ஞாயிறு, அக்டோபர் 02, 2011

அத்தை பெத்த அழகிய ராட்சஷிகள்



அத்தை பெத்த அழகு ராட்சஸிகளின் அட்டகாசங்கள் இருக்கே... அய்யய்யோ தாங்க முடியாது. அத்தை பொண்ணுங்க கூட்டம் கூட்டமாய் இருக்க எல்லாம் ஒரு மச்சம் வேணுமிய்யா.. அந்த விசயத்தில் நமக்கு உடம்பெல்லாம் மச்சம் போலஇருக்கு. வன்னியில் இருந்த காலத்திலும் சரி வெளிநாடு வந்த பின்னும் சரி எப்போதுமே நம்மல சுத்தி ஒளிவட்டம் போல ஒரு மச்சாள்ஸ் வட்டம் சுத்தீட்டே இருக்கும். சினிமாவுக்கோ பீச்சுக்கோ நாம தனி ஒரு ஆம்பிளையா மச்சாள்ஸ்கூட்டத்தோடு அடிபட்டு குத்துப்பட்டுக்கொண்டு போகும் போது வயசு பசங்க எல்லாம் நம்மல குறுகுறு என்று பொறாமையா பார்க்கும் போது நமக்கு சந்தோஷத்தில் ஆகாயத்தில் அப்படியே விர்ர்..ண்னு பறக்கிற ஒரு பீலிங்.ஆனா பாருங்க இவங்களால சந்தோஷமாய் இருந்ததை விட இவங்ககிட்ட மாட்டி நொந்து நூடில்ஸ்சான சம்பவங்களும் அதிகம்.

வன்னியில் இருக்கும் போது நம்ம வீட்டுக்கு பக்கத்திலேயே ரஸி-ஜனா என்றுரெண்டு மச்சாள்ஸ் இருந்தாங்க. எங்களுக்குள்ளே ஒரு முக்கோண லவ் ஓடிட்டேஇருந்திச்சு.இதிலே என்ன கொடுமை என்றா ரஸி மச்சாளுக்கு 14 வயசு ஜனா மச்சாளுக்கு 9 வயசு நமக்கு 7 வயசு. அடப்பாவி என்று வாய பிளக்காம மிச்சத்தை கேளுங்க.. இதில் ஜனா மச்சாள் அழகி என்றாலும் சொஞ்சம் கறுப்பாய் இருப்பாள்.  ஆனா ரஸி மச்சாள் வெள்ளைக்காரி கலரில் செம லுக்கா அழகா இருப்பாள் அதால அவ மேலேநமக்கு செம லவ்வு. ஆனா அவ பெரிய பொண்ணு கொஞ்சம் விவரம் தெரியும் என்பதாலஇதெல்லாம் நடக்காதுப்பா என்று தெரிந்தாலும் நம்ம மனசு கஸ்ரப்படக்கூடாது என்பதற்க்காக பார்க்கும் போதெல்லாம் ஜ லவ் யூடா.. செல்லம்டா.. என்று அவகன்னத்தை கிள்ளியும் கிஸ் கொடுத்தும் நம்மல உசுப்பேற்ற நாமளும் பெக்குமாதிரி அவ நமக்குத்தான் என்ற மமதையில் பருத்திவீரன் கார்த்தி மாதிரி ஊருக்க திரிஞ்சுட்டு இருந்தோம்.

இதுக்குள்ளே ஜனா மச்சாளின் நம்ம மேலான லவ்வூ மடை திறந்த வெள்ளம் மாதிரி கடைபுரண்டு ஓட தொடங்கிவிட்டது. இதிலே வேற நம்ம அப்பாவும் நீதாண்டி என் மருமக என்று சொல்லி அவளை உசுப்பேற்ற அவளும் ஒரு முடிவோட ஒரு நாள் பெட்டி படுக்கையுடன் இங்கே தான் 
இனி இருப்பேன் இங்கே இருந்துதான் ஸ்கூல் போவேன்என்று அடம்புடிச்சு நம்ம வீட்டிலேயே தங்கி நம்ம ரஸி மச்சாள் மேலான லவ்வுக்கு ஆப்படிக்க தொடங்கீட்டா.. கூட்டத்தோட கூட்டமாய் வீட்டுல நாம எங்கயாவது ஆ..ண்ணு பார்த்துட்டு நிக்கும் போது டக்குண்ணு இவ வந்து நமக்கு
கிஸ் அடிச்சுட்டு எதுவும் தெரியாதவ போல் அடுத்த பக்கம் திரும்பி சிரிச்சுட்டு நிப்பா.. நமக்கு ரெம்ப அவமானமாய் போயிரும்,  அவளை ஒரு முறைப்பு பார்வை பார்த்து விட்டு ஓடிப்போய் 
2,3 தரம் சோப் போட்டு முகம் கழுவி அவ கிஸ் கொடுத்த இடத்துக்கு பவுடர் எல்லாத்தையும் அள்ளி தப்பி கொண்டு மோருக்க விழுந்த சுண்டெலி மாதிரி அவ முன்னால வந்து நின்னு ஒரு லுக்கு விடுவோம் பாருங்க..  அதை இப்போ நினைச்சாலும் நமக்கே கெக்கே பெக்கே என்று 
சிரிப்பு வரும்.

