புதன், அக்டோபர் 31, 2012

சின்மயி'யும் சாரு ஷோபாசக்தி வகையறாக்களும்..


ன் பங்குக்கு மீண்டும் ஒரு முறை பதிவுலகை ரணகளம் ஆக்கியிருக்கின்றார் சின்மயி.

இந்த விடயம் பற்றி நிறைய பதிவர்கள் அலசி ஆராந்து நார் நாராக கிழித்து தொங்கப்போட்டு விட்டார்கள். இதற்கு மேல் நான் சொல்ல என்னதான் இருக்கு என்ற நிலையிலேயே அமைதியாக இருந்தேன். ஆனால் அட்டவனை போட்டு அறிக்கை விடுவது போல் நாளொரு வி.ஜ.பியும் ஊடகமும் ராஜன் சின்மயி கைய பிடிச்சான்&இழுத்தான் என்ற ரேஞ்சுக்கு பொங்குவதை பார்க்கத்தான் சகிக்க முடியவில்லை.

என்னைப்பொறுத்தவரை இந்த விடயத்தில் இரு பகுதியினர் மீதும் தவறுகள் இருக்கு. சின்மயியை அவர் தாயாரை ஆபாசமாக திட்டியது எத்தகை கண்டணங்களுக்கு உரியதோ அதை போலவே அப்படி அவர்களை பேச வைத்த சின்மயி'யின் அரைவேக்காட்டுத்தன அரசியல் கருத்துக்களும் மிக மிக கண்டணத்துக்கு உரியது. ஆனால் பிரபலம் என்ற ஒரே காரணத்துக்காய் ஒருவரை தப்ப விட்டு இன்னொருவருக்கு தண்டனை கொடுப்பது எந்த வகையில் நியாயம்..?

அதிகமான சினிமா பிரபலங்கள் பொது விடயங்களில் மக்குகளாக இருப்பார்களே தவிற எப்பவும் அறிவுஜீவிகளாக இருந்தது இல்லை என்ற பொத்தம் பொதுவான கருத்தை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார் சின்மயி.

சின்மயி

பொது இடங்களில் தங்கள் கருத்துக்களை பகிரும் போது ராஜன் போன்ற சாதாரணமானவர்களை விட சின்மயி போன்ற பிரபலங்கள் மிக மிக அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் இப்படியான பிரபலங்கள் அதுவும் சினிமா பிரபலங்கள் சொல்லும் கருத்துக்களை சரியா பிழையா என்று யோசிக்க கூட நேரமில்லாமல் பின் பற்ற நம்மில் பெரும்பாலானோர் தயாராவே இருப்பார்கள். இது தமிழனிடம் இருக்கும் பின்னடைவான ஒரு விடயமும் கூட :((

தன்னை யாராவது விமர்சிப்பதோ தன்னுடைய கருத்துக்களுக்கு எதிர் கருத்து சொல்வதோ சின்மயி'யிக்கு பிடிக்காத பட்சத்தில் அவர்களை இலகுவாக தன் கருத்துக்களை பார்க்கவும் விமர்சிக்கவும் முடியாதவாறு  Block பண்ணியிருக்கலாமே..? இதைத்தானே சமூக தளங்களில் நடமாடும் பிரபலங்களில் அதிகமானோர் செய்கின்றார்கள். இதுதான் பிரபலங்களுக்கு அழகும் கூட. அதை விட்டு பிரச்சனையை வளர்த்து ரசித்து சந்தர்ப்பம் பார்த்து பொறியில் சிக்க வைத்த சின்மயி'யின் குள்ள நரித்தனத்தை என்னவென்று சொல்வது...?!

சின்மயி'யின் இந்த செய்கை. நான் ஒரு பிரபலம். நான் என்ன சொன்னாலும் நீ கேக்க வேண்டும், எனக்கு எதிராய் நீ எந்த கருத்தும் சொல்லக்கூடாது என்ற அவரின் அதிகார திமிரைத்தான் காட்டுகின்றது. 

சின்மயி'யின் அலட்டலும் திமிரும் ஏற்கனவே ஊர் அறிந்ததுதான். விஜய் டிவியின் வெற்றி நிகழ்ச்சியான "சூப்பர் சிங்கரை" ஆரம்ப காலத்தில் தொகுத்து வழங்கியது இதே சின்மயி தான். பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிக பெரிய வெற்றியடைந்து ரேட்டிங் எகிறிய போது, அந்த நிகழ்ச்சி ஹிட்டானதே தன்னால்தான் என்ற சின்மயி'யின் அலட்டலால் கடுப்பான விஜய் டிவி சின்மயியை தூக்கி எறிந்து விட்டு அந்த இடத்தில் வேறு ஒருவரை வைத்து இன்றும் அதே ஹிட்டுடன் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கின்றது.

