லை. உங்களுக்கு உங்கள் பிள்ளைகள் மேல் இருக்கும் பாசத்துக்கு எந்தவிதத்திலும் குறைந்தது இல்லை அவர்கள்
தங்கள் பிள்ளைகள் மேல் காட்டும் பாசம்.  அவர்களிடம் உங்களிடம் இருப்பதுபோல் பணம் இல்லாவிட்டாலும் அவர்களும் தங்கள் பிள்ளைகளை பொத்தி பொத்தி வளர்த்து வலிகளையும் வேதனைகளையும்
அடக்கி கொண்டுதான் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்பதை
மறக்காதீர்கள் தயவுசெய்து.

டிஸ்கி 1 :  வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் இப்படியல்ல, அதற்காக 
ஒருசிலர்தான் இப்படி என்று சொல்லக்கூட என் மனச்சாட்சி இடம் கொடுக்க வில்லை, வெளிநாடுவாழ் நம்மவர்களில் ஒரு சிலரை விட பெரும்பாலானர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை.

டிஸ்கி 2 :  இப்பதிவில் சொல்லிய என் நண்பனின் கதை அத்தனையும் உண்மை, சொல்லபோனால் அவனுக்கு அவர்கள் வீட்டில் நடந்த கொடுமைகள் சிலவற்றை இப்பதிவில்  மறைத்து  உள்ளேன்,  காரணம்  அவற்றை எல்லாம் எழுத எனக்கே வெக்கமாக இருக்கிறது.

டிஸ்கி 3 : சாரிடா கணேஷ் ,  உன்னிடம் கேட்காமல் உன் கடந்தாகால 
வாழ்க்கையை பதிவிட்டத்துக்கு.












வெள்ளி, ஜூன் 24, 2011

தமிழ்மொழியும் வெளிநாடுவாழ் தமிழரும்..

நாம் எல்லோரும் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழர்கள். எமது தமிழ் மொழியின் பெருமையும் சிறப்பையும் சற்றே உற்று பார்த்து விட்டு மேற்கொண்டு  எழுதலாம் என்று நினைக்கிறன்,  அதுவே சாலச்சிறந்தது  என்று நினைக்குறேன். தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும்இலங்கையிலும்சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியாதென்னாபிரிக்காமொரீசியஸ்பிஜிரீயுனியன்டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1997-ம் ஆண்டு புள்ளி விவரப்படி தமிழ் உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

அதிக மக்கள் உள்ள இடம்:இந்தியா: 61.5 மில்லியன் (6.32%)

(நன்றி விக்டோரியா)

இவ்வாறு எத்தனையோ பெருமைகளை கொண்ட நம் தமிழ் மொழியை பேசுவதற்கு நாம் பெருமைப்பட வேண்டும்  ஆனால் நம்மில் இவ்வாறு எத்தினை பேர் இருக்கிறார்கள்..! எமது ஆங்கில மோகத்தால் தமிழை கதைப்பதை கேவலமாகவும் ஆங்கிலம் கதைப்பதை கௌரவமாகவும் நம்மில் பலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மை 
அதுவல்ல  நாம்  எந்த மொழியை பேசுகின்றோம் என்பதை விட எவ்வாறு பேசுகின்றோம் என்பதே முக்கியம். இதற்காக ஆங்கிலம் பேசவேண்டாம் என்று கூறவில்லை நம் மொழியுடன் இன்னுமொரு  மொழி தெரிந்திருப்பது என்றும் தவறு இல்லை. ஆனால் அதற்கொன்று ஒரு முறை இருக்கின்றது. இன்னொரு மொழியினருடனோ அல்லது ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாக கொண்டவருடன் நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக கதையுங்கள்.  எமது தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர்களுடன் தமிழில் கதையுங்கள் அதைதான் நான் கூறுகின்றேன்.

குறிப்பாக    வெளிநாட்டில்  வாழும் தமிழர்கள்(பலர்)  தங்களுக்கும்   தமிழுக்கும் ஏதோ எட்டாப் பொருத்தம் மாதிரி ஆங்கிலத்தில் தான் கதைப்பார்கள். கேட்டால் ஐ டோன்ட் நோ தமிழ்(!)  என்கிறார்கள்  இதை நான்  இந்த பதிவுக்காக குறிப்பிடவில்லை. இதை நாளாந்தம் என் கண் கூடாக கண்டு கொண்டு  இருக்கிறேன். இப்படி பேசுபர்கள் யார் என்று பார்த்தால் இவர்கள் இங்கிலாந்தில் பிறந்த தமிழர்கள் அல்லர் இவர்கள் யுத்த நடவடிக்கை காரணமாக வெளிநாடுக்கு இடம் பெயந்தவர்கள்,
சரி..  இவர்கள் பேசும் ஆங்கிலம் ஆகா என்ன அ(எ)ருமை..!  எவ்வாறு எல்லாம் ஆங்கிலம் கதைக்கலாம்,   இலக்கணம்  தவறாமல் கதைப்பது எப்படி  என்று இவர்கள் தான் இங்கிலாந்து  மகாராணிகே கற்று கொடுக்க வேண்டும்.  இவ்வாறு ஆங்கிலம் பேசுபவர்கள் தமது பிள்ளைகளுடன் தமிழில் தான் உரையாடுகிறார்கள். தமிழை வளர்க்க வேண்டும் என்று இல்லை இவர்கள் ஆங்கிலம் கதைத்தால் இவர்களின் பிள்ளைகளுக்கு விளங்காது  இவர்களது பிள்ளைகள் ஆங்கிலம் கதைத்தால் இவர்களுக்கு சுத்தமாக விளங்காது. இவர்கள்  வெளுத்து கட்டுவது சக தமிழர்களிடம் மாத்திரமே.