இவளுக்கு பயந்து நாம இரவில் படுக்கிறது கூட அம்மாவின் பாதுகாப்புல அம்மாவை கட்டிப்புடிச்சோண்டுதான். ஆனாலும் அவ விடுவாளா பாருங்க.. படுக்கும் போது எல்லாம் நல்லாத்தான் இருக்கும், காத்தால கண்ணை முழிச்சுப்பார்த்தா! எங்கேயோ படுத்து இருந்தவ இப்போ நமக்கு பக்கத்திலே.. நம்ம மேலேயே கால போட்டுட்டு ஹாயா படுத்திருப்பா. நமக்கு வரும் பாருங்க கோவம். அங்கே ஆரம்பிக்கும் சண்டை மீண்டும் இரவு படுக்கைக்கு போயிம் தொடரும்.  

ஒரு நாள் ஸ்கூல் முடிஞ்சு போகும் போது இவ என் நன்பர்களிடம் எல்லாம் துஷி மச்சானைதான் நான் கல்யாணம் செய்யப்போறேன் என்று அவுத்துவிட,  உடனே என் நன்பர்கள் எல்லாம், 
டேய்.. வெள்ளையா இருந்தாத்தான் உன் பிரண்டாவே சேத்துப்ப.. ஆனா இப்போ உன் கறுப்பு மச்சாளைத்தான் கல்யாணம் கட்டப்போறியா..? என்று சொல்லி சொல்லி காமெடி பண்ணி நமக்கு ஏத்தி விட்ட வெறுப்பு , நானும் ஜனா மச்சாளும் ஒருவர் முடியை ஒருவர் பிச்சுக்கொண்டு கீழே உருண்டு சண்டை போட்டு ரத்த காயங்களுடன் அப்பா முன் விளக்கத்துக்கு போய் நிப்பதில் தான் முடிந்தது. எல்லாத்தையும் விலாவாரியா கேட்ட நம்ம அப்பா என் மேலே காண்டமாகி, இதுக்காடா அவள போய் அடிச்சே..! உனக்கு இருக்குடா அப்புறம் என்று சொல்லிய படியே அவளை தூக்கி தன் மடியில் உக்கார வைச்சு, மருமோளே நீ அழாதேடி..  யார் என்ன செய்தாலும் நீதாண்டி என் மருமகள் என்று வசனம் பேச,  நாம கண்ணெல்லாம் கண்ணீர் முட்டி ஓவென்று அழும் நிலைக்கு வந்துடுவோம், உடனே எங்க அம்மா ஓடி வந்து நம்மல அணைச்சபடியே சொல்லுவா, மாமனும் மருமகளும் என் புள்ளைய அழ வைச்சு லூட்டியாடி அடிக்கிறீங்க..? 
இங்கே எவளுக்கும் என் புள்ளையை கட்டிக்கொடுக்க மாட்டேன்,  எம் புள்ள கலருக்கும் அழகுக்கும் (நம்புங்கப்பா அப்போ அவ்ளோ கலரா அழகா இருப்பேன் ஹீ.. ஹீ..) அவனை வெளிநாட்டில் யாரும் வெள்ளைக்காரிக்குத்தான் கட்டிக்கொடுப்பேன் என்று சொன்ன பிறகுதான் நமக்கு போன உசிரே திரும்பி வரும். உடனே நாம அப்பாவையும் ஜனா மச்சாளையும் பார்த்து ஹீரோ மாதிரி சிரிக்கும் சிரிப்பில் அதுவரை கண்ணில் முட்டி நின்ற கண்ணீர் பொல பொல என கன்னங்களில் வழிந்தோடும்.  இந்த நேரத்தில் நம்ம மூளைக்கு ஒரு அவசர தந்தி வரும். 
அடேய்.. முட்டாள் துஷியே உங்க அம்மா சொன்னது போல் உன்னை யாரும் வெள்ளைக்காரிக்கு கட்டி வைத்தால் உன் ரஸி மச்சாள் மேலான லவ் என்னாகிறது..!! என்று, உடனே நாம சுதாரித்துக்கொண்டு மெதுவாக அம்மாவ சுரண்டி அம்மா நம்ம ரஸி மச்சாள் கூட வெள்ளைக்காரி மாதிரித்தான் இருப்பாம்மா.. என்று வழிய..  அம்மா ஒரு நமட்டு சிரிப்புடன் அடுத்து ஏதாவது ஒரு வேலையில் பிஸியாகி விடுவார். இப்படியான எனக்கும் ரஸி மச்சாளுக்கும் ஜனா மச்சாளுக்குமான முக்கோண லவ்வூ, அடுத்தடுத்த வருடங்களில் ரஸி மச்சாள் 
இயக்கத்துக்கு (விடுதலைப்புலிகள் அமைப்பு) சென்று விட ஒரு முடிவுக்கு வந்தது. 

