வியாழன், மே 26, 2011

மாறுகிறாரா ஜெயலலிதா...?

ஜெயலலிதாவை வெறுப்பவர்கள் மட்டும் அல்ல நேசிப்பவர்கள் கூட அடிக்கடி அவர் மேல் நப்பாசை கொள்வது இவர் மாறவே மாட்டாரா என்றுதான். ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கிய அம்சமே அவர் பேச்சுக்கும் முகத்துக்கும் மக்கள் மத்தியில் ஒரு கவர்ச்சி இருக்க வேண்டும், எனக்கு தெரிந்து எம்ஜிஆர்க்கு அடுத்து அது அதிகளவு இருப்பது ஜெயலலிதாவிடம் தான், வருடக்கணக்கில் கொடாநாட்டில் ஓய்வெடுத்துவிட்டு வந்து ஒரு நாள் கூட்டம் போட்டாலும் அதுக்கு வரும் மக்கள் தொகையையும் ஆதரவையும் குறைந்தது ஒரு வருடத்துக்கு குறையாமல் பேச வைத்து விடுவார். ஜெயலலிதா இப்படி இருக்கும் போதே இவ்வளவு செல்வாக்கு என்றால் அவர் மட்டும் மக்களுக்கு புடித்தமாதிரி தன்னை மாற்றிக்கொண்டால்...!! அவர் நிலை எவ்வளவு உயரத்தில் இருக்கும் என்பதுதான் அவரை நேசிக்கும் என்னைப்போன்றவர்களின் அங்கலாய்ப்பு. கூட்டணிக்கட்சிகளை மதிக்காமை, பத்திரிகைகளை விரோதிகளாய் பார்ப்பது, தன் கட்சி தொண்டர்களைகளைக்கூட சந்திக்காதது, இப்புடி அவர் ஆணவ போக்கு ஏராளம், இந்த ஆணவ போக்கால் அவர் சேர்த்ததை விட இழந்ததுதான் அதிகம்.

மாற்றம் ஒன்றுதான் உலகில் மாற்றம் இல்லாதது என்று சொல்வார்கள், இதற்கமைய ஜெயலலிதாவிடமும் இப்போது ஒரு மாற்றம் தெரிகிறது, ஜெயலலிதாவை உண்ணிப்பாக அவதானித்துகொண்டிருப்பவர்கள் இதை மறுக்க முடியாது. சிறுத்தைக்கு பிறக்கும் போதே உடம்பில் இருக்கும் கோடுகள் கடைசிவரை அதை விட்டு போகாது அது போலதான் ஜெயலலிதாவும் அவரிடம் இருக்கும் ஆணவ போக்கும் என்று ஆருடம் சொன்னவர்கள் கூட இப்போது வாயடைத்துப்போய் அவரை ஆச்சரியமாய் நோக்கிறார்கள். அவர் மாற்றம் புரியாத புதிராகவே இருக்கிறது. ஒரு வேளை கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகாவின் தோல்வி கிண்ணஸ் புத்தகதில் பதியும் அளவுக்கு மிக பெரிய தோல்வியாக இருக்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விட்டார் அது போலவே தேர்தல் முடிவுகளும் அமைந்தது, அதிமுகா யாரும் எதிர்பார்க்காதவகையில் மிக பெரிய வெற்றி பெற்றது, இந்த தேர்தல் முடிவுகள்தான் அவரை மாற்றிவிட்டதோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது. ஜெயலலிதா மாறிவிட்டதுக்கு சாட்சியாக அமைந்த அவருடைய சமீபத்திய செய்கைகள் சில..

-:தேர்தல் முடிவுகள் வெளிவந்த சில மணி நேரத்தில் ஜெயா டீவியில் வெளிவந்த ஜெயலலிதா பேட்டி.
லக தமிழர்களுக்கு ஜெயலலிதா வெற்றிச்செய்தியை விட அதிக சந்தோஷத்தை கொடுத்தது இந்த பேட்டிதான், வழமைக்கு மாறான ஜெயலலிதாவின் நிதானமான திடமான ஆணவம் அற்ற பேச்சு ஆச்சரியத்தையும் அவர் மேல் நம்பிக்கையையும் கொடுத்தது, பேட்டியின் போது " இலங்கை அதிபர் ராஜ பக்‌ஷாவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன்" என்றது அவர் மாறிவிட்டார் என்பதையே காட்டியது. இக்கருத்தை ஜெயலலிதா தேர்தலுக்கு முதல் சொல்லி இருந்தால் ஒட்டுவாங்க சொல்லுகிறார் என்ற எண்ணம் வந்து இருக்கும் ஆனால் தேர்தலில் அதிமுகா மாபெரும் வெற்றி என்ற செய்தி வந்த சில நிமிடங்களில் அவர் அளித்த பேட்டியில் இதை சொல்லியிருக்கிறார், ஆகவே இது ஜெயலலிதாவின் மாற்றமடைந்த மனசைத்தான் காட்டுகிறது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

-: பதவியேற்பு விழா- வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கினார் ஜெயலலிதா.

ஜெயலலிதா கடைசி நேரத்தில் வைகோவை வெளியேற்றியது வருத்தமான செய்கைதான் ஆனால் வைகோவின் "அதிகசீட்" ஆசையால்தான் இந்த சம்பவம் நடந்தது, வைகோவின் கட்சிக்கு தமிழ்நாட்டில் இப்போது உள்ள செல்வாக்கு என்ன என்பது எல்லோரும் அறிந்ததே, இதை நன்றாக அறிந்து வைத்திருக்கும் ஜெயலலிதா அவருக்கு எப்படி அதிக சீட் கொடுப்பார் என்பது எல்லோரும் யோசிக்க வேண்டிய விடயம். வைகோ வெளியேற்ற பட்டபின் " ஜெயலலிதா இன்னும் திருந்த வில்லை என" ஆணந்த விகடனில் வைகோ சீறி பேட்டி கொடுக்க, வைகோவின் சகாக்கள் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் " இலை கருகி சூரியன் உதிக்கட்டும்" என்று உளறிக்கொட்ட இதையெல்லாம் கண்டும் கானாதது போல இருந்தார் ஜெயலலிதா. ஆனால் இன்று ஜெயலலிதா வெற்றிடைந்த பின் வைகோவை சாடி அறிக்கை விடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருக்க தன் பதவி ஏற்பு விழாவுக்கு வைகோவுக்கு முறையாக அழைப்பிதழ் அனுப்பியது மட்டும் இன்றி முதல் வரிசையில் நார்காலி ஒதுக்கி வைகோவுக்கு மரியாதை கொடுத்து பதவி ஏற்கும் முன்னமே நான் மாறிவிட்டேன் என்பதை ஆணித்தரமாக காட்டுகிறாரோ ஜெயலலிதா.