இவர்கள் ஈழத்தில் இருக்கும் அவர்களது உறவினர்களுக்கு தொலைபேசியில் உரையாடினாலும் சிறிது ஆங்கிலம் கலந்து தான் உரையாடுவார்கள் (பந்தா).  இவ்வாறு பேசுவது பெரும் பாலும் ஆண்களே என்பதும் வருத்தத்துக்குரிய விடயம். ஆண்களோடு ஒப்பிடும் பொழுது பெண்கள் பருவாயில்லை.  ஏனெனில் தென்றலோ தங்கமோ திருமதி செல்வமோ (சின்னத்திரை நாடகங்கள்)  ஆங்கிலத்தில் ஒளிபரப்ப படுவதில்லை என்பதுதான். ஆனால் இவ்வாறு வேறு நாட்டவர்கள் அல்லது வேறு மொழியினர்  நடந்து கொள்வதில்லை என்பது தான் கவலைக்குரிய விடயம்.  இரண்டு  பிரஞ்சுகாரர்கள்    சந்தித்துகொண்டால்   கொண்டால்  அவர்களது உரையாடல் பிரஞ்சு  மொழியிலேயே அமைந்திருக்கும். இதே போல இரண்டு ஆங்கில  நாட்டவர் சந்தித்து கொண்டால்  அவர்கள் உரையாடல் ஆங்கில மொழியிலேயே   அமைந்திருக்கும். ஆனால் எமது தமிழர்கள் சந்தித்து கொண்டால் மட்டும் அம்மாடி பிழையோ சரியோ நாலு வார்த்தை ஆங்கிலத்தில்  கதைத்தால் தான் அவர்களுக்கு அன்று நித்திரையே வரும்.

அண்மையில் என் நண்பனின் உறவினர் வீட்டுக்கு போயிருந்தேன் 
நானும் நண்பனும் வீட்டுக்குள் நுழையும் போது  உள்ளே தொலைக்காட்சியில் தீபம்(தமிழ்தொலைக்காட்சி) வடிவேலுவின் காமெடிக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது என் நண்பனுடைய  உறவினர்  அவருடைய பதினொரு வயது மகளும் எட்டு வயது மகனும் வாய்விட்டு சிரித்து அதை ரசித்துக்கொண்டு இருந்தார்கள்.   எங்களை  கண்டதும் எழுந்து வரவேற்ற அந்த உறவு என்னிடம்   தம்பி இந்த பிள்ளையல் தமிழ் ரீவியே பாக்குதுவள்  இல்ல  
ஒரே  பிரஞ்சு டீவி தான்,  இப்போ கூட பிரஞ்சு டீவில படம்தான்
பாத்தோண்டு இருந்துவள் நான்தான் செய்தி பாப்போம் எண்டு தீபத்துக்கு
மாத்தினான் என்று சொல்லியே வாறே அவர் மகளின் கைகளில் இருந்த
ரிமோட்டை புடுங்கி பிரஞ்சு சானல் ஒன்றில் மாற்றி விட்டார்,  ரசித்து பார்த்துகொண்டு இருந்த நிகழ்ச்சி மாற்றப்பட்டதின் அதிர்ப்ப்தி அந்த ரெண்டு குழந்தைகளினதும் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. 
எங்களுடன் தமிழில் உரையாடியே படியே தன குழந்தைகளுடன் பிரஞ்சில்
உரையாடிக்கொண்டு இருந்தார், அவரின் பிரஞ்சு(!) உச்சரிப்பை வைத்தே அவர் பிரஞ்சு அறிவு எத்தகையது என்று என்னால் உணரும்படி இருந்தது.  சிறிது நேரத்தில் அந்த குழந்தைகள் எழுந்து தங்கள் அறைகளுக்கே சென்று விட்டது ஆனால் அவர் பந்த பேச்சு மட்டும் செல்லவே இல்லை.
தொலைக்காட்சியில் போய்கொண்டு இருந்த பிரஞ்சு படத்தின் சிறு சிறு
மொக்கை நகைசுவைக்காட்சிகெல்லாம் விழுந்து விழுந்து சிரித்து (அவருக்கு பிரஞ்சு நல்லாதெரியுமாம்) கடுப்பை கிளப்பி கொண்டு ருந்தார்,  எனக்கு ஏன்டா வந்தோம் என்று ஆகிவிட்டது.  இது ஒரு சின்ன உதாரணம் இவரைப்போன்றுதான் இன்றைய வெளிநாடு வாழ் தமிழர்கள்
பெரும்பாலானோர்  இருக்கிறார்கள்.