அவங்களை பார்க்காமல் பேசாமல் இருப்பது என்பது என்னால் முடியாத ஒரு காரியம். ரஸி மச்சாள் இயக்கத்துக்கு போனது உண்மையில் என்னால் ஜீரணித்து கொள்ள முடியாத ஒன்று. 
இப்படி அவங்க பிரிவால் நான் தவித்து நின்ற நேரத்தில் தான் என் இன்னொருஅத்தை ஒருவர் என் மேல் இருந்த பிரியத்தால் என்னை தங்கள் வீட்டுக்குகூட்டிக்கொண்டு போய் அங்கிருந்தபடியே ஸ்கூல் விட போவதாக சொல்ல அப்பாவும் அவர்கள் வீடு என் ஸ்கூல் அருகில் என்பதால் சம்மதிக்க நானும் இந்த ஜனா மச்சாள் தொல்லையில் இருந்து தப்பினால் போதும் என்று அவர்கள் வீட்டுக்கே போய் விட்டேன். அங்கே போனாலும் கடவுள் நமக்கு மச்சாள்ஸ் விடயத்தில் குறை வைக்கவே இல்லை. அந்த அத்தை வீட்டிலேயும் நமக்கு மூணு மச்சாள்ஸ் ஒரு மச்சான் ஆனாலும் இது பற்றி இங்கே இப்போ எதுவும் நான் எழுத போறது இல்லை. காரணம் அந்த மூணு மச்சாளும் இப்போ கல்யாணம் கட்டி இங்கே எனக்கு பக்கத்தில்தான் இருக்காங்கய்யா.. சோ அப்புறம் யாருய்யா அடி வாங்கிறது..?அவ்வ்.

பிறகு.. அத்தை வீட்டில் நின்று படிச்ச நான் சில வருடங்களில் வெளிநாடு வந்துவிட, ஒரு நாள் ஊரில் இருந்து வந்த தகவல் ஒன்று என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. ஆம்.. ஒரு இரவு வன்னி நெடுங்கேணியில் இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி சென்ற நெடுங்கேணி வைத்தியசாலை அம்புலன்ஸ் ஒன்று ஒட்டிசுட்டான் காட்டு பாதையில் ராணுவம் புலிகளுக்கு வைத்த கிளோமர் தாக்குதலில் சிக்கி சிதற அதில் உயிர் இழந்தவர்களில் என் ஜனா மச்சாளும் ஒருவர். இங்கிருந்த படியே பல இணைய தளங்களில் அவருடைய சிதறிய உடலை பார்த்து நான்  துடித்த துடிப்பை வார்த்தைகளால் சொல்லுவிடமுடியாது. அந்த சம்பவத்தின் பின் பல இரவுகள் நான் தூக்கம் தொலைத்து தவித்து இருக்கேன். கண்ணை மூடினால் சின்ன வயசில் அவர் என் மேல் வைத்த கண்மூடித்தனமான  பாசமும் அவர் வலுக்கட்டாயமாக அடிக்கடி தரும் அந்த முத்தங்களும்,  அதே கொஞ்சம் வளர்ந்து விவரம் தெரிந்த பின் அவர் என் மேல் வைத்த மரியாதை  கலந்த அன்பும் தான் நினைவு வந்து வாட்டும். இதைப்பற்றி மேலும் சொல்ல போனால் இது ஒரு கனமான பதிவாய் மாறிவிடும்.  ஒரு சந்தோஷமான மேட்டரை சொல்ல வந்தால் கூட நமக்கு யுத்தம் தந்த வடுக்களை வலியோடு கடந்தே வர வேண்டியுள்ளது. இது நமக்கு நம் நாடு தந்த வரம் போலும். சரி சரி இதை விடுங்கள்.. நான் என் மச்சாள்ஸ் பற்றி தொடர்கிறேன். ஹீ.. ஹீ.

