நமக்கு மட்டும் ஏந்தான் எல்லாமே இப்படி ஆகுதோ தெரில்ல.. :((
நமக்கும் குட்டிம்மாவுக்கும் கல்யாணம் பிக்ஸான உடனேயே நம்ம வீட்டு பெரியவங்க எல்லாம் ஒன்று சேர்ந்து 'அதான் முடிவாயிட்டெல்ல, இனி பொண்ணு பையன் வீட்டையே நிக்கட்டும்.. என்னதான் ஒண்டுக்க ஒண்டா இருந்தாலும் இனி கொஞ்சம் அதிகமாவே ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சு நல்லா பழகிக்கணும் இல்ல..' அப்படிண்ணு சொன்னத கேட்டதுமே நாம அப்படியே ஷாக்'காகிட்டோம் என்றா பாருங்களேன்.
அடியாத்தீ... வழமையா இவிங்க வில்லங்கமா பேசி கல்யாணம் வரைக்கும் பக்கத்திலேயே அண்ட விட மாட்டாங்களே, ஆனா இங்கே எல்லாமே தலைகீழா நடக்குதே...! என்று குழப்பிட்டே இருந்தோமா, அப்புறந்தான் புரிஞ்சுது அவிங்க பொண்ண பழக கூட்டியாந்தது நம்ம கூட இல்லயாம் பெரியவங்க அவிங்க கூடவாம். அவ்வ்வ்வ்... என்ன ஒரு வில்லத்தனம். :((
சரி வுட்றா துஷி, வாழ்கையென்றாலே இப்படியான துரோகங்களும் ஏமாற்றங்களும் சகஜம்தானேடா.. அப்படிண்டுட்டு நாமளும் ஃப்ராண்ஸ் வந்து சரி ஃபோனிலேயாவது பழகலாமே என்று வீட்டுக்கு ஃபோனைப்போட்டா.., அங்காலப்பக்கம் அவள சுத்தி ஒரு கிராமமே ஆ'வென்று பாத்துக்கிட்டு ஒக்காந்திருக்கும். நாம ஏதாவது அவ கிட்ட கேட்டா சுத்தி இருக்கிறவங்க எல்லாம் நமட்டு சிரிப்போட பதில் சொல்லுறது இங்கிட்டு நமக்கு கேக்கும். நாமளும் அசடு வழிஞ்சுக்கிட்டே ஃபோனை வைச்சுடுவோம்.
இப்படியே நம்ம 'பழகணும்' என்ற ஆசை நிறைவேறாமலே இருக்கும் போதுதான் ஒரு நாள் எதார்த்தமா அங்கால ஃபோனை போட்டா, ஆச்சரியமா அதிசயமா நம்ம குட்டிம்மா 'ஹலோ..' எங்கிறா. நமக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல நம்பவும் முடியல்ல. இதற்கிடையில் அவ நாலு வாட்டி 'ஹலோ.. ஹலோ..' என்றுட்டு பதிலே இல்லாததால டொக்'குண்ணு ஃபோனை வேற வைச்சுட்டா. வைச்சுட்டா மட்டும் விட்றவமா நாங்க..? விட்றவமா எங்கிறேன்.. விட்டா இப்படி ஒரு சான்ஸ் மறுபடியும் கிடைச்சுடுமா என்ன.. ??
மறுபடியும் ஃபோனைப்போட்டு நாமளும் 'ஹலோ..'என்ற, 'ஹய்யோ நீயா.... எப்படிடா இருக்க..' என்று அங்காலப்பக்கமும் சந்தோஷத்தில் திக்குமுக்காட. உடனே நாம, 'ஹேய்ய்ய்.. குட்டிம்மா, வழமையா எப்பவுமே உன்ன சுற்றி ஒரு கிராமமே ஒக்காந்திருக்குமே எங்கப்பா அதுங்க எல்லாம்..? என்று சந்தேகமாவே கேக்க', அவ கடுப்பா 'பெரியவங்கள இப்படியா பேசுவ..' என்று சொல்லியபடியே அவங்க ஒவ்வொருத்தரும் போன இடங்கள விலாவாரியா சொல்லீட்டே போக உடனே 'ஹய்யோ....... எங்காவது போயிருக்கட்டும் அத விடு, ஹேய் குட்டிம்மா அவிங்க வாறதுக்குள்ள நாம ரெண்டு பேரும் பழகுவோமா..' என்று நாம கேட்டோமா... சட்டுண்ணு அங்காலப்பக்கம் பேச்சுமூச்சே இல்ல.