தமிழை வளர்க வேண்டும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கின்றோம். ஏன் தமிழர்களிடையே ஆங்கிலத்தை பேசி ஆங்கிலேயர்களுக்கு அடிமை பட்டு இருப்பதை விரும்புகிறிர்கள்..? ஏன் இந்த பகட்டு வாழ்க்கை..? உங்களால் முடிந்த வரை தமிழில் உரையாடுங்கள் தவிர்க்க முடியாத இடங்களில் மட்டும் ஆங்கிலத்தில் பேசுங்கள். ஏன் இந்த போலி வாழ்க்கை..? நீங்கள் இறந்தால் யாரும் FATHER என்றோ MOTHER என்றோ அழ போவதில்லை.  வெள்ளைக்காரனின் பிள்ளை பிறக்கும் பொது கூட அம்மா என்று தான் பிறக்கிறது. மம்மி என்று பிறப்பதில்லை. ஏன் இங்கிலாந்தில் இருக்கும் மாடு கூட அம்மா என்று தான் கதறுகின்றது.  நீங்க ஏனைய்யா அம்மி மம்மி எண்டு கொண்டு திரிகிறீர்கள்..? புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் பெற்றோர்களின் பிள்ளைகள் தமிழை பேச மறுத்தலோ  அல்லது தமிழை பேச தெரியாததோ அந்த பிள்ளையின் தவறு இல்லை, அது அந்த பெற்றோரின் தவறு   தமிழை  வளர்க வேண்டும் என்று உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு தமிழரின் வரலாறு பற்றியும் தமிழரின் கலாசாரம் பற்றியும் தமிழ் மொழியின் சிறப்பு பற்றியும் நீங்களே ஆசிரியராய் இருந்து கற்று கொடுங்கள். அப்பிடி இல்லாவிடின் தயவு செய்து நீங்க தமிழர்கள் என்று கூற வேண்டாம். தமிழை தெரியாதவன் தமிழனாக இருந்து எவ்வித  பயனும்  இல்லை

பிரான்ஸ்   இங்கிலாந்து   கனடா  ஜெர்மனி   சுவிஸ்  என்று எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் இருக்கிறார்களோ அந்தந்த  நாட்டு மொழிகள் கதைத்தால் தங்களுக்கு கெளரவமாம் எண்டு சொல்லிக்கொண்டு திரியும் இவர்களுக்கு ஒரு பாடலை நினைவு படத்தலாம் எண்டு நினைக்கிறன்..
"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா 
 அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா"
 
இந்த பாடலில் குறிப்பிடுவதை போல இந்த உலகத்தில் பேசும் மொழிகளில் மன உணர்ச்சியை வெளிப்படுத்தும் சொற்கள் இருக்கும் ஒரே ஒரு மொழி தமிழ் மொழி தான். அதை மறந்து விட்டு நானுறு   ஆண்டுகளுக்கு முன் வந்த ஆங்கிலேயரின் மொழியினை கதைக்கும் உங்களை தமிழில் என்ன வார்த்தை கொண்டு பேசுவது..???  வேண்டாம் ஏன் தமிழை கதைக்க மறுக்கும் உங்களை தமிழில் பேசி தமிழை அவமானப் படுத்த விரும்பவில்லை என்றோ ஒரு நாள் நீங்கள் வருந்தித் திருந்துவீர்கள். அன்றே உங்களை தமிழ்த் தாய் மன்னிப்பாள்.

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - 
என்றன் உடல்சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் 
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டு.


டிஸ்கி : இது நான் எழுதிய பதிவு அல்ல,  இப்பதிவில் சில மட்டும் நான் எழுதி சில திருத்தங்கள் மட்டுமே செய்து உள்ளேன்,  இப்பதிவு
லண்டனில் இருக்கும் என் தம்பியின் நண்பன் "யதுர்சன்" எழுதி 
என் இமெயிலுக்கு  அனுப்பியதை இங்கு பிரசுரித்து உள்ளேன்
"அவரின் இந்த கோவம் தமிழை நேசிக்கும் என்னைப்போன்றவர்களுக்கும் இருப்பதுதான்"

புதன், ஜூன் 22, 2011

இன்று ஒரு தேவ(யானி)தைக்கு பிறந்த நாள்.. ஒரு ரசிகனின் குறிப்பு.

22.06  இன்று,  காதலுக்கு மரியாதை கொடுத்த காதல் தேவதை
தேவயானியின்    பிறந்த நாள். தேவயானியை எனக்கு எனது 8 வயதில் இருந்து புடிக்கும் அதாவது 1995 ல் இருந்து அவருடைய தீவிர ரசிகன் நான்.  1995 வன்னியில் இருந்து அம்மாவுடன் கொழும்பு வந்த போது கொழும்பு தியேட்டரில் பார்த்த முதல் தேவயானியின் திரைப்படம் கல்லூரி வாசல்,  அத்திரைப்படத்தில் ஹீரோயின் பூஜா பத்ராவாக இருந்தபோதும் கொஞ்ச நேரமே வந்து அஜித்தை உருகி உருகி காதல் செய்து இறந்து போகும் தேவயானியை பார்த்ததுமே புடித்து விட்டது எனக்கு, அப்போது தேவயானி என்றொரு நடிகை இருப்பதே பலருக்கு தெரியாது அதன் பின் சில மாதங்களின் பின் வெளிவந்த மெகாஹிட் திரைப்படமான காதல் கோட்டையில் அதே அஜித்துக்கு ஜோடி  அதே   தேவயானிதான்,  காதல் கோட்டை திரைப்படத்தைப்பற்றி சொல்லவே தேவை இல்லை அத்திரைப்படம் பார்த்தபின் மனசுக்குள் நங்கூரமிட்டு நிரந்தரமா இடம் புடித்து விட்டார் தேவயாணி , என் மனசில் மட்டுமா இடம் பிடித்தார் அத்திரைப்படத்தின் பின் தமிழ் சினிமா ரசிகர்கள் அத்தனை பேர் மனங்களிலும் இடம் புடித்து விட்டார்.  குறிப்பாக அப்போது தமிழ்சினிமாவில் தேவயானி அலையே பலமாக  வீசிக்கொண்டு இருந்தது.

