பல விடயங்களை நாம் நினைத்தது போல் எழுதிவிடலாம்,
சில விடயங்கள் மட்டும் நாம் நினைத்தை அப்படியே எழுதி விடமுடியாது அப்படித்தான் இப்பதிவும் எனக்கு. பல நாட்களாக இதைப்பற்றி எழுதணும் எழுதணும் என்று நினைப்பேன் பின் ஏதோ ஒன்று என்னை தடுக்க அப்படியே கிடப்பில் போட்டு விடுவேன், இன்று எழுதிவிடுவது என்ற முடிவோடு ஆரம்பித்து விட்டேன். இதை மேற்கொண்டது எழுதுவது மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதற்கு சமமானதுதான் ஆனாலும் பரவாயில்லை இப்பதிவை படித்து ஒரு வெளிநாட்டு உறவாவது தங்கள் செய்கைகளையும் பார்வைகளையும் மாற்றிக்கொண்டால் அதுவே
எனக்கு போதுமானது.
மனிதர்கள் எப்போதுமே பாசத்துக்கு அடிமைப்பட்டவர்கள். மனிதர்களின்
வாழ்க்கை சுற்றி சுற்றி உறவுகளால் பின்னப்பட்டது. எனக்கு இப்போது கூட நினைவு இருக்குறது எங்கள் சொந்தங்கள் எல்லாம் வன்னியில்
இருந்த காலங்களில் எங்கள் குடும்பம் மட்டும் வவுனியாவில் இருந்தது,
வன்னியில் இருந்து கொழும்பு,வவுனியா வரும் என் அப்பாவின்
சொந்தங்களாக இருந்தாலும் சரி அம்மாவின் சொந்தங்களாக இருந்தாலும் சரி தங்கி செல்வது எங்கள் வீட்டில் தான், அதனாலே என்னவோ
எங்கள் வீட்டில் எங்கள் குடும்பம் என்று நாங்கள் எப்போதும் தனியாக இருந்ததே இல்லை எங்கள் வீட்டில் எப்போதும் யாராவது ஒரு விருந்தாளி இருந்துகொண்டே இருப்பார். அம்மாவும் அப்பாவும் மனம் நோகாதபடி அவர்களை விழுந்து விழுந்து உபசரிப்பது இப்போதும்
என் கண்களில் நிற்கிறது. அதை விட பாடசாலை விடுமுறை நாட்களில் யாரவது மச்சான்,மச்சாள் பெரியம்மா மகன்,மகள் என்று எங்கள் வீட்டில்தான் வந்து விடுமுறையை களிப்பார்கள். அப்படி வரும் நாட்களில்
என் பெற்றோர் எங்களை விட அவர்களைத்தான் அதிகம் கவனிப்பார்கள்.
எங்களுக்குள் சிறு சண்டை வந்தால் கூட என் பெற்றோர் அவர்கள் பக்கம் தான் நிப்பார்கள். சின்ன வயசில் இதற்காக என் பெற்றோருடன் சண்டை கூட போட்டு உள்ளேன் அதற்க்கு அவர்கள் சொல்லுவார் நீ என் பிள்ளை உன்னை கவனிக்கா விட்டாலும் பரவாயில்லை ஆனால் என்னை நம்பி அவர்கள் பெற்றோர் அனுப்பி இருக்கிறார்கள் அவர்களும் என்னை நம்பி வந்து இருக்கிறார்கள் அவர்கள் மனம் நோகாது நடந்து கொள்வதுதான் எனக்கு மட்டும் அல்ல உனக்கும் மரியாதை பெருமை என்று. அதை போல் நாங்கள் வன்னிக்கு எங்கள் சொந்தகாரங்கள் வீட்டுக்கு போனாலும் இதே கதைதான் அங்கேயும் அவர்கள் பிள்ளைகளை விட எங்களைத்தான் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் ஆக மொத்தம் ஊரில் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் பிற பிள்ளை தலை தடவினால் தன் பிள்ளை தானே வளரும் என்பது போலதான் அவர்கள் நடவடிக்கை அமைந்து இருக்கும். இதுவே அவர்களுக்கு சந்தோஷமும் கூட.
ஆனால் இதற்க்கு அப்படியே எதிர்மாரானவர்கள் நம் வெளிநாட்டு உறவுகள் என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை.
