ஞாயிறு, ஜூன் 05, 2011

வயசு அதிகமான பெண்களை காதலிப்பது தப்பா..?

ண்களால் முதல் காதலை மறக்கவே முடியாது அதிலும் அந்த அறியா வயசில் வரும் பப்பி லவ் சான்ஸே இல்லை,  தயங்கி தயங்கி தங்களுடைய முதல் காதலை வெளியே சொல்லும் ஒரு சில ஆண்கள் கூட அதற்க்கு முன்னால் வரும் தங்கள் பப்பி லவ்வை மறந்து கூட வெளியே சொல்வது இல்லை, வெளியே சொன்னால் எங்கே இது பிஞ்சிலேயே பழுத்தது என்று சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தால்.
அதிலும் பல ஆண்களுக்கு பப்பி லவ் வருவதே  தங்களை விட வயது அதிகமான பெண்கள் மீதுதான்.

எனக்கும் சின்ன வயசில் இப்படி ஒரு காதல் வந்து இருக்கிறது, அவளுக்கு என்னை விட 4 வயது அதிகம், அவளை பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் அழகு என்று சொல்லலாம், அவள் எனக்கு சொந்த மச்சாளும் கூட,  நான் எங்கள் வீட்டில் தங்கியதை விட அவர்கள் வீட்டில் தங்கியதுதான் அதிகம். அவர்கள் வீட்டிலும் சரி எங்கள் வீட்டிலும் சரி எங்கள் ரெண்டு பேருக்கும் தான் திருமணம் செய்து வைக்க போவதாக சொல்லி எங்களைக் கிண்டல் பண்ணுவார்கள். நாங்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே சுத்தி திரிந்தாலும் இந்த திருமண விசயத்தைப்பற்றி எங்களுக்குள் பேசியதும் இல்லை மற்றவர்கள் பேசும் போது மறுத்ததும் இல்லை ஆனாலும் மனசுக்குள் ஒருவரை ஒருவர் நேசித்துக்கொண்டேதான் இருந்தோம், அதிலும் அவள் மேலான என் காதல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.  சில வருடங்களில் நடந்த யுத்தத்தின் காரணமான இடம்பெயர்வால் அவள் குடும்பமும் எங்கள் குடும்பமும் பிரிந்து விட்ட நிலையிலும் அவள் மேலான என் காதல் மட்டும் வளர்ந்து கொண்டேதான் இருந்தது.

சமீப காலத்தில் அவள் மேலான என் காதலை கிட்டத்தட்ட மறந்து விட்ட நிலையில்   "டேய் உன் மச்சாளுக்கு கல்யாணமாம்டா ..  பையன் வெளி நாட்டில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறானாம்" என்று என் உறவினர் ஒருவர்  சொன்ன போது மனசு வலித்தது இன்னும் மிச்ச சொச்சம் இருக்கும் அவள் மேலானா காதலையே   காட்டிக்கொடுத்தது.  

முடிந்து போன  என்னுடைய இந்த பழைய காதல் கதையை இப்போது என் நண்பர்கள் யாரிடமாவது சொன்னால் அவர்கள் கேக்கும் முதல் கேள்வி, டேய் லூசாடா நீ..! எப்புடிடா உன்னை விட 4 வயசு அதிகமான பெண்ணை காதலிச்ச..! என்றுதான். ஒரு ஆண் தன்னை விட 7, 8 வயது குறைந்த ஒரு பெண்ணை திருமணம் செய்யும் போது ஒரு பெண் ஏன் தன்னை விட வயது குறைந்த ஆணை திருமணம் செய்யக்கூடாது..! இது என் பதில் வாதமாக இருக்கும். அதற்க்கு அவர்கள் எப்போதுமே சரியான பதில் தந்ததே இல்லை, இங்கு வெளி நாட்டில் தன்னை விட வயது மூத்த பெண்களை ஆண்கள் சர்வசாதாரணமாக திருமணம் செய்துகொன்று சந்தோஷமாக வாழ்வதை பார்த்து இருக்கிறேன்,

ஆனால் நம் நாட்டில்தான் நாம் இத்தகைய திருமணங்களை ஆதிரிப்பது இல்லை, தப்பித்தவறி ஒரு சில திருமணங்கள் இப்படி நடந்து விட்டால் கூட அதை நம்மால் முடிந்தளவு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கேவலப்படுத்தி பேசுகின்றோம். தங்களை விட வயது அதிகமான பெண்களை மனசுக்குள்ளேயே காதலித்து சுற்றியிருப்பவர்களுக்கு பயந்து அதை வெளியே சொல்லாமல் இருக்கும் எத்தனையோ பேரை பார்த்து இருக்கிறேன், ஒருவிதத்தில் அவர்கள் மேல் பரிதாபம் வந்தாலும் அதிகமாக அவர்கள் கோழைத்தனம் மீது கோவம்தான் வருகிறது. நாம் வெளி நாட்டவர் போல் வாழவேண்டும் என்பது என் வாதம் அல்ல இந்த திருமண விசயத்தை அவர்களைப்போல் சர்வசாதாரணமாக எடுத்து ஏன் கடந்து போகக்கூடாது என்பதுதான் என் வாதம்.

அண்மையில் கூட ஒரு பத்திரிகையில் இப்படிப்பட்ட ஒரு திருமண செய்தி வந்து இருந்தது, அதற்க்கு வந்து இருந்த வாசகர் கருத்துரைகள் பெரும்பாலும் அவர்களை கேவலமாக சித்தரித்தே வந்து இருந்தது, அதிலும் ஒரு சில  வாசகர்கள் ஒரு படி மேலே போய் இத்தகைய திருமணம் செய்துகொண்ட சில பிரபல ஜோடிகளை குறிப்பாக "ஐஸ்வர்யா - தனுஷ்"  'ஐஸ்வர்யா ராய் - அபிஷேக்பச்சன்" போன்றவர்களையும்  மிகமோசமாக விமர்சித்திருந்தமை அவர்களுடைய ஊனமான மனசையே காட்டிகொடுத்தது. காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள் அது ஜாதி மதம் ஏழை பணக்காரன் என்று எதுவும் பார்ப்பது இல்லை அப்படி இருக்கையில் அது வயசை மட்டுமா பாக்க முடியும்..?   அதிலும் 40 வயது ஆண்  20 வயது பெண்ணை திருமணம் செய்தால் அதை சர்வசாதாரணமாக எடுக்கும் நம் அறிவுஜீவிகள் ஏன் ஒரு பெண் ஒரு சில வயது மட்டுமே குறைந்த ஆணைத்திருமணம் செய்தால் மட்டும் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து அந்த பெண்ணின் நடத்தையையே தப்பா பேசுகிறார்கள். இங்கே ஆண் செய்தது தவறு இல்லை என்றால் பெண் செய்தது மட்டும் எப்படி தவறாகும்..! 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...