தேவயானியை எனக்கு பிடிப்பதர்க்கு அவருடைய அசரடிக்கும் ஹோம்லி அழகு மட்டும் காரணம் அல்ல இன்னொரு சுவையான காரணமும் உண்டு. வன்னியில் புலிகளின் ஆட்சியின் கீழ் வாழ்தவர்கள் நாங்கள்.  அங்கு வரும் இந்திய தமிழ் திரைப்படங்களை முதலில் அவர்கள் பார்த்து அதில் வரும் ஆபாச காட்சிகளை (இடுப்பு தெரிந்தால் கூட அது  ஆபாச   காட்சிதான்)  வெட்டி எறிந்து தணிக்கை செய்த பின்னரே எங்கள் ஊர் தியேட்டர்களில் ஓடும் அத்திரைப்படங்கள் சில நேரங்களில் ஆங்கில திரைப்படங்கள் போல் 1 மணித்தியாலயம் 30 நிமிடங்கள் மட்டுமே ஓடினால் கூட ஆச்சரியம் தான்.  அப்படிப்பட்ட சூழ் நிலையில் அப்போது தமிழ்சினிமாவில் இருந்த ரம்பா மந்த்ரா வகையறாக்கள் மத்தியில் தேவயானியின் கிளாமர் இல்லா நடிப்புக்கு அங்கு ஒரு தனி மரியாதை இருந்ததும் எனக்கு அவரை புடிப்பதர்க்கு ஒரு காரணம் ஆகி விட்டது.  அந்தகாலகட்டங்களில் அப்பாவின் வேலை மாற்றத்தால் நாங்கள் வன்னியை விட்டு    வவுனியாவில் வந்து குடியமர்ந்த பின்  தமிழ்  சினிமா  இன்னும்  எனக்கு  நெருக்கமாகி   தேவயானியின்  படங்கள்  அன்றி   அவரை பற்றிய செய்திகள் பேட்டிகள்  போட்டோக்கள் என்று தேவயாணி சம்மந்தமான எல்லா  கலக்ஷனும்  சேர்க்க தொடங்கி  விட்டேன் அவை   இப்போதும் என்னிடம்  ஏராளம் உண்டு.  பாடசாலை நாட்களில் நான் அவருடைய எவ்வளவு  தீவிர ரசிகன் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம், என்னுடைய பாடசாலை நண்பர்கள் ஆசிரியர்கள் இப்போது கூட என்னை ஜானி என்றுதான் அழைப்பார்கள் (தேவயானியை சுருக்கி). 

16   வருடங்கள்  உருண்டோடி விட்டன, தேவயானிக்கு பின் மந்த்ரா தொடங்கி சிம்ரன் ஜோதிகாவில் இருந்து திரிஷா நயன்தாரா இப்போது ஹன்சிகா வரை எத்தனையோ பேர் வந்தும் என் மனசில் தேவயானிக்கு கொடுத்த சிம்மாசனத்தை யாராலும் கைப்பற்ற முடியவில்லை. இனியும் யாராவது கைப்பற்றுவார்கள் என்ற நம்பிகையும் இல்லை, தேவயானியின் 
அழகுக்கும் அப்போது அவருக்கு இருந்த செல்வாக்குக்கும் அவர்  நினைத்து இருந்தால் ஒரு கோடிஸ்வரர் மகனையோ அல்லது ஒரு
தொழிலதிபரையோ  வளைத்துப்போட்டுக்கொண்டு ஒரு குளிர் நாட்டில் செட்டில் ஆகி இருக்கலாம் ஆனால்  தன்னை விட மிக சாதாரமான தன்  பட இயைக்குனர் தன் மேல் வைத்த உண்மையான காதலை  புரிந்து  எந்த  எதிர்பார்ப்புகளும் இன்றி அவரை காதலித்து அந்த காதலில் கடைசிவரை
உருதியாக நின்று  பல எதிர்ப்புக்களை மீறி அவரையே திருமணம் செய்துகொண்டார்.  தேவயானியின் காதல் திருமணம் அவருடைய பெற்றோருக்கு மறக்க முடியாத மன வலி இன்று வரை,  ஆனால் தேவயானிக்கு  அவர் ரசிகர் மனங்களில் மட்டும் அல்ல அவர் ரசிகர் இல்லதவர் மனங்களிலும் இன்றுவரை ஒரு அசைக்க முடியாத நிரந்தர நன்மதிப்பை கொடுத்துவிட்டு போய் விட்டது அத்திருமணம்.  தேவயானியின் ரகசிய திருமணதின் போது அத்தனை தமிழ் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இவர்கள் திருமணந்தான் தலைப்பு செய்தி அதுமட்டும் அல்ல பல மீடியாக்கள் வெளிப்படையாகவே தேவயானியின் கணவர் அவருக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவர் அல்ல ஆகவே இத் திருமணம் ஒரு வருடம் தாக்கு பிடித்தாலே அதிசயம் என்று நக்கல் விமர்சனம் செய்தன (அப்போது பார்த்தீபன் - சீதா, கமல் - சரிதா, விவகாரத்து கேட்டு கோட் ஏறிய நேரம் வேறு).  ஆனால் அதையேல்லாம் பொய்ப்பித்து இனிய இல்லற வாழ்க்கையில் இரண்டு குட்டி தேவதைகளை பெற்றெடுத்து அண்மையில் பத்தாவது ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடினார்கள் இந்த நட்சத்திர தம்பதிகள்.



இனி தேவயானியை பற்றி சில ருசிகர  தகவல்கள். 

முதல் படத்திலையே ஹீரோயினாக அறிமுகமாகி காணாமல் போகும் நடிகைகள் மத்தியில் தமிழில் துக்கடா கவர்ச்சி (தொட்டாசிணுங்கி , சிவசக்தி ) வேடங்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் போராடி தன் தனி திறமையால் முன்னேறி முதன்மை நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தேவயானி.