-:புதிய சட்டசபையை புறக்கணித்தது ஏன்? விளக்கமளித்த ஜெயலலிதா.
பொதுவாகவே ஜெயலலிதா எதாவது செய்யும் போது இதைப்பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்கவே மாட்டார், அதை பற்றி பத்திரிகைகள் விமர்சித்தாலோ கேள்வி கேட்டாலோ அதற்க்கு பதில் சொல்வதைக்கூட அவமானமாக நினைப்பார். ஆனால் இப்போது, புதிய சட்டசபையை புறக்கணிப்பது கருணாநிதிமேல் உள்ள வெறுப்பால்தான் என்று ஒரு பேச்சு அடிபட "ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள புதிய சட்டசபை கட்டிடத்தில், போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. ஆட்சி நிர்வாகம் நடத்த அங்கு சரியான வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே, ‌செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சட்டசபையை மாற்றியுள்ளோம். இதில் எவ்வி‌த அரசியல் உள்‌நோக்கமும் கிடையாது’’ என்று பத்திரிகைகளுக்கு விளக்கம் கொடுத்து நான் மாறிவிட்டேன் என்று உணர்த்துகிறாரா ஜெயலலிதா.

-:வாரம் ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்திப்பேன்- ஜெயலலிதா அறிவிப்பு.
த்திரிகைகளை எப்போதுமே விரோதிகளாய் பார்ப்பவர் ஜெயலலிதா. அவர்களை சந்திப்பதையே அறவே தவிர்ப்பார், ஆனால் இப்போது பத்திரிகைகளை அரவனைத்து போவது மட்டுமின்றி இனி வாரவாரம் ஒரு நாள் பத்திரிகைகளை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதில் அழிக்க போவதாக அறிவித்து இருப்பது நான் மாறிவிட்டேன் என்பதைத்தான் நமக்கு உணர்த்துகிறாரா ஜெயலலிதா.

-:மரியம் பிச்சையின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஜெயலலிதா நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
ரஜினி விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஜெயலலிதா
.
பொதுவாகவே தன்னைச்சுற்றி எது நடந்தாலும் கண்டும் காணதது போல் இருப்பவர் ஜெயலலிதா. இதன் காரணமாகவே பல அதிமுகா விஜபி தொண்டர்கள் திமுகா பக்கம் சென்றுவிட்டனர், தன்னைச்சுற்றி ஒரு இரும்பு வலையத்தை உருவாக்கி கொண்டு அதுக்குள்ளேயே இருந்து விடுவார். ஆனால் இப்போது அதில் நிறைய மாற்றங்கள்,  அமைச்சர் மரியம் பிச்சை ஒரு சாலை விபத்தில் இறந்த போது எவ்வளவோ முக்கிய வேலைகள் இருந்த போதும் அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு திருச்சிக்கு ஓடோடிச்சென்று அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவர் குடுப்பத்துக்கு ஆறுதல் சொன்னது மரியம் பச்சை குடும்பத்தை மட்டும் அல்ல ஒட்டுமொத்த அதிமுகா தொண்டர்களையே நெகிழச்செய்து விட்டது. கூடவே உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் இருக்கும் நடிகர் ரஜனிகாந் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் என்று அறிக்கை வெளியிட்டது அடடா ஜெயலலிதாவா இது என்று எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்து நான் மாறிவிட்டேன் என்பதைத்தான் காட்டுகிறாரா ஜெயலலிதா.

-:நான் போகும் போது மக்கள் போக்குவரத்தை தடை செய்ய வேண்டாம்,
மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் ஆடம்பர செய்கைகளை அதிமுகா தொண்டர்கள் நிறுத்த வேண்டும் ஜெயலலிதா அறிவிப்பு
.
டம்பரத்துக்கு பெயர் பெற்றது கடந்த கால ஜெயலலிதா ஆட்சி, அதுக்கு இன்றுவரை மறைக்க முடியாத நல்ல உதாரணம் அவரின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம். தன் கட்சி அலுவலகத்துக்கு வரும் ஒரு சாதாரண நிகழ்வைக்கூட தன் தொண்டர்கள் மூலம் ஆடம்பரமாக கொண்டாட வைப்பவர், தான் எது செய்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவே தன்னை திரும்பி பாக்க வேண்டும் என்ற பந்தா பிரியையும் கூட அப்படிப்பட்ட ஜெயலலிதாவா இப்புடி எல்லாம் அறிவித்தது என்று ஒட்டு மொத்த தமிழினமே ஆச்சரியமாய் பாக்கின்றது அதிமுகா அரசை,
அதைவிட அவர் அமைச்சரவையில் இடம் புடித்த புதியவர்களினதும் எழிமையானவர்களினதும் பெயர் பட்டியல் இன்னும் ப்ளஸ்சான ஆச்சரியம். இதையெல்லாம் செய்வதன் மூலம் நான் மாறிவிட்டேன் என்பதைத்தான் ஆணித்தரமாக நிரூபிக்கிறாரா ஜெயலலிதா.

-:மேலும்..  ன் கையால் அனைவருக்கும் இனிப்பு வழங்கியது, தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, போயஸ் கார்டனில் ஒன்றுக்கு இரண்டு முறை மாடியில் நின்று மக்களைப் பார்த்து கையசைத்து புன்னகைத்தது, அடுத்தடுத்து பல முறை செய்தியாளர்களை சந்தித்தது, அமைச்சர்கள் தங்கள் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துதல், செல்லுதல் கூடாது என்றது, அதிமுக்கியமாக, "பதவியேற்பு விழாவில் எந்த அமைச்சரும், தன் காலில் விழக் கூடாது' என கண்டிப்புடன்  உத்தரவிட்டது போன்றவை ஜெயலலிதா மாறிவிட்டார் என்பதைத்தான் உணர்த்துகிறது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

து எப்படியோ இந்த மாற்றம் நிஜம்தான்  என்றால்  ஜெயலலிதாவை வருங்காலத்திலும் முதல்வர் பதவியில் இருந்து  அசைக்க முடியாது. எம்ஜிஆர் இருந்த காலங்களில் எப்படி கருணாநிதிக்கு முதல்வர் பதவி எட்டாக்கனியாக இருந்ததோ அந்த நிலைமை  வருங்காலத்திலும்   கருணாநிதியின் கட்சிக்கு ஏற்பட்டுவிடும்,  இப்போது  பாதாளத்தில்  விழுந்து கிடக்கும் திமுகா எழுவதும் எழாமல் போவதும்  ஜெயலலிதாவின் மாற்றத்தில்தான் இருக்கிறது.  

