ஞாயிறு, செப்டம்பர் 23, 2012

'வைகோ'வை புறக்கணிக்கும் 'நக்கீரன்'..


                                   வைகோ
த்தமில்லாமல் வைகோவை புறக்கணிக்க தொடங்கியுள்ளது நக்கீரன். வைகோவை பற்றிய செய்திகளோ படங்களோ தவறிக்கூட நக்கீரனில் வந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

நக்கீரனை யாராவது பகைத்தாலோ, அல்லது நக்கீரனுடன் ஒத்துப்போகாமல் விட்டாலோ எப்படி எல்லாம் கீழ் இறங்கி பழிவாங்குவார்கள் என்பதற்க்கு பல உதாரணங்கள் இருந்தாலும், முக்கியமான உதாரணம் ஜெயலலிதா.

MGR க்கு பின் மக்களிடையே அதிக கவர்ச்சி உடைய அரசியல் தலைவர் என்றால் அது ஜெயலலிதாவே தான். (இந்த கவர்ச்சியால்தான் ஜெயலலிதா இத்தனை தவறுகள் விட்ட பின்னும் ஆட்சியில் இருக்கிறார்) இதை இன்று வரை சரியாக கணித்து வைத்து இருப்பது ஜெயாவின் பரம எதிரி நக்கீரனே. இதனாலேயே ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ஜெயாவை பற்றியே செய்தி போட்டு கல்லா கட்டுகின்றது நக்கீரன். (இவர்களுக்கு அடுத்து கல்லா கட்ட உதவுவது பிரபாகரன்)
ஆரம்பத்தில் இப்படியான செய்திகளால் கடுப்பான ஜெயா, வீரப்பன் கேஸில் 'நக்கீரன்' கோபாலை தூக்கி உள்ளே போட அங்கே ஆரவாரமாய் ஆரம்பித்த இவர்கள் குடும்பிப்பிடி சண்டை 'மாட்டுக்கறி மாமி' என்று இன்றுவரை தொடர்கிறது.
'நக்கீரன்' கோபால்
ஆனால் என்ன.., இவர்கள் சண்டையில் யார் ஜெயித்தாலும் பலனை அனுபவிப்பது நக்கீரன் மட்டுமே. தங்கள் பத்திரிகை எப்போது எல்லாம் விற்பனையில் ஆட்டம் காண்கிறதோ அப்போது எல்லாம் ஜெயாவை கடுமையாக சீண்டி கோபப்படுத்தி அதன் பின் நடக்கும் கலவரத்தில் நக்கீரனுக்கு இலவச விளம்பரம் தேடிக்கொள்வது இவர்களின் வெற்றி ரகசியங்களில் ஒன்று.

பத்திரிகைகளுக்கு இருக்க வேண்டிய முக்கிய தகுதியே 'எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பத்திரிகைகள் எதிர்கட்சியாகவே இருக்க வேண்டும்' ஆனால் நக்கீரன் யார் ஆட்சியில் இருந்தாலும் ஜெயா ஆட்சியில் இருக்கும் நினைப்பிலேயே செய்தி போடும். கருணாநிதியை திட்டாமல் இதுவரை பத்திரிகை நடத்துவதற்க்கே இவர்களுக்கு பாராட்டு விழா எடுக்கணும்.. இவர்கள் பார்வையில் கருணாநிதி இதுவரை எந்த தவறும் விடாதவர். :))

இப்படியான பல புகழ்களை(!) எல்லாம் தன்னகத்தே கொண்ட நக்கீரன், இப்போ தன் கோப பார்வையை புறக்கணிப்பு மூலம் வைகோ மேல் திருப்பியுள்ளது. இதை எல்லாம் பார்க்கும் போது எங்க தாத்தா அடிக்கடி சொல்லும் "குளத்தோட கோவிச்சு கொண்டு ............ " என்ற பழமொழிதான் எனக்கு நினைவுக்கு வருகின்றது. :))

கடந்த தேர்தல் ஒன்றில் வைகோ பிரச்சாரத்துக்கு போகும் இடங்களில் எல்லாம் 'ஜீனியர் விகடனை' தயாநிதி மாறன் விலைக்கு வாங்கி விட்டார் ஆகவே அந்த பத்திரிகை செய்திகளை நம்பாதீர்கள் என்று விகடன் மேல் வீண்பழி சுமத்தினார், ஆனால் அதை விகடன் நேர்மையாக கையாண்டு அந்த செய்தி தவறு என்று நிரூபித்தது. அதன் பின் இன்று வரை கருணாநிதி ஜெயலலிதா போன்றவர்களின் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வைகோவுக்கும் கொடுத்து வருகிறது. எங்கேயும் வைகோவை பழிவாங்கி பழைய கணக்கை தீர்க்கவோ புறக்கணிக்கவோ இல்லை விகடன். இதுதான் ஒரு தரமான பத்திரிகைக்கு இருக்கக்கூடிய நேர்மை. இதுதான் பத்திரிகை தர்மமும் கூட.