தேவயானியின் அப்பா மும்பாய் என்றாலும் தாய் ஒரு மலையாளி, தேவயானிக்கு இரண்டு சகோதரர்கள் அதில் நகுல் இப்போது பிரபல நடிகர், அவருடைய அடுத்த தம்பி மயூர் புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தேவயானியின் காதல் திருமணம் தமிழ் சினிமாவில் பிரபலம், காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பி அவரை வீட்டுகாவலில் வைத்த போது அந்த கட்டுகாவலை மீறி நடுஇரவில் கேட் ஏறிக்குதித்து தப்பியோடி இயக்குனர் இராஜகுமாரனை காதல் திருமணம் செய்துகொண்டார்.

தேவயானி இராஜகுமாரன் தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என இரண்டு பெண் குழந்தைகள்.

தேவயானி 22-06-1974 பிறந்தவர், இப்போது அவருக்கு 37 வயசாகிறது, ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் இன்னும் பழைய தோற்றத்துடனே அசரடிக்கும் அழகுடன் இருப்பதற்க்கு தன் மனசுதான் காரணம் என்பார்,

ந்த பிரச்சனையாக இருந்தாலும் நான் அதற்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆக கூடியது 5 நிமிஷம் தான், இதுவே நான் என்றும் இளமையாகவும் ஹப்பியாகவும் இருக்க காரணம், இது கடந்த ஆணந்த விகடனில் தேவயானி சொன்னது.

தேவயானியின் மொழி ஹிந்தியாக இருந்தாலும் இப்போது தமிழ் சரலமாக பேசுவார், தன் பிள்ளைகளுக்கு தமிழில் பாடங்கள் சொல்லி கொடுக்கும் அளவுக்கு தன் தமிழ் அறிவை வளர்த்துள்ளார்.

தேவயானி இரவில் படுக்கைக்கு போகும் முன் தன் இரண்டு குழந்தைகளுக்கும் ஏதாவது ஒரு புத்தகத்தை படித்துகாட்டுவது அவர் வழக்கம், தன் குழந்தைகளுக்கு வாசிப்பு திறனை வளர்க்க அது உதவும் என அதற்க்கு காரணம் சொல்லுவார்.

தேவயானியின் காதல் திருமணத்தால் உடைந்த அவரது குடும்பம் பல வருடங்களின் பின் தேவயானியின் இரண்டாவது குழந்தை பிரியங்காவின் வருகையின் பின்தான் ஒன்று சேர்ந்தது.

தேவயானிக்கு பிடித்த நடிகர் கமலஹாசன்,
பிடித்த நடிகை சிறிதேவி.
தேவயானிக்கு பிடித்த திரைப்படம் சாந்தி ( சிறிதேவி நடித்த ஹிந்திதிரைப்படம்).

தேவயானியுடன் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகர்கள்
அஜித்குமார் & சரத்குமார்.

தேவயானியை வைத்து அதிக திரைப்படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம் அவர் இயக்கிய பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்க்கும், நிலவே முகம் காட்டு என அத்தனை ஹிட் திரைப்படங்களிலும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்தவர்.

தேவயானி நடித்த முதல் திரைப்படங்கள்.
ஹிந்தி- கோயல்,
மலையாளம்- காதில் ஒரு கின்னாரம்,
தமிழ்- தொட்டாச்சிணுங்கி,
தெலுங்கு- சுஸ்வாகதம்,
பெங்காளி- துஸோர் கோ துளி.

மிழ் நாடு அரசின் கலைமாமணி விருது மட்டும் அல்ல சிறந்த நடிகைக்கான விருதையும் மூன்று முறை பெற்று இருக்கிறார், காதல் கோட்டை, சூரியவம்சம், பாரதி ஆகிய திரைப்படங்களில் நடித்தமைக்காக.

பெரிய திரையை விட்டு சின்னத்திரைக்கு வந்து அங்கையும் தன் திறமையை நிலை நாட்டி இப்போது சின்னத்திரையில் நொ 1 நடிகையாக திகழ்கிறார். தமிழ் சினிமாவில் மதிக்கப்பட்ட தினகரன் விருது விழாவில் தேவயானிக்கு நியூ திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த குணச்சித்திர நடிகைகான விருது கிடைத்தது அப்போது அவரை மேடைக்கு அழைக்கும் போது தமிழ் சினிமாவின் அத்தனை விஜபிகள் முன் நிலையில் "தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார்" என அழைத்தது அப்போதைய
கைலைட் செய்தி.

சின்னத்திரையில் தேவயாணி "கோலங்கள்" என்ற ஒரே ஒரு சீரியலுக்காக மூன்றுமுறை சிறந்த நடிகைக்கான விருதை வென்றவர்.

தேவயானியின் கோலங்கள் சீரியல் 6 வருடங்களை தாண்டியும் முன்னனி சீரியலாக ஓடி சாதனை படைத்தது, தமிழ் சீரியல் வரலாற்றில் இது எந்த சீரியலும் செய்யாத சாதனை.

திரையில் தேவயானிக்கு ஏற்ற சிறந்த ஜோடி அஜித்குமார்தான்,
இது தேவயானியின் தம்பி நடிகர் நகுல் சொன்னது.

சின்னத்திரையை ஆட்டிப்படைக்கும் மஹா சக்தி இரண்டு, ஒன்று ராதிகா மற்றொன்று தேவயானி,  இது அண்மையில் நடிகர் ராதாரவி சொன்னது.