ஆரம்பகால சூப்பர் சிங்கர் போட்டியாளர்களுடன் சின்மயி

அதன் பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை அப்படியே அப்பட்டமாய் காப்பியடித்த சன் டிவி, தொகுப்பாளாரை சின்மயியை போட்டு ஆரவாரமாய் ஆரம்பித்த அதே வேகத்தோடு நிகழ்ச்சியை இழுத்து மூடி சின்மயியையும் வீட்டுக்கு அனுப்பியது. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஹிட்டானது தன்னால் இல்லை என்பது சின்மயி'யிக்கு அப்போதாவது உறைத்து இருக்குமா தெரியாது.

இப்படியான விடயங்களில் சின்மயி போன்ற பிரபலங்களின் தவறுகளை விட அவர்களை தூக்கி வைத்து கொண்டாடும் எங்கள் தவறுகள் தான் அதிகம். பற்பொடி விளம்பரத்தில் இருந்து ஆணுறை விளம்பரம் வரை பிரபலங்கள் சொன்னால்த்தான் கேப்போம் என்ற எங்கள் 'பிரபலங்கள் மேல் இருக்கும் மையலை' அவர்கள் அழகாக பயன்படுத்தி கொள்கின்றார்கள். அதை நாங்கள் சில இடங்களில் மீறும் போது பொறுக்க முடியாமலும் சகிக்க முடியாமலும் இப்படியான அதிகார இடங்களை நாடி எங்களை ஒடுக்க பாக்கின்றார்கள்.

சின்மயி'யின் அரசியல் கருத்துப்போலவே அவரின் பிரபலமும் அரைகுறைதான். அதனால் தான் என்னவோ இன்று சின்மயிக்கு எதிரான கருத்துக்கள் குவிகின்றன. இதே சின்மயி இடத்தில் விஜய்யோ அஜித்தோ இருந்து இந்த கருத்தை பகிர்ந்து இருந்தால் இப்போது எங்களிடம் இருக்கும் இந்த ஒற்றுமை அப்போதும் இருந்து இருக்குமா என்பது கேள்விக்குறிதான். 

உதாரணமாக சின்மயி இடத்தில் விஜய் இப்படி நடந்து கொண்டிருந்தால், ராஜன் மேல் தவறு இல்லா பட்சத்திலும் விஜய்க்கே ஆதரவு குவிந்து இருக்கும். நம்ம தலைவருக்கு எதிராய் நீ எப்படி கருத்து சொல்லலாம் என்று ஒரு குறூப்பே கொலைவெறியோடு கிளம்பியிருக்கும். விஜயை விமர்சித்தால் விஜயின் மனைவி பிள்ளைகளுக்கு கோபம் வருகின்றதோ இல்லையோ சினிமா பிரபலங்களை கடவுளாக நினைக்கும் நம்மவர்களுக்கு அறச்சீற்றம் வந்து தொலைத்து பல நாள் பழகிய நண்பன் என்று கூட பார்க்காமல் கிழித்து தொங்கப்போட்டு விடுவார்கள்.

இங்கே.. இங்கே தான் நாங்கள் பெரும் தவறு செய்கிறோம். இப்படி அவர்களை தூக்கி வைத்து பூசித்துக்கொண்டே இருக்கும் நாங்கள் திடிரென அவர்களை கீழே போட்டு விமர்சிக்கும் போது அதை சகித்துக்கொள்ள முடியாமல் இப்படியான கீழ்த்தரமான வேலைகளில் இறங்கின்றார்கள். இதற்கெல்லாம் ஒரே வழி காலம் காலமாக பிரபலங்களுக்கு குறிப்பாய் சினிமா பிரபலங்களுக்கு காவடி தூக்கும் எங்கள் செயலை முதலில் நிறுத்த வேண்டும்.

இணைய அறிவு கொஞ்சமும் இல்லாமல், அங்கே என்ன நடக்கின்றது நடந்தது என்று அறிந்து கொள்ளவும் விருப்பம் இல்லாமல் நியாயங்களை குழி தோண்டி புதைத்து விட்டு பிரபலம் என்றே ஒரே காரணத்துக்காய் சின்மயிக்கு ஒத்து ஊதும் ராஜ் டிவி போன்ற ஊடகங்கள் மிக மிக கண்டணத்துக்கு உரியவை.