பிறர் பிள்ளையாய் குட்டி வளர்த்தால் தன் பிள்ளை நல்லாய் வளரும் என்பது இவர்களின் கணக்கு. ஊரில் பெற்றோரால் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டு யுத்தம் காரணமாகவோ கஸ்ரம் காரணமாகவோ அல்லது வெளிநாட்டு மோகம் காரணமாகவோ அரும்பு மீசையுடன் கனவுகளையும் வளர்த்துகொண்டு வெளிநாடு வரும் இந்த அப்பாவி ஜீவன்கள் அடைக்கலம் புகுவது வெளிநாட்டில் வாழும் தங்கள் சொந்தங்களிடமே அங்கே இவர்களுக்கு கிடைப்பது ஏமாற்றமும் விரக்தியும் மட்டுமே.
ஊரில் இருந்து வருவவர்கள் தாங்கள் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் செய்ய வேண்டும், மொத்தத்தில் தங்களுக்கு ஒரு நல்ல வேலைக்காரர்களாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் அசைக்க முடியாத எண்ணம். தங்கள் பிள்ளைகளையும் ஊரில் இருந்து வரும் பிள்ளைகளையும் இவர்கள் பார்க்கும் பார்வைகள் வேறு வேறு விதமாகவே இருக்கும். இரு பிள்ளைகளுக்கும் சம வயது இருந்தால் கூட தங்கள் பிள்ளைகளை நோகாமல் பார்த்துகொள்ளும் இந்த உத்தமர்கள் ஊரில் இருந்து வந்த பிள்ளையை எடுப்பார் கைபிள்ளை போல்தான் நடத்துவார்கள் தங்களின் அந்த இழி செயல்களுக்கு கூட ஒரு நியாயமான! காரணத்தை தேடி கண்டு பிடித்து சொல்வார்கள் 'என் புள்ள இங்க பிறந்து வளந்தபுள்ள அது கஸ்ரம் நஸ்ரம் பாக்காதது அதுக்கு என்ன தலை எழுத்தா கஸ்ரப்படனும் என்று', இதே ஊரில் இருந்து வந்த பிள்ளை என்றால் அங்கே சாப்பிட வழி அற்று நிறைய அடிபட்டு அவமானப்பட்டு இங்கே வந்தது அதனால் தாங்கள் எவ்வளவும் கேவலமாக அசிங்கப்படுத்தி கஸ்ரப்படுத்தினாலும் தாங்குவார்கள் தாங்கவேண்டும் என்பது இவர்களின் பணத்திமிரின் உச்சக்கட்ட தீர்ப்பு. உண்மையில் கஸ்ரமோ நஸ்ரமோ ஊரில் இருக்கும் பெற்றோரும் தங்களை போன்றுதான் பாசத்தைக்கொட்டி தங்கள் பிள்ளைகளை பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள், காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதை ஏனோ இந்த ஓரவஞ்சக்காரர்கள் சுலபமாக மறந்து விடுகிறார்கள்.
நான் பிரான்ஸ் வந்து படித்த காலங்களிலும் சரி இப்போது வேலைக்கு செல்லும் காலத்திலும் சரி ஊரில் செல்லமாக வளர்க்கப்பட்டு வெளிநாடு வந்து இப்படிப்பட்ட சொந்தங்களிடம்! வீட்டு கொடுமைகளையும்
அவமானங்களையும் சகித்துக்கொண்டு வாழ்பவர்களை சந்தித்துகொண்டுதேதான் இருக்குறேன். வெளியே சென்றால் அரவணைப்பார் இல்லாததாலும் விசா பிரச்சனை மொழி பிரச்சனை வேலைப்பிரச்சனை கூடவே வெளியே காத்திருக்கும் ஆபத்துக்கள் அதைவிட ஊரில் இருந்து பெற்றோர் உன் மாமா.. தானே சித்தி.. தானே சித்தப்பா தானே.. எனக்காக பொறுத்துக்கொண்டு இரு என்று எங்கே வெளியே போனால் தன் பிள்ளை கெட்டுவிடும் என்ற அச்சத்தால் அவர்கள் இடும் பாசக்கட்டளைக்கும் இவர்கள் எல்லாத்தையும் சகித்துக்கொண்டு அடிமையாகவே இருந்து விடுகிறார்கள்.