மிழ் சினிமா உலகில் ஒரு நடிகை முன்னனியில் இருக்கும் போதும் சரி சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் போது சரி எப்போது கேட்டாலும் சரி அந்நடிகையை பற்றி பெருமைபட்டு அந்த நடிகைக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார்கள் என்றால் அது எனக்கு தெரிந்து தேவயானிக்கு மட்டும் தான் இது அன்மையில் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மதன்பாபு சொன்னது.

ந்த புகழ் பணம் வாழ்க்கை எல்லாமே அகத்தியன் சார் தந்தது என்று தேவயாணி அடிக்கடி சொல்லிக்கொள்ளுவார்,  ஒரே ஒரு  படந்தின் மூலம் தேவயானியை புகழின் உச்சிக்கே கொண்டு சென்ற காதல் கோட்டை திரைப்படத்தின் இயக்குனர்தான் அகத்தியன்.


மிழில் அஜித் விஜய் விக்ரம் பிரஷாந்த் என்று  இளைய நடிகர்கள் தொடங்கி விஜய்காந்த் கமல் சரத்குமார் பார்த்தீபன் சத்தியராஜ் என மூத்த நடிகர்கள் வரை அத்தனை முன்னனி நடிகர்களுடனும் ஜோடி போட்டுவிட்டார் தேவயானி,  ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜனியுடன் மட்டும் இன்னும் நடிக்கவே இல்லை என அடிக்கடி பீல் பண்ணுவார்.

சூப்பர் ஸ்டார் ரஜனியுடன் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி பின் சில பிரச்சனைகளால் அப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார்,  அத்திரைப்படம் "அருணாச்சலம்".

தேவயானியின் நெருங்கிய தோழிகள் இரண்டு பேர்.
அவர்கள் நடிகை ரோஜா,  எழுத்தாளர் ஆர்.மணிமாலா.

தேவயாணி தமிழ்சினிமாவில் முக்கியமான ஒரு நடிகையாக இருந்த காலகட்டத்தில் தேவயானியை மட்டுமே நம்பி தயாராகி வெளிவந்து 
தேவயானியின் நடிப்பு பரவலாக பாராட்டப்பட்ட  திரைப்படங்களில்
முக்கியமானவை, செந்தூரம், சொர்ணமுகி,  குருவம்மா.

மிழில் மெஹா ஹிட்டாகி எல்லோருடைய பாராட்டையும் பெற்ற "பொற்காலம்"   "லவ் டுடே" ஆகிய திரைப்படங்களின் தெலுங்கு பதிப்பின் ஹீரோயினி தேவயானிதான்.

னி பிந்நாள்  ல்வாழ்த்துக்ள்.

ஞாயிறு, ஜூன் 12, 2011

ஒரு தடவைதான் காதல் வருமா..?

காதல் என்பது  ஒரு தடவைதான் வரும் அது ஒருத்தர் மேல தான் வரும் இது காதலித்துக்கொண்டு இருப்பவர்கள் அடிக்கடி சொல்லிக்கொள்வது. இது உண்மைதானா என்று உற்றுக்கவனித்தால் பதில் என்னவோ வெறும் பூச்சியம் தான். அதுவும் ஆண்கள் விசயத்தில் ஒரு தடவைதான் காதல் வரும் என்ற விடயம் எல்லாம் மொக்கை  காமெடி மேட்டர், குறிப்பாக சொல்ல போனால் ஒரு தடவை மட்டும் காதலித்த ஒரு பெண்ணை மட்டும்  காதலித்த அந்த என் சக ஆண்மகனை நான் இன்னும் என் வாழ்க்கையில் சந்திக்கவே இல்லை. 

பொதுவாகவே ஆண்களுக்கு மீசை அரும்பும் முன்னே காதல் அரும்பி விடுகிறது, ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களின் காதல் உணர்வு மட்டும் மாறாமலே இருக்குறது ஆனால் காதலிக்கும் பெண்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள், அதற்க்கு அவர்கள் மட்டும் காரணம் இல்லையே அவர்கள் காதலிக்கும் சில பெண்கள் அல்லது  சூழ்நிலை   இவை இரண்டுமே காரணம் ஆகிவிடுகிறது.   காதல்  தோல்விக்காக  உயிரை  மாய்த்துக்கொள்ள பெரும்பாலும் யாருமே தயாராக இருப்பது  இல்லை( காதலுக்காக   உயிரை  விடுமளவுக்கும்  ஒருசிலர்  இருக்கத்தான்  செய்கிறார்கள் ஆனால்  அதுதான்  அவர்களுக்கு  முதல்  காதலா  என்பது  சந்தேகமே )அப்படி அவர்கள் முடிவெடுக்காதர்க்கு பெரும்பாலும் அவர்கள் குடும்பமே காரணமாகிவிடுகிறது,  ஏனெனில் காதலிக்கும் போது எல்லோரும்  உண்மையாகத்தான்  காதலிக்கிறார்கள் ஆனால் எதிர்பாராமல் அங்கே பிரிவு வரும்போது உடைந்து நொருங்கி வாழ்க்கையை வெறுக்கும் அவர்களுக்கு மேலே தொடர்ந்து வாழ்வதற்கு அவர்களை சுற்றி உள்ள குடும்ப உறவுகள் காரணம் ஆகிவிடுகிறது,  உறவுகளுக்காக வாழ தொடன்கின்றவர்கள் நாளடைவில் இன்னொரு காதலில் விழுவதும் பின் அங்கேயும் தோல்வி வருவதும்,   இப்படி அவர்கள்   வாழ்வில்  காதலும்  தோல்வியும் தொடர்கதை ஆகிவிடுவதுதான் நிதர்சனமான உண்மை.