இவர்கள் தான் இப்படி என்றால் இந்த சாருநிவேதா ஷோபாசக்தி வகையறாக்கள் எல்லாம் திடீர் கடவுளாகி ஆபாச பேச்சுக்களை எல்லாம் கண்டித்து பெண்களை காக்க வெளிக்கிட்டதுதான் 'என்ன கொடுமை சரவணா' ரகம். இந்த சாருவை பற்றி நான் சொல்லித்தான் தெரியணுமா..? இவரு வாய திறந்தா எந்த மாதிரி இருக்கும் என்பது உலக பிரபலமே. அடுத்தவர் நம்ம ஊர்க்காரர் (அதாங்க ஃப்ரான்ஸ்) ஷோபாசக்தி. ரெம்ப நல்லவன் போல் புலி எதிர்ப்பில் நடுநிலை வேஷம் போடும் இவர் பெண்கள் விடயத்தில் எப்படிப்பட்டவர் என்பதை அண்மையில் தமிழச்சி போட்டு உடைத்து கிழி கிழி என்று கிழித்ததை இலகுவில் மறந்து விட முடியுமா என்ன..? சாரு+ஷோபா இரண்டும் ஒரே சாக்கடையில் ஊறிய மட்டைகள் தான். அதனால் தான் இத்தகைய ஒரே சிந்தனை. இதில் ஷோபா சக்தி சொல்கிறார் சாருவுக்கு பெண்ணியம் பேச தகுதியில்லையாம்!

பட உதவி: 'நிகழ்வுகள்' கந்தசாமி.

அதைவிட எந்த ஒரு தலைபோற பிரச்சனை நடந்தாலும் அதை எல்லாம் கண்டுக்காமல் புலி எதிர்ப்பிலும், வாசகர்கள்(!) கடிதங்களுக்கு ஆபாசமாக பதில் சொல்வதிலும் மூழ்கி இருப்பவங்களுக்கு எங்கிருந்தாவது ஒரு "பொண்ணு" குரல் கொடுக்கும் போது 'மட்டும்' இவங்களுக்கு எல்லாம் எப்படித்தான் அறச்சீற்றம் வந்து தொலைக்கின்றதோ தெரியவில்லை. இப்படியான சமயங்களில் மட்டும் வேதம் ஓதும் இந்த சாத்தான்களுக்கு முதலில் ஒரு முடிவு கட்ட வேண்டும்.

எது எப்படியே பழைய பகையை மனசில் வைத்து ஊடகங்களை தன் பக்கம் திருப்பி தன் பழி வாங்கும் படலத்தை ஜோராக நடத்தி முடித்து விட்டார் சின்மயி. ராஜன் தரப்பு மேல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி உள்ளே தள்ளியவர் உண்மையாகவே தன் பக்கமும் நியாயங்கள் இருக்கும் பட்சத்தில் தனது பிரபலம் என்ற செல்வாக்கை பயன்படுத்துவதையும், ஜெயலலிதாவை கடிச்சாங்க கருணாநிதியை கடிச்சாங்க அட கனிமொழி குஷ்பூ நயன்தாராவையும் கடிச்சாங்க என்று 'பக்கத்து இலைகளுக்கு எல்லாம் பாயாசம்' கேட்டு பிரச்ச்னையை திசை திருப்பி இப்படி கேவலமாய் பிரபலங்களிடமும் அதிகாரவர்க்கங்களிடமும் தனக்கு ஆதரவு தேடுவதை விட்டுவிட்டு நியாயமான வழியில் ராஜன் தரப்புடன் மோதினால் தன் மேல் இருக்கு கொஞ்ச நம்பிக்கையையும் மரியாதையையும் ஆவது சின்மயி காப்பாற்றிக்கொள்ளலாம்.

ஞாயிறு, அக்டோபர் 28, 2012

குட்டிம்மாவும் நானும் ஒரு 'டெரார்' டிஸ்கஷன்.


நமக்கு மட்டும் ஏந்தான் எல்லாமே இப்படி ஆகுதோ தெரில்ல.. :((
நமக்கும் குட்டிம்மாவுக்கும் கல்யாணம் பிக்ஸான உடனேயே நம்ம வீட்டு பெரியவங்க எல்லாம் ஒன்று சேர்ந்து 'அதான் முடிவாயிட்டெல்ல, இனி பொண்ணு பையன் வீட்டையே நிக்கட்டும்.. என்னதான் ஒண்டுக்க ஒண்டா இருந்தாலும் இனி கொஞ்சம் அதிகமாவே ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சு நல்லா பழகிக்கணும் இல்ல..' அப்படிண்ணு சொன்னத கேட்டதுமே நாம அப்படியே ஷாக்'காகிட்டோம் என்றா பாருங்களேன்.