வெளிநாடு வந்த பின்னும் இந்த மச்சாள்ஸ் வட்டம் நமக்கு குறையவே இல்லை. சொல்ல போனால் இன்னும் கூடி விட்டது என்றே சொல்ல வேண்டும். நாம இருக்கும் பிராண்ஸில் ஒரு மச்சாள்ஸ் கூட்டமே இருக்கு நமக்கு. அதை தாண்டி சுவீஸ்,ஜெர்மன், நோர்வே, கனடா என்று எங்கே போனாலும் அங்கே இருக்கும் இந்த மச்சாள்ஸ் கூட்டத்தை சமாளிப்பதே நமக்கு பெரும்பாடா போயிரும். அதிலும் கனடாவில் ஜானு என்று மச்சாள் இருக்காள். இவள் அடாவடித்தனம்  தாங்காமல் அய்யய்யோ.. யாராவது என்னை கடத்தீட்டு போயாவது இவளிடம் இருந்து காப்பாற்றுங்கப்பா என்று அலற தோணும். மெயிலுக்கு மேலே மெயிலு அனுப்பியே சாகடிப்பா, எங்கயாவது முக்கிய வேலையில் நிக்கும் போது டேய் இரவுக்கு  Chatக்கு வா.. உன்னிடம் ஒரு முக்கிய மேட்டர் சொல்லனும் என்று ஒரே sms ஆ.. அனுப்பிட்டு இருப்பா, இரவுக்கு chat க்கு போனா இவ என்ன என்னெல்லாம் சொல்லுவா என்று பழைய அனுபவத்தில் தெரிந்திருந்தாலும்.. இவ தொல்லை தாங்க முடியாமலும்,  மச்சாள் என்று மனசு கேக்காமலும் போய் குந்தியிருந்தா,  அவ விடுவா பாருங்க ரீலு.. ஒவ்வொண்ணும் தலையை பிச்சுக்க தோணும் அவ்வ்.. ரகம். டேய்.. கொஞ்சம் வெயிட் பண்ணு விஜய்க்கு பாய் சொல்லீட்டு வாறேன் என்பா..  நாமளும் யாரு அந்த பக்கத்து அப்பாட்மெண்ட் விஜயா என்று கேட்டா, டேய் லூசு இது நம்ம தளபதி விஜய்.. எங்கேயோ என் போட்டோ பார்த்தாராம் அதான் தன் அடுத்த படத்தில் தனக்கு ஜோடியா நடி நடி என்று ஒரே கெஞ்சீட்டு இருக்காருடா.. என்று சொல்லி நம்மல மூச்சடைக்க வைச்சுட்டு லபுக்குண்ணு அடுத்த மேட்டருக்கு போயிருவா. டேய் மச்சான் இந்த வில்லியம்ஸ் தொல்லை தாங்க முடியல்ல என்பா,  நாமளும் அப்பாவியா யாருடி அது என்று கேட்டா, டேய் அவருதான் யாரோ டயானாவின் மகனாம்..  என்னை லவ் பண்ணு லவ் பண்ணு  என்று ஒரே டாச்சர்டா என்று சொல்லியபடியே, இந்த ஒபாமாவும் ரெம்ப ஓவர்டா இப்போத்தான் போன் பண்ணி நாளைக்கு லஞ்சுக்கு கூப்பிட்டு இருக்காரு இத ரெண்டு நாள் முந்தி சொல்லி இருக்க கூடாதா எனக்கு நாளைக்கு ராகுல் காந்தியோட ஒரு மீட்டிங் இருக்கு அவசரமா போகணும் என்பா. இவ இம்சைய நேத்து இரவு கூட அனுபவிச்சேன். இவ பேச்சை தாங்க முடியாம.. மயக்கமோ தூக்கமோ தெரியல்லைங்க கொம்பியூட்டர் மேசையிலேயே இவ கூட chat பண்ணின குறையிலேயே குப்பற படுத்துட்டேன் என்றா பாருங்களேன்.

