திங்கள், ஆகஸ்ட் 01, 2011

இவர்களா...? வெளிநாட்டு மாப்பிள்ளை.

ஊரில் பழைய காலத்தில் அரசாங்கத்தில்   ஏதாவது  ஒரு வேலையில்    இருப்பவர்களுக்குத்தான் என் பெண்ணைக்கட்டிக்கொடுப்பேன்
என்று  பெண்ணைப்பெற்ற பெற்றோர் வீம்பாக இருப்பார்கள் என்று
என் தாத்தா பாட்டி பேசும் போது கேட்டு இருக்கேன்.  ஆனால்
இப்போது அந்த நிலை கொஞ்சம் வலுவிழந்து யாராவது ஒரு
வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண்பிள்ளைகளை
கட்டி வைக்க ஊரில் இருப்பவர்கள்   நாயாய் பேயாய் அலைவது
மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு.
ஊரில் இருந்து யாராவது பெண் கேட்டு வந்துவிட்டால் மட்டும்
அவன் குணம், குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்கும் இந்த அறிவு ஜீவிகள் அதே ஒரு வெளிநாட்டு
மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் எந்த விசாரிப்புக்களும் இன்றி
முன்பின் தெரியாதவனுக்கு வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக பொத்தி பொத்தி வளர்த்த அந்த அப்பாவிகளை
அவனுடன் அனுப்பிவைப்பது எந்த வகையில் நியாயம்..!

வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக
கட்டிக்கொடுத்துவிட்டு அவர்கள் அங்கே நிம்மதியாக!  இருந்து விடுகிறார்கள் ஆனால் இந்த  அப்பாவிகள் இங்கே படும் பாட்டை
இவர்கள் அறிகிறார்களா..?  "பாவம் இவர்கள் அறிவதில்லை" என்ற
ஒரே வசனத்தில் இவர்களை தப்பவிட முடியாது,  முன்பு ஒரு
காலத்தில் வேண்டுமானால் இங்கு நடப்பது இவர்களுக்கு
தெரியாமல் இருக்கலாம் ஆனால் இப்போது நிலமை
அப்படி இல்லை எல்லாம் தெரிந்து இருந்தும் இவர்கள்
வெளிநாட்டு மோகம் எல்லாத்தையும் மறைத்து விடுகிறது.  இந்த வெளிநாட்டு மோகத்துக்கு எங்கள் குடும்பத்தில் உள்ள
ஒருவருடைய வாழ்க்கையையும் பலி கொடுத்துள்ளோம். 
என் அத்தை. நன்றாக படித்தவர் அழகானவர், எனக்கு தெரிந்தே ஊரில் இவரை நிறைய பேர் பெண் கேட்டு வந்தார்கள் ஆனால் என் தாத்தா கட்டிக்கொடுத்தால் வெளிநாட்டு மாப்பிள்ளைக்குத்தான்
கட்டிக்கொடுப்பேன் என்று பிடிவாதமாய் நின்று புரோக்கர் மூலம்
வந்த ஒரு நோர்வை மாப்பிள்ளையை தெரிவுசெய்து,
அத்தை தாத்தாவுக்கு கடைசி பெண் ஒரே பெண் என்பதால்
அதிக சீதனம் கொடுத்து இந்தியா கூட்டிச்சென்று மிக பிரமாண்டமாக திருமணம் செய்துவைத்து அவனுடன் நோர்வை அனுப்பிவைத்தார். நோர்வை சென்ற சில மாதங்களிலேயே அவன் வண்டவாளங்கள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியது, எல்லாவற்றுக்கும் உச்சமாக அவனுக்கு நோர்வையில் ஒரு நோர்வைக்காரியுடன் திருமணமாகி (எழுத்தில் இல்லாமல்) இரண்டு குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. நியாம் கேட்ட அத்தைக்கு கிடைத்தது அடி உதைதான். யாருடைய ஆதரவும் இன்றி அவனுடன் போராடி விவகாரத்து வேண்டி அத்தை வெளியே வந்த போது அவருடன் வந்த ஒரே சொத்து அவன் கொடுத்த பெண் குழந்தைதான். இனி என் வாழ்க்கையில் திருமணம் என்ற
பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி அந்த பெண் குழந்தையுடன் தனியே வாழ்ந்து வருகிறார் அத்தை. அத்தையின் இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்று நினைத்து வேதனைபட்டே தாத்தாவும்
இறந்து விட்டார். இதில் அசிங்கம் என்ன வென்றால்  எங்கள்  தாத்தாவை  ஏமாத்திய அந்த அயோக்கியனின் செய்கைகள்
எல்லாத்துக்கு அவன் தாயும் சப்போட் என்பதுதான்.
இப்போது அவனுக்கு மீண்டும் திருமணம் பேசுபடுதாம் பாவம் எந்த அப்பாவி பெண்ணின் வாழ்க்கை சீரழியப்படப்போகுதோ..