ஊரில் செல்லமாக வளர்க்கப்பட்டு வசதி இருந்தும் வெளிநாட்டு மோகத்தால் பிரான்ஸ் வந்து இங்கே சொல்லனா துயரத்தை அனுபவித்த என் நண்பன் ஒருவனின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்து இருக்குறேன் நான். எனக்கு அப்போது 17 வயது. பிரான்சில் காலேஜ் படித்து கொண்டு இருந்த காலம் அது. அப்போதுதான் புதிதாக வந்து அறிமுகமானான் அவன். பெயர் கணேஷ், எங்கள் வகுப்பில் மட்டும் அல்ல எங்கள் காலேஜ் இலேயே நாங்கள் இரண்டு பேர் மட்டுமே தமிழ் என்பதால் நாங்கள் விரைவிலேயே நண்பர்கள் ஆனதில் ஆச்சரியம் இல்லை. வகுப்பில் எப்போதுமே யாரையாவது கலாய்துகொண்டு கொண்டு
மொக்கை போட்டுகொண்டு இருப்பவன் நான். எனக்கு எதிர்மாறானவன் அவன். முகத்தில் எப்போதுமே ஒருவித சோகமும் விரக்தியும் அப்பியே இருக்கும் காரணம் கேட்டால் சொல்ல மாட்டான். சில நாட்களில் அழுத முகத்துடனேயே காலேஜ் வருவான் எங்கள் வகுப்பு ஆசிரியர் கூட அவனிடம் சந்தேகப்பட்டு வீட்டில் உனக்கு ஏதும் பிரச்சனையா என்று கூட கேடடு உள்ளார் எல்லாவற்றுக்கும் அவன் பதில் மறுப்பான தலை அசைவும் புன்னகையுமே. ஒரு நாள் அடிபட்ட காயங்களுடன் காலேஜ் வந்து விழுந்துவிட்டேன் என்று ஒற்ற வரியில் காரணம் சொல்லிவிட்டு இருந்தவனை என்னால் மட்டும் நம்ப முடியவில்லை தனியே அழைத்து போய் விசாரித்ததில் மழுப்பியவன் ஒரு கட்டத்தில் உடைந்து போய் தேம்பி தேம்பி அழவே தொடக்கிவிட்டான், அதன் பின் அவன் சொன்ன காரணங்கள் எல்லாம் பக் பக் ரகம்.
வீட்டுக்கு ஒரே ஆண்பிள்ளை அவன், வெளிநாட்டு ஆசையில் படிப்பை குழப்பி அடித்துக்கொண்டு பிரான்ஸ் வந்தவன் அடைக்கலம் ஆனது தன்
மாமன் ஆனா தாயின் சகோதரன் வீட்டில், ஆரம்பத்தில் எல்லாமே நல்லாத்தான் போனது போக போக அவனை வீட்டு வேலைக்காரர் ஆக
பார்க்க தொடக்கிவிட்டார்கள் அவர்கள், அதைவிட குடிகாரர் ஆன இவன் மாமா விடியப்பறம் இரண்டு மணிக்கு வந்தாலும் இவன்தான் எழுந்து
சாப்பாடு போட்டு கொடுக்கணும், அவர்கள் பிள்ளைகள் பாடசாலை
முடிந்து வந்து இன்டர்நெட் இருக்கும் போது கூட அவர்கள் பசி அறிந்து ஏதாவது சாப்பிட மேசைக்கு கொண்டு போய் வைக்கவேண்டும் அவர்கள்
பிள்ளைகள் ரியூசன் போனாலும் சரி விளையாட போனாலும் சரி பின்னால்
இவனும் காவலுக்கு போக வேண்டும், நண்பர்கள் சக உறவினர்களுடன் பேச
தடை மொத்தத்தில் வீட்டு சிறையில் அடைத்து வேலைக்காரன் ஆக வைத்து இருந்தார்கள். அவனுக்கு அவர்கள் கொடுத்த ஒரே சுதந்திரம் காலேஜ் போக அனுமதித்ததுதான், அது கூட பதினெட்டு வயதுக்கு குறைய
இருப்பவர்களை படிக்க விடாமல் வீடோடு வைத்து இருந்தால் இங்கத்த அரசாங்கத்துக்கு பதில் சொல்ல வேண்ட்டும் என்ற பயத்தால். இத்தனை கொடுமைகள் பத்தாது என்று அவன் செய்கைகளில் பிழை கண்டு பிடித்து அடித்து சித்திரவதை செய்யவும் ஆரம்பித்து விட்டார்கள். பல இரவுகள் அடித்து வீட்டுக்கு வெளியே விட்டும் கதவை சாத்தி இருக்கிறார்கள், கணவன் மனைவிக்குள் வரும் சண்டை கூட இறுதியில் இவனை அடிப்பதில்தான் முடியுமாம். இரவில் கண்ணீர் விட்டு அவன் தலையணையை நனைக்காதா நாட்களே இல்லை என்றான். இதையெல்லாம் கேட்டு எனக்கு அவர்களை விட அவன் மேல் தான் அதிக கோவம் வந்தது, என்னைப்பொறுத்தவரை குட்டுபவனை விட குட்டு வாங்குபவன்தான் முட்டாள்.