அது சரி, இந்த நேர்மையை நக்கீரனிடம் எதிர்பார்ப்பது நம்ம தவறுதான். மளிகைக்கடையில் வேலை செய்தவர் எல்லாம் பத்திரிகை நடத்தினால் இப்படித்தான் இருக்கும்.

எது எப்படியே 'இதான் பிரச்சனை' என்று வைகோவோ நக்கீரனோ வாயை திறக்கும் மட்டும் அவர்களுக்குள் அப்படி என்னதான் பிரச்சனை என்று நமக்கு தெரிய போவது இல்லை. ஆனால்..... ஒரு மூத்த அரசியல்வாதியை புறக்கணிப்பதோ, தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை எல்லாம் பத்திரிகை மூலம் காட்டுவதோ, ஒரு நாட்டின் முதுகெலும்பான பத்திரிகைத்துறைக்கு பெருமை சேர்க்காது என்பதை நக்கீரனார் இனிமேலாவது உணரவேண்டும்.

வெள்ளி, செப்டம்பர் 14, 2012

ஊர் நினைவுகள்... (மறுபடியும் வந்துட்டோம் இல்ல..)

ரெம்ப பெரிய்ய்ய்..ய இடைவெளிகளுக்கு பின் மீண்டும் வலைப்பூ பக்கம் திரும்பி இருக்கோம்.
 இந்த இடைவெளிக்குள்ள வாழ்க்கையில் ரெம்ப பெரிய சந்தோஷங்கள் மாற்றங்கள் எல்லாம் நடந்திருக்கு.. அவை எல்லாத்தையும் இங்கே பகிர முடியாது என்பதால ஒரு சந்தோஷத்தை மட்டும் இங்கே பகிர்ந்துக்கிறேன்.

வவுனியா காட்டுக்குள்.. :))
என் சொந்த நாட்டிற்க்கு (இலங்கை) போயிட்டு வந்தோம் இல்ல :)) சின்ன வயசில் இலங்கையை விட்டு பிரிந்து வந்த பின் இப்போழுதுதான் முதல் முதலாய் இலங்கை போயிருந்தேன்.

அங்கு நின்ற ஒரு மாசம் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அந்த ஒரு மாசத்தில் கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, ஒட்டிசுட்டான், கிளி நெச்சி, முல்லைத்தீவு, நெடுங்கேணி என்று பார்க்க ஆசைப்பட்ட அத்தனை இடங்களையும் பார்த்தாச்சு.
 
முல்லைத்தீவு கடற்கரையில் "அவங்களோடு.." :))
முல்லைத்தீவு கடற்கரையில் குளித்துவிட்டு அப்படியே நந்திக்கடற்கரையோரம் நடந்த போது ஏதேதோ நினைவுகளில் மனசு கனத்துப்போய்விட்டது :((

அப்புறம் நெடுங்கேணி...
ஆச்சரியம் தான்.. இறுதியாக இருந்து வந்த வவுனியாவில் உள்ள இடங்களே மறந்துவிட்ட நிலையில்.. பிறந்து, 8 வயது வரையே வாழ்ந்த நெடுங்கேணியில் ஒவ்வொரு இடமும் நினைவில்...!

"அப்பா இவ்வடத்த ஒரு பெரிய புளியமரம் நின்றதல்லோ இப்போ கானல்ல.." "இந்த கொண்டை மரத்துக்கு கீழதான நாதம்பிரான் கோயில் இருந்திச்சு.. இப்போ மரம் மட்டும் நிக்குது..!" "இதானே ராஜலிங்கம் மாமா இருந்த வீடு.. சுவருகள் மட்டும் இன்னும் உடையாம இருக்குப்பா" "என்னப்பா இது..! முந்தி என் ப்ரெண்டுட்ட எல்லாம் எவ்ளோ பெருமையா சொல்லி கூட்டிக்கொண்டு வந்தெல்லாம் காட்டி இருக்கேன் எங்க காணிக்கேயே குளம் (ஆறு) இருக்கென்று.. இப்போ என்னப்பா இப்படி மணல்மேடா இருக்கு" இப்படி கேள்விமேல் கேள்வி கேட்டு துளைக்கும் என்னை ஆச்சரியமாய் பார்த்தபடி கனத்த மனத்துடன் பதில் சொல்லிக்கொண்டே வந்தார் அப்பா.
 