ஞாயிறு, மே 15, 2011

வெற்றிபெற்ற ஜெயலலிதா.. மூக்குடைபட்ட நக்கீரன்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டது,  ஜெயலலிதா அபார வெற்றி பெற்றுவிட்டார் எல்லாம் நாங்கள்  அறிந்ததுதான்,  ஆனால் தமிழ்நாட்டு அரசியலை அவதானித்து பார்த்துகொண்டிருப்பவர்கள் இப்போது எங்கேனும் சந்தித்துகொண்டால் ஆச்சரியப்பட்டு  பேசிக்கொள்வது  ஜெயலலிதா வெற்றிபற்றித்தான். ஆனால் இதில்  எனக்கு  எந்த வித  ஆச்சரியமும் இல்லை இது நான் எதிர் பார்த்ததுதான். அதுதான் தேர்தலுக்கு முதல் நாளே  ஜெயலலிதா அபார வெற்றி என்று இந்த பதிவை போட்டேன். (வெளிவந்தது தேர்தல் முடிவுகள்.. ஜெயலலிதா அபார வெற்றி, கொண்டாட்டத்தில் அதிமுகாவினர்)  எங்கள் வீட்டில் கூட அடுத்ததும் அய்யாதான் என்று வெறுப்பாக பேசிக்கொள்ளும் போது இடையில் நான் பூந்து அடுத்தது அம்மா என்று சொல்லி ஏளனமாக  பார்க்கபட்டுள்ளேன் ( அவர்கள் இப்போது என்னை  ஆச்சரியமாய்  பார்ப்பது வேறு விடயம்). அடுத்து அதிமுகாதான் ஆட்சியை புடிக்கும் திமுகா மோசமான தோல்வியை தழுவும் என்று நான் நினைப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் நான் முக்கியமானதாக நினைத்த  மூன்று காரணங்கள்.

1. ஈழ விவகாரத்தில் கருணாநிதியின் துரோகமும் பிரிக்கமுடியாத காங்கிரசின் உறவும்.
2.   கருணாநிதியின் குடும்ப ஆதிக்கமும் படித்தவர்களின்  வெறுப்பும்.
3. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.

தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றது எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்ததோ அதைவிட அதிக சந்தோஷத்தை கொடுத்தது ஜெயலலிதாக்கு வெற்றி செய்தி கிடைத்ததும் ஈழ தமிழர் விசையமாக அவர் உதிர்த்த வார்த்தைகள்.   அவை....

இலங்கைத் தமிழர் பிரச்னை
:-இலங்கைத் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களின் துயரத்துக்குக் காரணம் இலங்கை அரசுதான்.

:-தமிழர்கள் என்ற முறையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.

:-தமிழக முதல்வர் என்ற முறையில் இதில் ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். ஏனென்றால், இது சர்வதேசப் பிரச்னை, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை. மத்திய அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஏற்கெனவே ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நான் மத்திய அரசை வலியுறுத்துவேன்.
இதில் இந்தியா இரண்டு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஒன்று, போர்க்குற்றங்களுக்காக ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

-:இலங்கை வாழ் தமிழர்களுக்குக் கௌரவமான, கண்ணியமான வாழ்க்கையை அமைத்துத் தர அந்த நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கை அரசு பணியவில்லை என்றால் அந்த நாட்டுக்கு எதிராக பிற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.


ஜெயலலிதா தேர்தலுக்கு முதல் இதை சொல்லி இருந்தால் அவர் ஓட்டுவாங்க இதை சொல்லுகிறார் என்று சொல்லி இருப்பார்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பின் இதை அவர் சொல்லுவது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இதை கண்டிப்பாக அவர் செய்வார் எனவும் நான் நினைக்கிறன். கருணாநிதியை விட ஈழமக்கள் மீது ஜெயலலிதா அக்கறையானவர் என்பது என் கருத்து, ஆனால் பிரபாகரன்  விசயத்தில் அவர் எதிர் ஆனவர்தான் இது எனக்கு வருத்தத்தை குடுத்தாலும் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தையும் புரிந்துகொள்கிறேன். ( இதை பற்றி தனி பதிவு போடா ஆசை ஆனால் வீண் எதிர்ப்பை சந்திக்க விருப்பம் இல்லை ) 

கருத்துக் கணிப்புக்கள்  

தேர்தல் அறிவிப்பு வந்த ஆரம்பத்திலேயே அதிமுக்கா அலை அடிக்க ஆரம்பித்து விட்டது அதை மறைத்த முதல்  பெருமை நக்கீரனுக்குத்தான் சேரும், முதலாம் கட்ட கருத்துக்கணுப்பு இரண்டாங்கட்ட  கருத்துகணுப்பு என்று சொல்லி சொல்லியே மக்களை குழப்பி விட்டு கருணாநிதிக்கு ஜால்ரா அடித்தார்கள், இவர்களுடைய திமுகா பாசம் தெரிந்தும் இவர்களுடைய கருத்துகணிப்பை நம்பியவர்கள் ஏராளம் பேர்.  இந்த தேர்தல் முடிவுகள் திமுகாவுக்கு எவ்வளவு அவமானத்தை கொடுத்ததோ அதில் பாதியை நக்கீரனுக்கும் கொடுத்துவிட்டு போய்விட்டது. நாங்கள் கணிப்பதுதான் நடக்கும் என்ற நக்கீரனின் ஆணவத்துக்கு கிடைத்த அடி இது. இந்த மரண அடியில் நக்கீரனின்  நடுநிலையான பத்திரிக்கை என்ற முகமூடி கிழிந்து அவர்களின் உண்மை முகமான திமுகா விசுவாச முகம் தெரிந்து விட்டது. 

நக்கீரன் 1வது கட்ட கருத்துக் கணிப்பு:
திமுக கூட்டணி 146. அதிமுக கூட்டணி 80. 

நக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:
திமுக கூட்டணி 140.  அதிமுக கூட்டணி 94.

ஆனால் இப்போது நடந்தது:
தி.மு.க. கூட்டணி  31. அ.தி.மு.க. கூட்டணி  203.