ஆனா.., அங்கிட்டு அவ திக்'குண்ணு ஆயிட்டா என்று மட்டும் நமக்கு புரிஞ்சு போச்சு. நாம உடனேயே உசாராகி 'ஹேய்.. ஹேய்.. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணுமில்லப்பா.. ச்சும்மா பேசி பேசி ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சு பழகிப்போம் என்றுதான் சொல்ல வந்தேன்' என்று சொன்னாப்பிறம்தான் 'ஓ.. அதுவா.. ஓக்கே ஓக்கே' என்று அங்காலப்பக்கம் சத்தமே (மூச்சே) வந்திச்சு. (ஹீ..ஹீ....).
அப்பாடா.. நெருங்கீட்டோம் இல்ல என்று நம்மளுக்கு ஒரே குஷியாப்போச்சு. சரி எல்லோரும் எங்க இருந்து தொடங்குவாங்க நாமளும் அங்கேயிருந்தே தொடங்குவோம் என்று நினைச்சவாறே... 'குட்டிம்மா உனக்கு என்னென்ன பிடிக்கும் பிடிக்காது என்று சொல்லேன்' என்றமா 'சின்ன வயசிலேருந்து பார்த்துட்டே இருக்கே, உனக்கு தெரியாதா எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று..? உடனே அவ வார, நாம கடுப்போட 'அடி லூஸு.. கேட்டா கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுடி..' என்று எகிற அவ சிரித்தபடியே.. 'ஓக்கே துஷிக்குட்டி (அவ்வ்வ்) உனக்கு பிடிச்ச எல்லாமே எனக்கும் பிடிக்கும்.. உனக்கு பிடிக்காத எதுவுமே எனக்கும் பிடிக்காது' என்று சொ(ஜொ)ல்ல நாம அப்படியே உருகிப்போயிட்டம் அப்படிண்ணு சொல்லப்போறேன் என்று தானே நீங்க நினைக்கிறீங்க..!! ஆனா அதான் இல்ல நாம பதிலுக்கு செம காண்டாகிட்டோம் இல்ல.
'அடியே மக்கு.. மக்கு.., இப்படி ஊரில எத்தன பேரடி கிளம்பியிருக்கீங்க.. அதெப்படி எனக்கு பிடிச்சது எல்லாமே உனக்கும் பிடிக்கும்..?! பொய் சொல்லுறதுக்கு ஒரு அளவே வேணாம்.. பொண்ணுங்க எல்லோருமே இப்படித்தாண்டி பசங்கள பற்றி தப்புக்கணக்கு போடுறீங்க.. இப்படி சொல்லுற பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு பிடிக்குமுண்ணு நீங்களாவே நினைச்சுக்கிட்டு இப்படியெல்லாம் அடிச்சுவிட்டே இம்சை பண்றீங்க.. நிஜமாவே இப்படியான பொண்ணுங்கள பசங்களுக்கு கொஞ்சமும் பிடிக்காது தெரியுமா..' என்று நாம கொஞ்சம் சூடாவே எகிற.
பதிலுக்கு அவ 'நா ஒண்ணும் பொய் சொல்லல நெசமாவே அப்படித்தான்.. அதெல்லாம் தன் பார்ட்டனர ரெம்ப நேசிக்கிறவங்களாலதான் புரிஞ்சுக்க முடியும்.. உன்னால எல்லாம் புரிஞ்சுக்க முடியாதிடா..' என்று கடுப்பாக, அப்போத்தான் நமக்கு ஆஹா... கொஞ்சம் ஓவறாத்தான் போயிட்டோமோ என்று ஒரே பீலிங்காப்போச்சு.
அப்புறம் சட்டுண்ணு நாமளும் கூலாகி 'கோவிச்சுக்காத குட்டிம்மா.. ஏதோ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்(!) ஹீ..ஹீ... சரி வுடு., பசங்களுக்கு எப்படியான பொண்ணுங்கள பிடிக்குமுண்ணு சொல்லுறேன்.. சரி வாணாம் (அவ்வ்வ்..). துஷி கூட குட்டிம்மா எப்படி எல்லாம் இருக்கணும், எப்படி எப்படி எல்லாம் நடந்துக்கணும் என்று துஷி ஆசைப்படுதுண்ணு சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ.. நோட் பாயிண்ட் செல்லம்.. :))' ஆங்......