ஆனாலும் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் படி ஒரு மச்சாளுட்ட நாம பல்பூ வாங்கிய சம்பவம் ஒன்றும் உண்டு. அவ ஜெர்மனியில் இருக்கா. பெயரு பானு, அவ்ளோ அழகா இருப்பா, என்ன அவளுக்கு அவ்ளோ பிடிக்கும். ஒரு நாளைக்கு ஒருக்காவது என் கூட பேசாம இருக்க மாட்டா, காலேஜ் முடிஞ்சு வீட்ட வந்தா இரவு கட்டாயம் அவ கூட chat பண்ணியே ஆகணும். எங்காவது விழாவுக்கு போறது என்றா அங்கே இருந்து கொண்டே நாம இங்கே போட்டு போற உடுப்பு கலர கூட  அவதான் செலக்ட் பண்ணுவா என்றா பாத்துக்கோங்களேன். அவ ஒரு பெரிய விஜய் ரசிகைங்கோ. அங்க இருந்தோண்டு சொல்லுவா,  டேய்.. சுறா,ஆதி சூப்பர் ஹிட் (!) படங்களோட DVD எல்லாம் வாங்கி அனுப்பு என்று,  நாமளும் இங்கே லாச்சப்பளில் கடை கடையா ஏறி அந்த DVD கேட்டா..  திருட்டு DVD விக்கிறவன் கூட நம்மல திருதிருண்ணு பாப்பான். இவ அன்பு அடாவடித்தனங்களில் நாமளும் கிறங்கி போய் இவ நம்மளத்தான் டாவடிக்கிறா என்று நம்பி 
ஜ லவ் யூ சொல்லுவம் என்று.. ஒரு நாள் போனை எடுத்தா,  அப்போ வைச்சா பாருங்க ஒரு ஆப்பு...!! டேய் துஷி.. எங்க கிளாஸில ஒரு தமிழ் பையன் புதுசா வந்து சேர்ந்து இருக்காண்டா, பார்க்க அப்படியே சூர்யா மாதிரியே இருப்பாண்டா.. அவன பார்க்கும் போதெல்லாம் அப்படியே மனசுக்க ஒரே பட்டாம் பூச்சியா பறக்குதடா... என்று  அவ போட்ட போடுல இங்கிட்டு நமக்கு மயக்கமே வந்துட்டுது. 

இப்படி நம்மல தவிக்க விட்டு ரசிச்சாலும், அலைய விட்டு வேடிக்கை பார்த்தாலும்,  பல நேரங்களில் நம்மல காமெடி பீஸ் ஆக்கினாலும், இப்படி என்னென்னவோ செய்தாலும், நாம சொந்தகாரங்களோட கூட்டத்தோட கூட்டமாய் நிக்கும் போது, ஓடி வந்து அப்படியே நம்ம முதுகில் ஒரு போடு போட்டு மச்சான் எப்படிடா இருக்க..? உன்ன ரெம்ப மிஸ் பண்ணுறேண்டா..  என்று சொல்லும் போது கிடைக்கும் சுகம் இருக்கே... அப்பப்பா.. அதெல்லாம் அனுபவிச்சவனுக்குத்தான்  தெரியும் பாஸ்.

டிஸ்கி 1 -: எங்கையாவது தூர பயணம் சென்று வந்தால்..  பதிவுலகம்திரும்பியதும் பயணக்கட்டுரைதான் எழுதனுமாமே.. போகும் போது நானும் அப்புடித்தான் பிளான் பண்ணி போனேனுங்க.. ஆனா பாருங்க, போன இடத்தில் மச்சாள்ஸ் அன்பில் கிறங்கிப்போய், பயணக்கட்டுரைக்கு பதில் மச்சாள்ஸ் கட்டுரை போட்டுட்டேனுங்க. ஹீ..ஹீ.

டிஸ்கி 2 -: நாம சுவீஸ் போனதுதான் போனோம், இங்கே நம்ம கந்தசாமி துஷிக்கு சுவீஸ்சில் கல்யாணமாம் என்று ஒரு புரளியை கிளப்பி விட்டுட்டாரு.. அவ்வ், அந்த புரளியால நம்ம ப்ளாக் E.Mailக்கும் சரி பேஸ்புக் inboxக்கும் சரி ஒரே திருமண வாழ்த்தா வந்து குவிஞ்சுட்டுது, அந்த புரளியை கிளப்பி விட்ட கந்தசாமிக்கு என் வண்மையான கண்டங்களை தெரிவித்து கொள்வதுடன், துஷிக்கு இன்னும் கல்யாணம் ஆகல..  அவரு 24  வயசுக்கு அப்புறம் தான்  ( பார்டா.. ஏதோ 30 வயசுக்கு பிறகுதான் கட்டுவேன் என்று சொல்லுற மாதிரி பந்தாவ..) கல்யாணம் கட்டுவாராம் என்பதையும் தெரிவித்துக்கொள்(ல்)கின்றேன். ஹீ..ஹீ.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...