இந்த காமெடி  பத்தாது என்று தேர்தல் முடிந்த பிறகும் திமுகாதான் ஜெயிக்கும் என்று ஒரு கருத்து கணிப்பு  வெளியிட்டார்கள். அவர்கள் மேல் பல அவநம்பிக்கை இருந்தாலும் ஒரு விசயத்தில் அவர்களை ஆச்சரியமாய்  பார்த்து இருக்குறேன் அது அவர்களின் புலனாய்வு திறமை. நக்கீரனின் நிருபர்கள் திறமையானவர்கள்  நிச்சயமாக அதிமுகா ஜெயிக்கும் என்று அவர்களுக்கு கொஞ்சமாவது தெரிந்து இருக்கும்  அப்படி இருக்கும் போது எப்படி இந்த தவறு நடந்தது.  எல்லாமே  திமுகா பாசத்தால் வந்த வினை,  நக்கீரன் கோபாலின் திமுகா பாசத்துக்கு (ஜால்ரா) அந்த திறமையான நிருபர்களின் உழைப்பு  பலியாகிவிட்டது.

நக்கீரனின் பழைய வாசகன் என்ற முறையில்  நக்கீரன் கோபால் அவர்களிடம் சில வார்த்தைகள்..
90 களில் நக்கீரன் விற்பனையில் சாதனை படைத்தது. அதற்க்கு காரணம்  நக்கீரனின் துணிச்சல் மட்டும் அல்ல நக்கீரனின்   நடுநிலையான செய்திகளும்  தான், ஆனால் இப்போது...! 
எப்போ நீங்கள் உங்கள்  திமுகா பாசத்துக்கு நக்கீரனை பயன்படுத்த தொடங்கினீர்களோ  அப்பவே நக்கீரனின் விற்பனை மட்டும் அல்ல வாசகர்களின் மனங்களின் இருந்தும் நக்கீரன் இறங்க தொடக்கி விட்டது.  உங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்கு பெரிய வாசகர் வட்டத்தை வைத்து இருக்கும் நக்கீரனை பயன்படுத்தி அதை அழிவு பாதைக்கு இட்டு செல்லாதீர்கள். உங்களிடம் நக்கீரன் வாசகர்கள் எதிர் பார்ப்பது ஒன்றே ஒன்றைத்தான் அது  அதிமுக்க திமுகா எது ஆட்சிக்கு வந்தாலும் நீங்கள் எதிர்கட்சி  வரிசையிலேயே இருங்கள் அதுதான் சிறந்த பத்திரிகைக்கு அடையாளம் மட்டும் அல்ல இபோதைய நிலைமையில் நக்கீரனுக்கும் மக்களுக்கும் நல்லது.
செய்வீர்களா..?


சனி, மே 14, 2011

வெளிவந்தது தேர்தல் முடிவுகள்.. ஜெயலலிதா அபார வெற்றி, கொண்டாட்டத்தில் அதிமுகாவினர்.

திமுகா வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராவர் என்பது பலர் எதிர்பார்த்த ஒன்றுதான், ஆணந்த விகடன், குமுதம், இந்தியா டுடே, லயலா காலேஜ் போன்றவற்றின் பெரும்பாலான கருத்துக்கணிப்புக்களும் அதைத்தான் கூறின, ஆனால் ஒவ்வொரு முறையும் சரியாக கணிக்கும் நக்கீரனின் கருத்துகணிப்பு மீண்டும் திமுகா தான் ஆட்சியை பிடிக்கும் என்றது மக்களை கொஞ்சம் குழப்பித்தான் விட்டிருந்தது,
அதை விட ஜெயலலிதா வைகோவை கடைசி நேரத்தில் வெளியேற்றியது, அதிமுகா தேமுகாவின் ஒற்றுமையின்மை, விஜயகாந்தின் உளறல் பேச்சு போன்றவை அதிமுகாவை ஆட்டங்கான வைக்க இந்தப்பக்கம் திமுகாவின் ஒற்றுமையான கூட்டுப்பிரச்சாரம்,வடிவேலுவின் அதிரடி பேச்சு, பண பலம், போன்றவை திமுகாதான் ஆட்சியை புடிக்கும் என்று ஒரு மாயத்தோற்றத்தை உண்டுபண்ணி அரசியலின் காமடி பீஸ்சான சுப்பரமணியசுவாமியைக்கூட திமுகா பக்கம் பேச வைத்தது. ஆனால் இன்று வெளிவந்த தேர்தல் முடிவுகள் அதிமுகாவுக்கு ஆதரவாக வந்து திமுகா மேல் உள்ள மக்கள் வெறுப்பை படம் புடித்துக்காட்டியுள்ளது. ஒருவேளை திமுகா மறுபடியும் ஆட்சியை கைப்பற்றி இருந்தால் கலைஞர் வயதைக்காரணம் காட்டி முதல்வர் பதவியில் ஸ்டாலினை அமர்த்தி அவருடைய நெடு நாள் ஆசையை பூர்த்தி செய்து இருப்பார் இதைப்பார்த்து மதுரை அஞ்சாநெஞ்சன் வாளுடல் கிளம்பிவெர இடையில் பல அப்பாவிகளின் உயிர்கள் பலி போய் இறுதியில் முகாவின் கண்கள் பனிக்க! உடனே அண்ணன் தம்பிமார் ஒற்றுமையாகி தமிழ் நாட்டை ஆளுக்கொரு பகுதியாக பிரித்து ஆட்சியமைத்திருப்பார்கள் நல்ல வேளை அந்த கண்றாவி எதுவும் நடக்க வில்லை தமிழ் நாடு தப்பியது.
எது எப்படியோ ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து விட்டார்,
ஆட்சிமாற்றம் என்ற ஒன்றைக்காட்டிளும் இப்போது தமிழ் நாடு உள்ள நிலமையில் ஜெயலலிதாவின் ஆட்சிதான் வர வேண்டும் என்ற என் போன்றவர்களின் ஆசை நிறைவேறியுள்ளது. முதல்வர் ஜெயலிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவர் ஆட்சிக்கு வந்ததால் கிடைக்கும் என்று நான் நம்பும் சில நன்மைகளை பட்டியல் இடுகிறேன்...


:- மத்திய அரசை நெருக்குவதன் மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழலில் நேர்மையான தீர்ப்பை பெற்றுத்தெருவார்.

:- சட்ட ஒழுங்கு சீராக்கப்படும்.
திமுகா கருணாநிதி ஆட்சியில் கட்டவிழ்த்து விடப்படும் ரவுடிஸம் அதிமுகா ஜெயலலிதா ஆட்சியில் அடக்கப்படுவது வழமையாக நடக்கும் ஒன்றுதான்.