ருதடவை வந்தால்தான் அது காதல்..!  இது நம்மிடையே இருக்கும்
மகா  நடிகர்கள்  சொல்லி கேட்டு இருக்கிறேன். அப்போ நீங்க இப்போ
கல்யாணம் பண்ணிக்க போறது நீங்க முதல் காதலிச்ச பொண்ணையா
என்று கேட்டால் அவர்கள் உதட்டில் தெரியும் நமட்டு சிரிப்பே
அவர்கள் யோக்கியத்தைக் காட்டிகொடுத்து விடும். ஆணோ பெண்ணோ
ஒருதடவைதான் காதல் வரும்   நான் உன்னைமட்டும்தான் காதலிக்குறேன்
போன்ற வசனங்களை அவர்களின் பாட்டனரிடம் ஒரு நம்பகத்தன்மையை
ஏற்படுத்தவே பயன் படுத்துகிறார்கள்.  அவர்கள் சொல்லும் அந்த வசனங்களின்  உண்மைத் தன்மை என்ன என்பது அவர்களுக்கு நன்றகவே
தெரியும், 

பிரான்சில் எனக்கொரு நண்பன் இருக்கிறான் நட்பில் கூட இவ்வளவு பிரியத்தை வைக்க முடியுமா என என்னை நெகிழ வைப்பவன். அவனைப்போலவே அவன் பேசும் தமிழும் அழகாக இருக்கும்,   பிரான்சில் பிறந்து வளந்ததாளவோ என்னவோ அவன் தமிழுக்கும் நமிதா தமிழுக்கும் பெரிசாக வித்தியாசம் இல்லை.  ஒரு நாள் வந்து ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துவான் மச்சி இதுதாண்டா நான் கட்டிக்க போற பொண்ணு என்று உடனே நானும் ஹாய் சிஸ்டர் (வேறுவழி, அவ்வ..)  என்று என்னை
அறிமுகப்படுத்தி வைப்பேன், சில மாதங்களின் பின் இன்னொரு பொண்ணுடன் வந்து இவ என் உயிரடா இவ இல்லாட்டி செத்துடுவண்டா எண்டு உருகுவான் நானும் வரும் கடுப்பை எல்லாம் மனசுக்க அடக்கி வைச்சுக்கொண்டு ஹாய் சிஸ்டர் எண்டு பழைய  பல்லவியை பாடி என்னை அறிமுகப்படுத்தி வைப்பேன் ஆனால் என்ன பயன் இன்னும் சில மாதங்களின் பின் இன்னொரு பொண்ணுடன் வந்து நிப்பான்   அதே அசடு வழியும் புன்னகையுடன்.  மச்சான் இதுவரை மொத்தம் எத்தனை காதலடா உன் வாழ்கையில் என்று கேட்டால் இரண்டு கைவிரல்களையும் எண்ணி முடித்து கால்விரல்களுக்கு சென்றுவிடுவான்.

ன் நண்பனின் காதல்கதைகள் கொஞ்சம் முகச்சுழிப்பை ஏற்படுத்தினாலும்
இன்றைய  அவசரகால வாழ்க்கையில் பெரும்பாலரின் காதல்களும் கிட்டத்தட்ட
இதே நிலையில்தான் இருக்கிறது.   என் வாழ்க்கையில் கூட பல காதல்கள்
கடந்து வந்து இருக்குறேன் இதை எப்போதும் யாரிடமும் நான் மறைத்ததும் இல்லை இதை சொல்வதற்காக வருத்தப்பட்டதும் இல்லை.
உண்மைகள் எப்பவும் கசப்பாகத்தான் இருக்கும் ஆனால் அந்த உண்மைகளை பேசி உண்மையாக இருக்கும் போது கிடைக்கும் மன நிறைவு எத்தகையது என்று அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
ஒரு தடவைதான் காதலிக்க வேண்டும் அந்த முதல் காதலியைத்தான்
திருமணம் செய்யவேண்டும் என்றொரு நிலை வந்தால் இங்கே யாருமே   கல்யாணம் கட்ட முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. மொத்தத்தில் ஒரு தடவைதான் காதல் வரும் என்பது நம் தமிழ்  சினிமாவின்  நாயகன் நாயகிக்கு  மட்டுமே சாத்தியம்.

ஞாயிறு, ஜூன் 05, 2011

வயசு அதிகமான பெண்களை காதலிப்பது தப்பா..?

ண்களால் முதல் காதலை மறக்கவே முடியாது அதிலும் அந்த அறியா வயசில் வரும் பப்பி லவ் சான்ஸே இல்லை,  தயங்கி தயங்கி தங்களுடைய முதல் காதலை வெளியே சொல்லும் ஒரு சில ஆண்கள் கூட அதற்க்கு முன்னால் வரும் தங்கள் பப்பி லவ்வை மறந்து கூட வெளியே சொல்வது இல்லை, வெளியே சொன்னால் எங்கே இது பிஞ்சிலேயே பழுத்தது என்று சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தால்.
அதிலும் பல ஆண்களுக்கு பப்பி லவ் வருவதே  தங்களை விட வயது அதிகமான பெண்கள் மீதுதான்.