எங்கள் வீடு இருந்த இடம்.. இந்த மாமரம் துஷி நட்டது.. :))
எங்கள் வீடு இருந்த காணி..! என் மனசை ரெம்ப வேதனை படுத்திய இடம் அது :(( கேற்றில் ராட்ஷச உருவில் ஒரு கூழா மரம் அதன் கீழ் எங்கள் குல தெய்வம் வைரவர். பெரிய வீடு.. அதை சுற்றிய பூஞ்சோலை (இவை அம்மாவின் உயிர்) தென்னை,தேக்கு,விளாமரம்,மாமரம் என்று தேவையான எல்லாமே காணிக்குள் இருக்கும் (வன்னியில் பெரும்பாளும் எல்லோர் வீடுகளும் இப்படியே).
எங்கள் குலதெய்வம் வைரவர் :((
இன்று....
வேலிகள் அற்று அலங்கோலமாய்...
காணிக்குள் ஒரு விளாமரம் ஒரு மாமரம் மட்டுமே.. :(( உன்னிபற்றைகளுக்குள் அவை மட்டுமே கம்பீரமாய் நிக்க கேற்றடியில் கூழாமரமும் அதன் கீழ் சிறு சீமந்து கொட்டினுள் சருகுகளுக்குள் எங்கள் குல தெய்வம் வைரவர் (சீமந்து கொட்டில் போருக்கு பின் அண்ணா கட்டியது).

வவுனியாவில் இருந்து வேன் பிடித்து குடும்பத்தில் எல்லோரும் போயிருந்தோம்...
ரெம்ப நேரமாகியும் யாருக்குமே காணியை விட்டு வர மனமே இல்லை. நான் வருவேன் என்று தெரிந்தோ என்னவோ மாமரம், விளாத்தி, கூளாமரம் மூன்றும் பழங்களால் நிறைந்து போயிருந்தது.. மரங்களில் ஏறி பறித்து அங்கேயே இருந்து சாப்பிட்டு மிகுதியை வவுனியாவுக்கு கொண்டுவந்து பக்கத்து வீட்டுக்காரருக்கு எல்லாம் கொடுத்து ஃப்ராண்ஸ் வரை கொண்டு வந்தேன் :))

காணிக்குள் மரத்தில் ஏறி, ஒருவரை ஒருவர் துரத்தி உன்னிப்பற்றைகளுக்குள் ஓடி.. நானும் தம்பியும் தங்கச்சியும் பண்ணிய அட்டகாசங்கள் சமாளிக்க மிடியாமல் அப்பாவும் அம்மாவும்தான் தடுமாறிப்போனார்கள். நாம போட்ட சத்தத்தில் அயலவர்கள் எல்லாம் வந்து என்னை தம்பியை தங்கச்சியை அடையாளம் கண்டு பெயர் சொல்லி கட்டிதழுவி ஆனந்தகண்ணீர் விட்டது ஆச்சரியமான நெகிழ்ச்சி.
 
மணி படித்த பாடசாலை.. ( மீயும் இங்கேதான் மூன்றாம் வகுப்பு வரை. பெருமை.. பெருமை lol)
இறுதியில் இருட்ட தொடங்கியும் யாருக்கும் கிளம்ப மனசே இல்லை.. பிரிய மனமே இல்லாமல் கலங்கிய கண்களோடு வேனுக்குள் ஏறி புறப்பட்டோம். வரும் போது பாட்டு பேச்சு என்று அல்லோலப்பட்ட வேன் திரும்பும் போது அமைதியாகவே இருந்தது. யாரும் யாருடனும் பேச வில்லை.. ஒவ்வொருவர் மனசிலும் கனமான நினைவுகள்.

எனக்கு ரெம்ப பிடித்த பதிவர்களில் மிக முக்கியமானவர்கள் 'மருதமூரான்'அண்ணாவும் 'ஜீ'அண்ணாவும். இருவரையும் கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஹுமும்.. நாட்கள் படு வேகமாய் நகர்ந்ததில் அவர்களை சந்திக்கவே முடியவில்லை. அப்புறம் நம்ம தோஸ்த் ராஜ், மைந்தன், வரோ, சுதாண்ணா என்று யாரையுமே பார்க்க முடியவில்லை :((

பதிவர், நன்பன் என்று சந்தித்தது என்றால்.. நம்ம 'சிறகுகள்' மதுரனை மட்டுமே. (மதுரனை சந்திக்காமல் வந்தால் அப்புறம் ஃப்ராண்ஸுக்கு ஆள் அனுப்பியே போட்டுத்தள்ளிருவேன் என்று மிரட்டி வைத்திருந்தான்.. ஆவ்வ்வ்).

முன்பே இலங்கைக்கு போய் வரும் பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அதிக விருப்பம் இல்லாததால் இலங்கை பயணத்தை தவிர்த்துக்கொண்டே வந்தேன். இப்பொழுது இலங்கை சென்று வந்ததில் இருந்து இவ்ளோ நாளா அங்கே போகாமல் மிஸ் பண்ணிவிட்டேனே என்று கவளையாய் இருந்திச்சு. இப்போ முடிவே பண்ணியாச்சு.. இனி ஒவ்வொரு ஆண்டு விடுமுறையையும் இலங்கையில்தான் கழிப்பது என்று.
 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...