"அஜீத் என்றா எனக்கு ரெம்ப பிடிக்கும் தெரியுமா..? என்ன ஒரு அழகு.. என்ன ஸ்டையில்.. ஹீரோண்ணா அது அஜீத்'தான்" அப்படிண்ணு நா சொல்லுவேன். உடனே, "யாரு... மாசமா இருக்கிற பொண்ணு மாதிரியே இருப்பாரு.. டான்ஸாடுவாரு அவரா...? அதுசரி.... :)) என்னதான் இருந்தாலும் நம்ம விஜய் மாதிரி வருமாண்ணு.." நீ சொல்லணும்.
"சாண்டில்யன் புத்தகங்கள் படிச்சுப்பாறேன்.. அவர் புத்தகங்கள் பெரும்பாலும் எல்லாமே படிச்சுட்டேன் தெரியுமா..? ஒரு அறையில் சாண்டில்யன் புத்தகங்களை நிறைச்சுப்போட்டு எனக்கு சாப்பாடு தண்ணி தராமா அடைச்சு வைச்சாக்கூட அங்கேயே இருக்க சம்மதிப்பேன். சாண்டில்யன் புத்தகம் என்றால் எனக்கு உசிரு.. ஜ லவ் சாண்டில்யன்" அப்படிண்ணு நா சொல்லுவேன் உடனே நீ "அடப்பாவி.. எப்ப பார்தாலும் கடலு.. கொள்ளை.. பொண்ணு.. என்று கற்பனையிலேயே கட்டு கட்டா எழுதுவாரே.. அவரா..??ஹய்யே... அவரு புத்தகம் எனக்கு ஆகவே ஆகாதுப்பா... நமக்கு இந்த கனவு கற்பனை என்று எதுக்குமே பிரயோசனம் இல்லா புத்தகங்க எழுதுறவங்கள கொஞ்சமும் பிடிக்காது நமக்கு எப்பவுமே சுஜாதா'தான். ரியலி கிரேட் சுஜாதா தெரியுமா.." என்றணும்.
"ஹேய்ய்.. நீ உன் கண்களுக்கு மட்டும் தான் அழகா லேசா மை தீட்ற.. மற்றும் படி அதிகம் நீ மேக்கப் போட்டுக்கிறதே இல்ல.. இது எனக்கு பிடிக்கவே இல்ல தெரியுமா.. நீ ரெம்ப அழகுதான் ஒத்துக்கிறேன் ஆனாலும் அந்த அழக இன்னும் பளிச்சுண்ணு காட்ட லைட்டா மேக்கப் போட்டுக்கிறது ஒண்ணும் தப்பில்லையே. குறிப்பா.. உன் உதடு செகப்பா கிளிச்சொண்டு போல் அவ்ளோ அழகு.. இதனாலேயே என்னவோ அதற்கு நீ லிப்டிக் என்ற ஒரு ஜட்டத்தை கண்ணுலேயே காட்டுறது இல்ல.. அந்த செவந்த சின்ன உதட்டுக்கு கொஞ்சம் லைட்டா லிப்டிக் போட்டு பாறேன்.. சான்ஸே இல்ல.. அவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா..??" இது நானு, உடனே நீ... "ஹேய்.. ஸ்டாப் ஸ்டாப்... என்னடா சொல்லுற... ஸப்பா... இதெல்லாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது.. முகத்துல ஒரு கிலோ ரோஸ் பவுடர அள்ளி தப்பிறதும் உதட்டுக்கு கலர் கலரா லிப்டிக் அடிக்கிறதும் நல்லாவா இருக்கும்..?! எப்பவும் இயர்க்கையா கடவுள் கொடுத்த அழகு மட்டுமே அழகு அதுவே எனக்கு போதும் இந்த ஆடம்பர அலங்காரம் எல்லாம் எனக்கு பிடிக்கவும் மாட்டுது எனக்கு அது தேவையும் இல்லை" என்று மூஞ்சல அடிச்சாப்ல சொல்லணும்.