:- கலைஞர் தொலைக்காட்சி முடக்கப்படும்.
மக்கள் வரிப்பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு முடக்கப்படும் அல்லது அரசுடைமை ஆக்கப்படும்.

:- சினிமாத்துரையில் முகா குடும்பத்தின் ஆதிக்கம் ஒடுக்கப்படும். 

:- போர்குற்றத்துக்காக ராஜபக்சாவை கைது செய்யச்சொல்லி குரல் கொடுப்பார்.

இப்படி பல நன்மைகள் கிடைக்கும் அதில் நான் முக்கியமாக நினைக்கும் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.
அப்போ ஜெயா ஆட்சியில் கெட்டதே நடக்காதா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது, ஜெயலலிதா ஆட்சியின் நன்மைகளை சொன்ன என்னால் ஒரு உத்திரவாதத்தையும் மட்டும் தரமுடியும் ஜெயலலிதா ஆட்சி சில விடையங்களில் அப்படி இப்படி இருந்தாலும் கடந்த ஜந்தாண்டு கால கருணாநிதி ஆட்சியை விட ஒன்றும் மோசமாக இருந்திடமுடியாது.



பின்குறிப்பு: அடடா.. நாளைக்குத்தான் தேர்தல் முடிவுகள் வருது, இவன் இண்டைக்கே ஜெயலலிதா முதல்வர் எண்டு சொல்லுறானே என்று கடுப்பாகாதீங்கப்பா.. அடுத்தது அம்மா ஆட்சிதான் என்பது என் அசைக்க முடியாத நம்பிகை கூடவே ஆசையும், அதுதான் தேர்தல் முடிவு வெளிவருவதர்க்கு முதல் நாளே இந்த பதிவு.

ஞாயிறு, மே 08, 2011

கல்லறையில் ஒரு தாஜ்மஹால்..

நேரம் இரவு 10.30 தாண்டிக்கொண்டிருந்தது, புயல் காற்றுடன் அடைமழையும் சேந்து ச்ச்..ர்ர்ர்ர் ர்ர்ர்.... என மரங்களை பேயாட்டம் ஆட்டி அந்த இரவை பயங்கரமாக்கி கொண்டிருக்க, இலங்கை வவுனியாவில் பூந்தோட்டம் செல்லும் அந்த சாலை ஆள் நடமாற்றம் இன்றி வெறித்தோடிப்போய் இருந்தது,  இரண்டு பக்கமும் இருக்கும் வயல்வெளிகளில் நிரம்பிய நீர் சாலைகளில் இருக்கும் குப்பைகளையும் இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்க சாலையில் நினைவற்று விழுந்து கிடந்தான் சிவா. தன்னை உதைத்தபடி ஓடும் நீரின் வேகத்துக்கும் மழையின் உக்ரத்துக்கும் மெல்ல மெல்ல தன் சுய நினைவை பெற்றுக்கொண்டிருந்தான். தான் இருக்கும் நிலை மூளையில் உறைக்க மெதுமெதுவாக கண்களை திறந்து எழுந்திருக்க முயர்சித்தவன் தலையின் விண் விண் என்ற வலியால் மீண்டும் தலையை பிடித்தபடி முனங்கியபடி தரையில் சரிந்தான்.  அவன் மனக்கண்ணில் ஏதேதோ நினைவுகள் எல்லாம் முட்டி மோதிக்கொண்டிருந்தன,  பல உருவங்கள் அவனை உக்கிரமாக தாக்குவது போலவும் சில உருவங்கள் அவனை ஓடிவந்து தாங்கிப்பிடிப்பது போலவும் நினைவுகள்,  திடிரென அவன் மனசு எதையோ நினைத்து குழந்தைபோல விம்மி அழத்தொடங்கியது.