ஊரில் இருப்பவர்களின் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தை இங்குள்ளவர்களும் அழகாக பயன் படுத்திக்கொள்கிறார்கள். அங்கிருப்பவர்களிடம் ஏதோ சொர்க்கத்துக்கே அதிபதிபோல் காட்டிக்கொள்ளும் இவர்களின் உண்மை நிலை இங்கிருக்கும் எங்களுக்குத்தானே வெளிச்சம். இப்படியான இவர்களின் பந்தாவைக்கூட ஓரளவு சகித்துக்கொள்ளலாம் ஆனால் ஊரில் தங்களுக்கு பெண் பாப்பவர்களிடம் பொண்ணு த்ரிஷா மாதிரி மெல்லிசா இருக்கனும்
தமணா கலரில் இருக்கனும் என்று சொல்லுவது இருக்கே..
கடவுளே, இந்த ஆணழகன்கள் தங்கள் முகத்தை கண்ணாடியில் பாப்பதே இல்லைப்போல் இவர்களைப்போலவே அந்த பெண்களும் எங்களுக்கு வரும் மாப்பிள்ளைமார் சூர்யா மாதிரியோ ஆர்யா மாதிரியோதான் இருக்கணும் என்றாள் இவர்களுக்கு எல்லாம் எப்படி கல்யாணம் ஆகிறதாம்! அண்மையில் கூட இப்படிப்பட்ட ஒரு வெளி நாட்டு மாப்பிள்ளையின் கூத்தைப்பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே எனக்கு தெரியாமல் போச்சு. அவர் என் அண்ணாவின் ப்ரண்ட் இங்கே தனியேதான் இருக்காரு அவரின் அப்பா செத்து மூன்றே மாதங்கள் ஆன நிலையில்
நானும் அண்ணாவும் அவர் வீட்டுக்கு போய் இருந்தோம். எங்களை வரவேற்று பேசிக்கொண்டு இருந்தவர் தான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சொன்னபோது அண்ணா பொண்ணு யாரு
எங்க இருக்கா எப்படி தெரியும் என்று விசாரித்த போதுதான் அந்த வெக்கம்கெட்ட செயலை கொஞ்சமும் கூச்சமும் இல்லாமல் அவர் சொன்னார்.  தன்னுடைய தந்தையின் இறந்தவீட்டை தான் வீடியோ எல்லாம் எடுத்து பெருசாக செய்ததாவும் அந்த வீடியோ கொப்பி தனக்கு அனுப்பட்டபோது அதில் ஒரு அழகான பொண்ணு ஒடியாடி வேலை செய்துகொண்டு இருந்ததாகவும், தன் தாயிடம் போன் பண்ணி அது யார் என்று கேட்ட போது அது பக்கத்துவீட்டு பொண்ணு என்று விவரம் சொன்னதும் அவளை தனக்கு புடித்து இருப்பதாக சொல்லி பொண்ணு கேட்க்க சொன்னாராம்,  தந்தை இறந்து சில வாரங்களே ஆனதால் இப்போது போய் பெண்கேட்டால் அவர்கள் தன்னை தப்பா நினைப்பார்கள் என்று அந்த தாய் மறுத்துவிட அதை இவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம் ஏனெனில் அந்த அழகான பெண்ணை அதர்குள் யாராவது கொத்திப்போய் விடுவார்களாம். பின் ஒரு வழியாகா தாயை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாராம். இப்போது எல்லாம் ஓக்கே ஆகி அந்த பெண்ணுடன் போனில் பேசுவதாகவும் அவர் சொன்ன போது என் எதிரே இருந்த அவரை நிமிர்ந்து பார்த்தேன். சத்தியமாக என் கண்ணுக்கு அவர் ஒரு மனிதப்பிறப்பாகவே தெரியவில்லை ஒரு அருவருக்கத்தக்க புளுவாகவே கண்ணுக்கு தெரிந்தார். தங்களுக்கு மாப்பிள்ளையாக  வருபவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி வெளிநாட்டில் இருந்தால் மட்டும் போதும் என் ஊரில் இருப்பவர்கள் நினைப்பதும், தங்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் ஒரு தகுதியே போதும் ஜஸ்வர்யாராயைக்கூட
பொண்ணு கேட்கலாம் என இங்கு இருப்பவர்கள் நினைப்பதும் கொடுமையின் உச்சம். சிந்திப்பார்களா இவர்கள்..?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...