"ஹேய்ய்ய்... குட்டிம்மா, பிடுங்கியெடுத்து ஃபிரஸா கழுவி வைச்ச மஞ்சள் கிழங்கு மாதிரி என்னமா கலரு உன் கலரு...!! ஃப்ராண்ஸில எனக்கு Riitou's Rts என்று ஒரு மச்சாள் இருக்கா, அப்படியே உன் கலரு.. உன் அழகு. அவ போன சண்டே ஒரு விழாவுக்கு வந்திருந்தா.. மஞ்சள் நிற சுடிதார், மஞ்சள் நிற வளையல்கள், மஞ்சள் நிற மாலை என்று எல்லாமே மஞ்சள் மஞ்சளாவே. அவ கலருக்கும் அழகுக்கும் மஞ்சள் அவ்ளோ பொருத்தமா எடுப்பா இருந்திச்சு தெரியுமா..? ஏதோ தேவதையே நேரில வந்தா போல இருந்திச்சு. ஹேய்ய்.. ஹேய்ய்ய்... ப்ளீஸ் ப்ளீஸ் நீயும் அப்படி ரெஸ்ட் பண்ணிப்பாறேன் செமையா இருக்கும் தெரியுமா..?" அப்படின்பேன், உடனே நீ "அடேய்ய்ய்... தெரியாமாத்தான் கேக்குறேன் உன் Riitou மச்சாள் என்ன ராமராஜன் ஃபானா..?? மஞ்சள் பச்சைண்ணு கலர் கலரா ரெஸ்ட் பண்ண.. ஆள விடு இப்படியான மட்டமான ரசனையெல்லாம் எனக்கில்லைப்பா.." அப்படிண்ணு சொல்லனனும்.
இப்படி எல்லா மேட்டரிலும் அவ (நீ தாண்டி.. அவ்வ்வ்) நினைச்சதையே பேசணும் அவளுக்கு பிடிச்சதையே செய்யணும். அவ எப்பவும் அவளாவே இருக்கணும். அழகில அன்பில மட்டும் இல்ல கோபத்திலயும் பிடிவாதத்திலயும் ஏன் திமிரில கூடவும் ராட்சஷியா இருக்கணும். அவ எனக்காக விட்டுக்கொடுத்தும் போகக்கூடாது என்னோடு எந்த விடயத்திலும் அனுசரிச்சும் போகக்கூடாது.. எப்போ பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் என் கூட ஃபைட் பண்ணிக்கிட்டே இருக்கணும்.
இப்படி நம்ம ஆசை'கள சொல்லிட்டே போனமா.. அங்காலப்பக்கம் சத்தமே இல்ல. நாமளும் ஒரு டவுட்டாகி "குட்டிம்மா... லைன்ல தான இருக்க..??" அப்படிண்ண. அங்கிட்டு... "ஆமா... எல்லாம் சொல்லி முடிஞ்சுதா சார்.. சரி வைச்சுடட்டுமா ஃபோன.. ?" உடனே நாம... "என்ன குட்டிம்மா.. இவ்வ்வ்ளோ...... நேரமா நானும் தம் கட்டி என் ஆசை'களை எல்லாம் கொட்டி கொட்டி சொன்னேனே.. நீ பதிலே சொல்லலேயே...?' என்றோமா அப்பாவியா.
அவ "இப்போ என்ன.. உன்னோட சண்டை போடணும் அவ்ளோ தானே..? உன்ன......... பாரு இப்படியே பேசிட்டு இருந்த இனி மாமாக்கிட்ட தான் சொல்லுவேன். நீ வழமை போல அத்த மாமா வீட்ட நிக்கும் போதே இனி கால் பண்ணு சரியா....? ப்ளாக்'ல எழுதுறேன் எழுதுறேன் என்றுட்டு அங்க யாரோடயாவது வம்பிழுத்து சண்டை போட்டுப்போட்டே அந்தப்பழக்கம் இப்ப வீடு வரைக்கும் வருது. முதல்ல உன் ப்ளாக் ப்ரெண்ஷிப்'க்ல கட் பண்ணுடா... முடிஞ்சா ப்ளாக்'ல எழுதுறேன் என்ற பேர்ல குப்பை கொட்டுறதையும் நிப்பாட்டு.. "டொக்க்க்க்க்.........." யோவ் அவ ஃபோனை வைச்சுட்டாய்யா வைச்சுட்டா... இப்போ மறுபடியும் முதல் வரிய படியுங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.