அவன் மனக்கண்ணில் ஒரு உருவம் ஒன்று அவனை ஆசையுடனும் ஏக்கத்துடனும் எதிர்பாத்தபடி காத்திருப்பது நிழலாடியது.. அந்த உருவத்தை உற்று நோக்கினான் அது.. அது காமாட்சியே தான் அவனை பெற்றெடுத்த தாய்,  பேய் மழைக்கு ஆட்டம் காணும் அவள் இருக்கும் அந்த குடிசை வீட்டினுள் அங்கங்கு மழை நீர் ஒழுகும் இடங்களுக்கெல்லாம் மண் சட்டிகளும் நெளிந்த பித்தளை சட்டிகளும் வெக்கப்பட்டு இருக்க அதில் விழும் மழை நீரின் சப்தம் சங்கீதமாய் ஒலித்துக்கொண்டிருந்தது. தசையில்லா எழும்புகளை தோல் மட்டும் மூடியிருப்பதைப்போன்ற அவள் உருவம்,  முழுதாக நரைத்த அவள் தலைமுடி வயதைக்காட்டிக்கொடுக்க,  அங்கங்கு கிழிந்து பொருத்தப்பட்ட சாயம்போன அவள் உடுத்தியிருந்த சேலை தன் பங்கிற்க்கு அவள் வறுமையையும் காட்டிக்கொடுத்தது.  இதையேதையும் சாட்டை செய்யாது திண்ணையில் குந்தியிருந்தபடி சுருட்டை புகைத்தபடி வெளியே மழையை வெறித்தபடி இருந்தால் காமாட்சி.  அவள் பளுப்பு கண்களில் ஏக்கமும் வெறுமையிம் அப்பிக்கொண்டிருந்தது.  சிவா தன் மனக்கண்ணில் தோன்றுவது நிஜமா.. நிழலா.. என பிரித்துப்பாக்க முடியாது திணறிக்கொண்டிருந்தான் அவன் உதடுகள் ஏதேதோ புலம்பிக்கொண்டிருந்தது தாயை நினைக்கும் போதெல்லாம் அவன் மனசு பதறும் அவள் அன்புதான் எவ்வளவு ஆழமானது எதையிம் எதிர்பாக்காத தாயன்பு எவ்வளவு விசித்திரமானதும் கூட,  ஒருவன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் கூட அவன் அன்னையின் பார்வையில் மட்டும் நல்லவன் தானே.. ! பக்கத்து வீட்டு சரசக்கா தொடங்கி கடைசி தெரு பார்வதியக்கா வரை,  ஏண்டி காமாட்சி உன் புள்ளதான குடிச்சிட்டு உருபிடாம ரோட்டு வீதி சந்து பொந்து என ஒரு இடமும் மிச்சம் விடாம விளுந்து கிடக்கான் அவனை போய் தாங்கு தாங்கு என தாங்கிரியே உனக்கு புத்தியில்ல.. உன் பேச்சு கேட்காம அலையிறவன எதுக்குடி நீ பார்க்கனும் இந்த வயசில உன்ன உக்கார வைச்சு சோறு போடாம இப்பிடி குடிச்சிட்டு அலையிறான் நல்லாத்தான் புள்ள வளக்கிற போ.... உருப்படுவானா அவன் கட்டையில போறவன்....  சொல்லி முடிக்கும் முன்பே பத்திரகாளியாக மாறிவிடுவாள் காமாட்சி,  ஏய் நாவ அடக்கி பேசுங்கடி இல்ல இழுத்து வைச்சு வெட்டிடுவன் என் புள்ளைய பற்றி கதைக்கிறத்துக்கும் ஒரு யோக்கியம் வேணும்டி... அவன் என்னடி பண்ணிட்டான் அப்பிடி குடிக்கிறான் அவ்வளவுதான, அவன் மனசில இருக்கிற பாரம் யாருக்கெடி தெரியும் அது எனக்கு மட்டும்தாண்டி தெரியும்.. சொன்னா தாங்கமாட்டிங்கடி... நெஞ்சு வெடிச்சிரும்டி போங்கடி போங்க உங்க வேலைய பாருங்க  மூக்கை சீறி முந்தானையில் துடைத்தபடி தொடர்வாள். அந்த ஆண்டவனுக்கு கண்ணே இல்லே எனக்கு மட்டும் ஏன் இப்பிடி.. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என கருவேப்பிலை மாதிரி பெத்தேன் அது பொறுக்கல்ல அவனுக்கு தலையில் அடித்து ஒப்பாரி வைக்கும் அவளின் கோபம் சட்டென இடமாறும் பாவிமக சிறுக்கி இப்பிடி பண்ணிட்டாலே நல்லாத்தானே இருந்தான் இப்பிடி பண்ணிட்டு போயிட்டாளே என்னென்ன எல்லாம் பேசினா எல்லாமே என் புள்ளைய தவிக்க விட்டு போறத்துக்குதானா என் புள்ள என் கண் முன்னாலேயே சீரழியிரத பார்க்க வச்சிட்டாலே.. இத விட அவன உன் கூட கூட்டிபோயிருந்தாகூட சந்தோசப்பட்டிருப்பேனடி
பாவி பாவி இப்புடி பண்ணீட்டியே.. என அவள் பெருங்குரல் எடுத்து ஒப்பாரி வைப்பது தொடர்கதைதான். சில வேளைகளில் இதையெல்லாம் பாக்கும் போது அவனுடைய இதயம் நொருங்குவதைப்போல உணர்வான். அம்மா என்னை மன்னிச்சிடம்மா என கதறணும் போல இருக்கும் பாழாய்போன இந்த குடியை மறந்து அவளையும் மறந்து அம்மாவை ராணிபோல வைச்சு பாக்கணும் என்று நினைப்பான் எல்லாம் அந்த வினாடிகள் தான் பிறகு ஏதேதோ நினைவுகள் அவனை தாக்க வழமையான 'குடி'த்தனத்துக்கு வந்துவிடுவான்.


மழை உக்ரம் குறையாமல் இன்னும் வேகமெடுக்க தொடங்கி இருந்தது, சிவா மெதுவாக கையூண்டி எழுந்து சுற்றும் முற்றும் நோட்டமிட்டான் எங்கும் கரிய இருளின் ஆதிக்கமே.. விண் விண் என வலித்த தலையை மெதுவாக தொட்டுப்பார்த்தான் வீங்கிய பகுதியில் இருந்து இரத்தம் இன்னும் கசிந்து கொண்டிருந்தது, சற்று முன் நிகழ்ந்தவை அவன் கண்முன் நிழலாடியது. அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு நெடுனேரமாக வீதியில் விழுந்து கிடந்தவன் மெதுவாக எழுந்து வீதியில் நடக்க தொடங்கினான்.  இருட்டில் இரண்டு கரிய உருவங்கள் அவனை வழி மறித்தன, டேய் யாரு.... கொட்டியா...? எடு எடுடா பாஸ்ஸ.. டேய் நாயே எடுடா.. தமிழ் சிங்களம் கலந்த மொழிகளில் அந்த உருவங்கள் மிரட்ட, சற்று நேரத்தில் அவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டுகொண்டவன் உக்ரமாணான். டேய் என்னடா கேட்ட பாஸா..? யாருக்கடா பாஸ் .. என் நாட்டில் இருக்க நீ என்கிட்ட பாஸ் கேக்குறியா ..? ஏன்டா ஏன் இப்புடி இருக்கீங்க ரத்த வெறி பிடித்து அலையிறிங்க இந்த மண்ணுள்ள அப்புடி என்ன தாண்டா இருக்கு தோண்ட தோண்ட கல்லும் மண்ணும் தானே வருது இதுக்கு போய் ...! இத்தனை பேர காவு வாங்கிட்டிங்களே நியாமாடா..? உங்களால்தான் உங்களால்தான் என காவேரி போய்ட்டா... போயிட்டாடா போய்ட்டா, பச்ச மண்ணுடா அவ, என்ன விட்டா  அவளுக்கு வேற ஒண்ணுமே தெரியாதுடா அவளப்போய்... நாசம் பண்ணிட்டிங்களேடா நீங்க நல்லா இருப்பிங்கலாடா..? சொல்லு சொல்லுடா அவர்கள் இருவரையும் புடித்து இவன் உலுக்க..  டேய் கொட்டி என்ன தையிரியம் இருந்தா எங்க மேலேயே கை வைப்ப..? ஒருவனுடைய கையில் இருந்த துப்பாக்கியின் பின் பக்கம் இவன் தலையை சராமரியாக தாக்க தலையை கையால் பிடித்தபடி வேர் அற்ற மரம் போல நிலத்தில் சாய்ந்தான் சிவா.