இவ்வளத்தையும் கேட்ட பின் திரும்பவும் என் நண்பனை அவன் மாமா வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு சத்தியமாக இரவு என்னால் நிம்மதியாக தூங்கி இருக்க முடியாது, என் நண்பனிடம் மனம் விட்டு பேசினேன் பின் அடுத்து என்ன செயலாம் என்று கூறி அதனால் வரும் நன்மைகளையும் தீமைகளையும் பட்டியல் இட்டு கூறிவிட்டு காலேஜ் மதிய சாப்பாட்டு நேரம் காலேஜ் கேட் ஏறி குதித்து ஒரு தமிழ் கடைக்கு வந்து நான் போட்டு இருந்த சங்கிலி மோதிரம் இரண்டையும் வித்ததும் கையில் ஒரு 650ஜீரோ கிடைத்தது (இந்த சங்கிலிமோதிரம் வித்து நான் வீட்டில் பட்ட பாடை ஒரு தனி பதிவாகவே போடலாம்) அந்த பணத்தை என் நண்பனிடம் ஏதும் அவசரம் என்றால் வைத்துகொள் என்று கூறி கொடுத்துவிட்டு அவனை அழைத்துக்கொண்டு பிரான்சில் ஆதரவு அற்றவர்களுக்கு உதவிசெய்யும் ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்று அவன் நிலையை சொல்லி தங்கவும் படிக்கவும் உதவி கேட்டோம். அங்கே எங்கள் இருவருக்கும் பதினெட்டு வயதுக்கு குறைவு என்பாதால் அவர்கள் போலீஸுக்கு போன் பண்ண அவர்கள் வந்து எங்கள் இருவரையும் குண்டடியாக தூக்கி சென்று ஸ்டேசனில் வைத்துக்கொண்டு இருவீட்டாருக்கும் போன் பண்ணி வர சொல்லி விட்டார்கள். இருளத்தொடங்கிவிட்டது. இருவரும் இது புதுஅனுபவம் அதை விட இப்படியெல்லாம் நடக்கும் என்று நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதால் பயத்தில் உறைந்துபோய் நிற்கின்றோம், சிறிது நேரத்துகெல்லாம் இரு வீட்டாரும் வந்து விட்டார்கள் விடிய விடிய நடக்கிறது விசாரணை இறுதியில் என் நண்பனை நாளை கோட்டில் ஆஜர் படுத்த போவதாக சொல்லி அவனை மட்டும் மறித்துக்கொண்டு எங்கள் எல்லோரையும் அனுப்புகிறார்கள் என் நண்பன் ஓடி வந்து என் கைகளை இறுக பற்றுகிறான் ஒரு பெண் போலீஸ் வந்து என் கையை பிடித்த அவன் கைகளை விலக்கி உள்ளே அழைத்து செல்கிறாள் எல்லாம் ஒரு கனவு போல் நடக்கிறது வெளியே வந்த எனக்கு என் நண்பனின் மாமா கொடுத்த சாபங்கள் இன்றுவரை என்னால் மறக்க முடியாதது. எங்கள் வீட்டுக்கு வந்ததும் என் வீட்டார் எனக்கு செய்த அர்ச்சனைகள் எதுவுமே எனக்கு ஏறவில்லை மாறாக என் நண்பனின் அந்த கடைசி நேர பரிதாப முகமே கண்முன் நிழலாடுகிறது. அடுத்த நாள் கோட்ஸ்க்கு நண்பன் வருவான் என்று தெரியும் எவ்வளவு கெஞ்சியும் வீட்டில் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது, மூன்று நாட்கள் வீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை நாலாம் நாள் என் நண்பனை எதர்பார்த்த படி காலேஜ் விரைகிறேன் அங்கே அவன் இல்லை நாட்கள் வாரங்கள் ஆகி வாரங்கள் மாதங்கள் ஆகிறது