எனக்கும் சின்ன வயசில் இப்படி ஒரு காதல் வந்து இருக்கிறது, அவளுக்கு என்னை விட 4 வயது அதிகம், அவளை பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் அழகு என்று சொல்லலாம், அவள் எனக்கு சொந்த மச்சாளும் கூட,  நான் எங்கள் வீட்டில் தங்கியதை விட அவர்கள் வீட்டில் தங்கியதுதான் அதிகம். அவர்கள் வீட்டிலும் சரி எங்கள் வீட்டிலும் சரி எங்கள் ரெண்டு பேருக்கும் தான் திருமணம் செய்து வைக்க போவதாக சொல்லி எங்களைக் கிண்டல் பண்ணுவார்கள். நாங்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே சுத்தி திரிந்தாலும் இந்த திருமண விசயத்தைப்பற்றி எங்களுக்குள் பேசியதும் இல்லை மற்றவர்கள் பேசும் போது மறுத்ததும் இல்லை ஆனாலும் மனசுக்குள் ஒருவரை ஒருவர் நேசித்துக்கொண்டேதான் இருந்தோம், அதிலும் அவள் மேலான என் காதல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.  சில வருடங்களில் நடந்த யுத்தத்தின் காரணமான இடம்பெயர்வால் அவள் குடும்பமும் எங்கள் குடும்பமும் பிரிந்து விட்ட நிலையிலும் அவள் மேலான என் காதல் மட்டும் வளர்ந்து கொண்டேதான் இருந்தது.

சமீப காலத்தில் அவள் மேலான என் காதலை கிட்டத்தட்ட மறந்து விட்ட நிலையில்   "டேய் உன் மச்சாளுக்கு கல்யாணமாம்டா ..  பையன் வெளி நாட்டில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறானாம்" என்று என் உறவினர் ஒருவர்  சொன்ன போது மனசு வலித்தது இன்னும் மிச்ச சொச்சம் இருக்கும் அவள் மேலானா காதலையே   காட்டிக்கொடுத்தது.  

முடிந்து போன  என்னுடைய இந்த பழைய காதல் கதையை இப்போது என் நண்பர்கள் யாரிடமாவது சொன்னால் அவர்கள் கேக்கும் முதல் கேள்வி, டேய் லூசாடா நீ..! எப்புடிடா உன்னை விட 4 வயசு அதிகமான பெண்ணை காதலிச்ச..! என்றுதான். ஒரு ஆண் தன்னை விட 7, 8 வயது குறைந்த ஒரு பெண்ணை திருமணம் செய்யும் போது ஒரு பெண் ஏன் தன்னை விட வயது குறைந்த ஆணை திருமணம் செய்யக்கூடாது..! இது என் பதில் வாதமாக இருக்கும். அதற்க்கு அவர்கள் எப்போதுமே சரியான பதில் தந்ததே இல்லை, இங்கு வெளி நாட்டில் தன்னை விட வயது மூத்த பெண்களை ஆண்கள் சர்வசாதாரணமாக திருமணம் செய்துகொன்று சந்தோஷமாக வாழ்வதை பார்த்து இருக்கிறேன்,

ஆனால் நம் நாட்டில்தான் நாம் இத்தகைய திருமணங்களை ஆதிரிப்பது இல்லை, தப்பித்தவறி ஒரு சில திருமணங்கள் இப்படி நடந்து விட்டால் கூட அதை நம்மால் முடிந்தளவு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கேவலப்படுத்தி பேசுகின்றோம். தங்களை விட வயது அதிகமான பெண்களை மனசுக்குள்ளேயே காதலித்து சுற்றியிருப்பவர்களுக்கு பயந்து அதை வெளியே சொல்லாமல் இருக்கும் எத்தனையோ பேரை பார்த்து இருக்கிறேன், ஒருவிதத்தில் அவர்கள் மேல் பரிதாபம் வந்தாலும் அதிகமாக அவர்கள் கோழைத்தனம் மீது கோவம்தான் வருகிறது. நாம் வெளி நாட்டவர் போல் வாழவேண்டும் என்பது என் வாதம் அல்ல இந்த திருமண விசயத்தை அவர்களைப்போல் சர்வசாதாரணமாக எடுத்து ஏன் கடந்து போகக்கூடாது என்பதுதான் என் வாதம்.

அண்மையில் கூட ஒரு பத்திரிகையில் இப்படிப்பட்ட ஒரு திருமண செய்தி வந்து இருந்தது, அதற்க்கு வந்து இருந்த வாசகர் கருத்துரைகள் பெரும்பாலும் அவர்களை கேவலமாக சித்தரித்தே வந்து இருந்தது, அதிலும் ஒரு சில  வாசகர்கள் ஒரு படி மேலே போய் இத்தகைய திருமணம் செய்துகொண்ட சில பிரபல ஜோடிகளை குறிப்பாக "ஐஸ்வர்யா - தனுஷ்"  'ஐஸ்வர்யா ராய் - அபிஷேக்பச்சன்" போன்றவர்களையும்  மிகமோசமாக விமர்சித்திருந்தமை அவர்களுடைய ஊனமான மனசையே காட்டிகொடுத்தது. காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள் அது ஜாதி மதம் ஏழை பணக்காரன் என்று எதுவும் பார்ப்பது இல்லை அப்படி இருக்கையில் அது வயசை மட்டுமா பாக்க முடியும்..?   அதிலும் 40 வயது ஆண்  20 வயது பெண்ணை திருமணம் செய்தால் அதை சர்வசாதாரணமாக எடுக்கும் நம் அறிவுஜீவிகள் ஏன் ஒரு பெண் ஒரு சில வயது மட்டுமே குறைந்த ஆணைத்திருமணம் செய்தால் மட்டும் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து அந்த பெண்ணின் நடத்தையையே தப்பா பேசுகிறார்கள். இங்கே ஆண் செய்தது தவறு இல்லை என்றால் பெண் செய்தது மட்டும் எப்படி தவறாகும்..! 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...