மெதுவாக எழுந்து நடக்க தொடங்கினான் சிவா.
மழையினால் பாயும் வெள்ளத்தின் வேகத்துக்கு அவனுடைய அடிவாங்கிய உடம்பு தடுமாற, அவன் கால்கள் மட்டும் அவன் வழமையாக போகும் மயானத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
மழை நீரினால் இழுத்து வரப்படட சருகு பூக்கள் எல்லாம் அவளை சூழ்ந்து அலங்கரித்து இருக்க காவேரி அமைதியாக கல்லறையில் தூங்கி கொண்டிருந்தாள். கல்லறையின் அருகே அமர்ந்தவனின் விரல்கள் அவளை மெதுவாக வருடியபடி, காவேரி.. எப்புடி இருக்க.., காவேரி என்னப்பாக்கமா ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டியே இப்போ எப்புடி..??!
காவேரி எப்புடிடா  என்ன விட்டுட்டு உன்னால போக முடிஞ்சுது.. சொல்லு காவேரி சொல்லு..! என்ன தவிக்க விட்டுட்டு போக உனக்கு எப்புடி மனசு வந்திச்சு..  நீ இல்லாம நான் எப்புடி ஆயுட்டேன் பாரு காவேரி..   மண்ணு மண்ணு எண்டு உயிரை எடுக்குற இந்த நாடு நமக்கு வேணாம்டி நானும் உன் கூட வந்திடுறன்.. காவேரி மாட்டேன்னு மட்டும் சொல்லிராத தயவு செய்து என்னையும் உன் கூட கொண்டு போயிரு காவேரி ப்ளீஸ் என்னையும் உன் கூட கொண்டு போயிரு..  அவளை கட்டிபிடித்த படி கல்லறையில் தலையை வேகமாக மோத தொடங்கினான் சிவா. அடிபட்ட இடத்தில் மீண்டும் மீண்டும் அடிபட தலையில் இருந்த ஆறாக பெருக்கெடுத்த இரத்தம் கல்லறையை தழுவியபடி ஓடும் நீரோடு கலந்து அந்த கல்லறையை செந்நிறமாக்கிக்கொண்டிருந்தது.
               
                            ***


திங்கள், மே 02, 2011

"நக்கீரன்" கோபாலிடம் பத்து கேள்விகள்..

01.  ஜெயலலிதா, உங்களை வீரப்பன் விவகாரத்தில் சம்மந்தப்படுத்தி தூக்கி ஜெயிலில் போட்டதாலும், உங்கள் மீதும் உங்கள் பத்திரிகை ஊழியர்கள் மீதும் பல பொய் வழக்குகளை போட்டதாலும் அன்றில் இருந்து இன்று வரை ஜெயலலிதா கெட்டது நல்லது எது செய்தாலும் அவரை எதிர்கிறீர்களே, பத்திரிகை தர்மத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சமே பகைமை பாராட்டாததுதான் என்பது பத்திரிகை உலகின் புலனாய்வு புலி என பாராட்டுப்பெற்ற உங்களுக்கு தெரியாதா..? அல்லது தெரிந்தும் உங்கள் சுய கோவத்துக்கு அடிமைப்பட்டு இருக்குறிர்களா..?

02.  ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சரமாரியாக உங்கள் மேல் வழக்குகள் பாய்ந்த போது, அப்போது எதிரிகட்சியாக இருந்த கருணாநிதி உங்களை அரவணைத்து காப்பாற்றினார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று வரை கருணாநிதியின் குள்ள நரி வேலைகளை கூடுமானவரை மறைத்தும் அவரை விமர்சிக்காமலும் மறைமுகமாக ஆதரித்தும்(அப்படி நீங்க நம்பும்) உங்களை நம்பும் உங்கள் வாசகர்களை ஏமாத்துறிர்களே இது தப்புண்ணு எப்பவாச்சு உங்களுக்கு தோனி இருக்கா..? அல்லது இதுக்காக எப்பவாது சின்ன வருத்தமாவது பட்டதுண்டா..?

3) நக்கீரனில் உங்களால் எழுதப்பட்டு வரும் " யுத்தம் " தொடரில் சில உண்மைகளும் சில பாராட்ட தக்க விடையங்களும் இருந்தாலும் பெரும்பாலும் அதிகப்படுத்தலும் தனி நபர் விரோதமும் சுய தம்பட்டமும் பெரிதாக தெரிகிறதே ஊருக்கு உபதேசம் செய்யும் உங்களுக்கு இது தெரிய வில்லையா..? மெகா சீரியல் போல் எங்கேங்கோ சுத்தும் தொடர் சமீபத்தில் முடிந்த சட்டமன்ற தேர்தல் நேரம் பாத்து ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தும் அவரை ஒரு அரக்கி போல் சித்தரித்தும் எழுதி தி.மு.க வுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்தீர்களே இதர்க்கு பதில் வடிவேல் மாதிரி ரோட்டு ரோட்டாக சென்று கருணாநிதியை ஆதரிது ஓட்டு கேட்டு இருக்கலாம் இல்லையா.. ஏன் இந்த " நடு நிலையான பத்திரிகையாலன் " என்ற போலி வேசம்..?

04. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று உங்கள் பத்திரிகையில் போடுகிறீர்கள், ஆனால் பத்திரிகையை பார்த்தால் "வேண்டப்பட்டவர் செய்யின் குற்றம் குற்றமில்லை" என்ற எண்ண்ம் அல்லவா வருகிறது, ஒன்றை சொல்லி இன்னொன்றை ஏன் செய்வான் பேசாமல் அதை விடுத்து "வேண்டப்பட்டவர் செய்யின் குற்றம் குற்றமில்லை" என்றே உங்கள் பத்திரிகையில் போடலாமே..?

05. தமிழ் நாட்டில் அத்தனை பத்திரிகைகளும் சத்திய சாயி பாபாவை ஆதரித்து செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்த வேளையில் திடீரென பாபாவிடம் உண்மை இல்லை எனவும் அவர் விபூதி வரவளைப்பதும் லிங்கம் எடுப்பதும் எல்லாமே பித்தலாட்டம் என்று முன் பக்கத்தில் கவர் ஸ்டோரி வெளியிட்டு திடீர் பரபரப்பை கிளப்பி உங்கள் பத்திரிகையின் விற்பனையை கூட்டினீர்கள், நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும் என்று நான் உட்பட நம்பிய வாசகர்கள் ஏராளம். ஆனால் இப்போது, பாபா இறந்ததும் இப்போது உள்ள நிலமையில் அவரை விமர்சித்து எழுதினால் கல்லா கட்ட முடியாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டு அவரை போற்றியிம் புகழ்ந்தும் எழுதுகிறிர்களே.. உண்மையை சொல்லுங்கள் உங்கள் வாசகர்களை பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறிர்கள்..?

06. ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய குற்றவாழியே கருணாநிதியும் அவர் குடும்பமும் தான் இதர்க்கு சாட்சியாக இருக்கு கலைஞர் தொலைக்காட்சி, ஆனால் நீங்கள், உங்களை நடு நிலைவாதி(!)யாகவும் காட்டிகொள்ள வேண்டும் கலைஞரையும் பகைக்க கூடாது இதற்காக ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று ஒன்று நடக்காதது போல் காட்டிவந்து  இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதகரமானதை தொடந்து அதர்க்கும் கலைஞர் குடும்பத்துக்கும் சம்மந்தம் இல்லாதது போலவும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் எல்லத்தையும் சுருட்டியது ராசா தான் என்பதைப்போல மனசாட்சியே இல்லாமல் எய்தவன் இருக்க அம்பை புடித்துக் கொண்டு இருக்குறீர்களே இதுதான் உங்கள் பத்திரிகை தர்மமா..?

07. ஸ்பெக்ட்ரம் ஊழலில் நீங்கள் அடக்கி வாசிப்பதற்க்கு, சிபிஜ அதிகாரிகளின் அதிரடி சோதனையில் உங்கள் இதழின் இணையாசிரியர் "காமராஜ்" ம் சிக்கியதுதான் காரணமா..? உண்னமையில் நீங்கள் நேர்மையான சிகாமணிதான் என்றால் இதற்க்கு உங்கள் வாசகர்களுக்கு விளக்கம் கொடுத்து இருக்கலாம் இல்லையா..?

08. ஜெகத் கஸ்பரை புலிகளின் ஆதரவு மீடியாக்களே போட்டுதாக்கின்றது, ஜெகத் கஸ்பர் நல்லவரா கெட்டவரா என்று ஈழத்தமிழர்களே பட்டிமன்றம் நடத்துகிறார்கள். ஆனால் நீங்கள் அவரை வைத்து மறக்க முடியுமா.. தொடர் எழுதி, ஈழ பிரச்சனையை வைத்து எவ்ளோக்கு எவ்ளோ கல்லா கட்ட முடியுமோ கட்டினிர்கள், ஆனால் கஸ்பரோ மறக்க முடியுமா.. தொடரில் ஈழத்துக்காக சிறைச்சாலை சென்று வந்த நெடுமாறன் வைகோ சீமான் போன்றவர்களை "விவச்சாரம்" போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி கடுமையாக விமர்சித்ததும் இல்லாமல் இவர்கள்தான் பிரபாகரனை ஆட்டிவெக்கிறார்கள் என்றும், பிரபாகரன் தவறு செய்து இருக்கிறார் என்றும் இவர் எழுதியதை, பிராபாகரனின் தீவிர விசுவாசியான நீங்கள் எப்படி அனுமதித்தீர்கள்..? ஈழப்போர் நடக்கும் போது பிராபாகரனுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்வு இருப்பதை போல் ஈழம் பற்றி பொய்யான தகவல்களை அவர் வெளியிடும் போது ஈழ ஆதரவு இணையங்கள் எல்லாம் கொதித்து எழுந்தபோதெல்லாம் என்னிடம் ஆதரங்கள் இருக்கிறது இதோ வெளியிடுகிறேன் அதோ வெளியிடுகிறேன் என்று சொல்லி சொல்லி அதை கடைசி வரை வெளியிடவே இல்லையே அந்த ஆதாரங்களை! ஜெகத் கஸ்பர் உங்களிடமாவது காட்டியுள்ளாரா..?

09.பத்திரிகை உலகின் இன்றைய நிலவரப்படி புலனாய்வு இதழ்களிலேயே அதிக பிரதிகள் விற்பனையாவது உங்கள் நக்கீரந்தான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை, ஆனால் இந்த உயர்வு எப்படி வந்தது உங்கள் தி மு கா வுக்கு ஆதரவான் ஜால்ரா அரசியல் கட்டுரைகளாலா..! இல்லையே, ஒரு மஞ்சள் பத்திரிகைகே உரிய ஆபாசமான எழுத்துக்களுடன் தாங்கி வந்த சினிமா கிசு கிசுக்களும், நடிகைகளின் வாழ்க்கை வரலாறுகளும், நாட்டில் நடக்கும் கள்ள தொடர்வுகளும் உதாரணமாக, சூர்யா-ஜோதிகா- விக்ரமின் முக்கோண காதல், த்ரிஷா -த்ரிஷா அம்மா- விக்ரமின் முக்கோண நட்பு, அண்ணாச்சி-ஜீவஜோதியின்
கள்ளத்தொடர்பு , பிரவுதேவா- நயன்தாராவின் கள்ளக்காதல், நித்தியானந்தா-ரஞ்சிதா கள்ள உறவு போன்றவற்றை பயன்படுத்தி நீங்கள் வெளியிட்ட ஆபாச செய்திகளால் தானே, உங்கள் மனச்சாட்சிக்கு தெரிந்த இந்த உண்மையை வெளியே யாரும் கேட்டால் ஒத்துக்கொள்ளும் தைரியம் இருக்கா உங்களுக்கு..?

10.இறுதியாக ஒரு கேள்வி..
ஈழத்தின் இறுதி போர் தொடங்கி இன்று வரை ஈழச்செய்திகளை உங்களைப்போல் தமிழ் நாட்டில் எந்த பத்திரிகைகளும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது இல்லை, ஈழத்தின் மேல் அக்கறை உள்ள தமிழ் நாட்டு பத்திரிகைகளில் முதன்மையானது நக்கீரன் என்பது உலக தமிழர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆனால் ஈழபடுகொலைக்கு துணைபோன தி மு க மேல் உள்ள உங்கள் பாசம், புலித்தலைவர்களை நம்ப வைத்து நெருக்கடியான கடைசி நேரத்தில் கைவிட்டு துரோகம் செய்த கனிமொழியை என் சினேகிதி என சொல்லிக்கொள்ளும் உங்கள் நட்பு, ஈழ விசயத்தில் முன்னுக்கு பின் முரணாக பேசி தமிழ்மக்களால் சந்தேக கண்கலோடு பாக்கப்படும் ஜெகஸ்கஸ்பர் போன்றவர்களை வைத்து தொழில் செய்வது போன்றவை உங்கள் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை வர வைக்க மறுக்கிறது, ஒரு ஈழ தமிழனாக கேக்கிறேன் சொல்லுங்கள்..
உங்களுக்கு எங்கள் மேல் உள்ளது உண்மையான அக்கறையா..? அல்லது இதுவும் உங்கள் பத்திரிகை வியாபார தந்திரங்களில் ஒன்றா..?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...