அவன் தகவல்தான் ஏதும் இல்லை, சுத்தி சுத்தி எல்லா இடமும் விசாரித்தும் பயன் இல்லை, எங்கே நான் தான் தப்பு செய்து விட்டோமோ என்று மனச்சாட்சி உறுத்த முள்ளின் மேல் இருப்பதை போல் நாட்களை கடத்திக்கொண்டு இருக்கிறேன். பல மாதங்களின் ஒரு நாள் காலேஜ் வகுப்பில் நுழைந்து என் அருகே வந்து அமர்கிறான் என் நண்பன், சத்தியமா என் வாழ்க்கையில் அன்று அனுபவித்த சந்தோஷத்தை இன்றுவரை அனுபவித்தது இல்லை, எங்கே என் நண்பனின் வாழ்க்கையை நானே அழித்ததுவிட்டேனோ என்று குற்ற உணர்வில் துடித்துக்கொண்டிருந்த எனக்கு அவனது வருகையும் புன்னகை முகமும் பெரும் மனநிறைவை தந்தது. "மச்சான் இப்போதுதாண்டா நான் வெளிநாட்டில் இருப்பதை போல் உணர்கிறேன்டா.. இந்த சந்தோஷம் உன்னால் வந்தது தேங்க்ஸ்டா துஷி" அவனுடைய இந்த ஒரு வார்த்தை போதும் அவனுக்காக நான் பட்ட காயங்களையும் அவமானங்களையும் ஆற்ற.
வெளிநாடுவாழ் உறவுகளே.. தயவுசெய்து உங்கள் பிள்ளைகள் மேல் காட்டும் அன்பில் ஒரு சிறிய அளவையேனும் உங்களையே தஞ்சம் என
நம்பி வந்து இருக்கும் அப்பாவி ஜீவன்கள் மேலும் காட்டுங்கள் அல்லது
அன்பைக்காட்டாவிட்டாலும் அவர்கள் மேல் வெறுப்பையேனும் உமிழாமல்
இருங்கள். ஒன்றை மட்டும் உங்கள் மனதில் ஆழமாக பதித்து வையுங்கள்
நீங்கள் எவ்வளவு கஸ்ரப்பட்டு பத்துமாசம் சுமந்து பிள்ளையை பெற்று
எடுகிறிர்களோ அதேபோல்தான் ஊரில் இருப்பவர்களும், அவர்கள்
குறைமாதத்திலோ அல்லது எந்தவித வலியையும் அனுபவிக்காமலோ
குழந்தையை பெற்ரெடுப்ப்பது இல்லை. உங்களுக்கு உங்கள் பிள்ளைகள் மேல் இருக்கும் பாசத்துக்கு எந்தவிதத்திலும் குறைந்தது இல்லை அவர்கள்
தங்கள் பிள்ளைகள் மேல் காட்டும் பாசம். அவர்களிடம் உங்களிடம் இருப்பதுபோல் பணம் இல்லாவிட்டாலும் அவர்களும் தங்கள் பிள்ளைகளை பொத்தி பொத்தி வளர்த்து வலிகளையும் வேதனைகளையும்
அடக்கி கொண்டுதான் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்பதை
மறக்காதீர்கள் தயவுசெய்து.
டிஸ்கி 1 : வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் இப்படியல்ல, அதற்காக
ஒருசிலர்தான் இப்படி என்று சொல்லக்கூட என் மனச்சாட்சி இடம் கொடுக்க வில்லை, வெளிநாடுவாழ் நம்மவர்களில் ஒரு சிலரை விட பெரும்பாலானர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை.
டிஸ்கி 2 : இப்பதிவில் சொல்லிய என் நண்பனின் கதை அத்தனையும் உண்மை, சொல்லபோனால் அவனுக்கு அவர்கள் வீட்டில் நடந்த கொடுமைகள் சிலவற்றை இப்பதிவில் மறைத்து உள்ளேன், காரணம் அவற்றை எல்லாம் எழுத எனக்கே வெக்கமாக இருக்கிறது.
டிஸ்கி 3 : சாரிடா கணேஷ் , உன்னிடம் கேட்காமல் உன் கடந்தாகால
வாழ்க்கையை பதிவிட்டத்துக்கு.