அடியாத்தீ... வழமையா இவிங்க வில்லங்கமா பேசி கல்யாணம் வரைக்கும் பக்கத்திலேயே அண்ட விட மாட்டாங்களே, ஆனா இங்கே எல்லாமே தலைகீழா நடக்குதே...! என்று குழப்பிட்டே இருந்தோமா, அப்புறந்தான் புரிஞ்சுது அவிங்க பொண்ண பழக கூட்டியாந்தது நம்ம கூட இல்லயாம் பெரியவங்க அவிங்க கூடவாம். அவ்வ்வ்வ்... என்ன ஒரு வில்லத்தனம். :((

சரி வுட்றா துஷி, வாழ்கையென்றாலே இப்படியான துரோகங்களும் ஏமாற்றங்களும் சகஜம்தானேடா.. அப்படிண்டுட்டு நாமளும் ஃப்ராண்ஸ் வந்து சரி ஃபோனிலேயாவது பழகலாமே என்று வீட்டுக்கு ஃபோனைப்போட்டா.., அங்காலப்பக்கம் அவள சுத்தி ஒரு கிராமமே ஆ'வென்று பாத்துக்கிட்டு ஒக்காந்திருக்கும். நாம ஏதாவது அவ கிட்ட கேட்டா சுத்தி இருக்கிறவங்க எல்லாம் நமட்டு சிரிப்போட பதில் சொல்லுறது இங்கிட்டு நமக்கு கேக்கும். நாமளும் அசடு வழிஞ்சுக்கிட்டே ஃபோனை வைச்சுடுவோம்.


இப்படியே நம்ம 'பழகணும்' என்ற ஆசை நிறைவேறாமலே இருக்கும் போதுதான் ஒரு நாள் எதார்த்தமா அங்கால ஃபோனை போட்டா, ஆச்சரியமா அதிசயமா நம்ம குட்டிம்மா 'ஹலோ..' எங்கிறா. நமக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல நம்பவும் முடியல்ல. இதற்கிடையில் அவ நாலு வாட்டி 'ஹலோ.. ஹலோ..' என்றுட்டு பதிலே இல்லாததால டொக்'குண்ணு ஃபோனை வேற வைச்சுட்டா. வைச்சுட்டா மட்டும் விட்றவமா நாங்க..? விட்றவமா எங்கிறேன்.. விட்டா இப்படி ஒரு சான்ஸ் மறுபடியும் கிடைச்சுடுமா என்ன.. ??

மறுபடியும் ஃபோனைப்போட்டு நாமளும் 'ஹலோ..'என்ற, 'ஹய்யோ நீயா.... எப்படிடா இருக்க..' என்று அங்காலப்பக்கமும் சந்தோஷத்தில் திக்குமுக்காட. உடனே நாம, 'ஹேய்ய்ய்.. குட்டிம்மா, வழமையா எப்பவுமே உன்ன சுற்றி ஒரு கிராமமே ஒக்காந்திருக்குமே எங்கப்பா அதுங்க எல்லாம்..? என்று சந்தேகமாவே கேக்க', அவ கடுப்பா 'பெரியவங்கள இப்படியா பேசுவ..' என்று சொல்லியபடியே அவங்க ஒவ்வொருத்தரும் போன இடங்கள விலாவாரியா சொல்லீட்டே போக உடனே 'ஹய்யோ....... எங்காவது போயிருக்கட்டும் அத விடு, ஹேய் குட்டிம்மா அவிங்க வாறதுக்குள்ள நாம ரெண்டு பேரும் பழகுவோமா..' என்று நாம கேட்டோமா... சட்டுண்ணு அங்காலப்பக்கம் பேச்சுமூச்சே இல்ல.

ஆனா.., அங்கிட்டு அவ திக்'குண்ணு ஆயிட்டா என்று மட்டும் நமக்கு புரிஞ்சு போச்சு. நாம உடனேயே உசாராகி 'ஹேய்.. ஹேய்.. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணுமில்லப்பா.. ச்சும்மா பேசி பேசி ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சு பழகிப்போம் என்றுதான் சொல்ல வந்தேன்' என்று சொன்னாப்பிறம்தான் 'ஓ.. அதுவா.. ஓக்கே ஓக்கே' என்று அங்காலப்பக்கம் சத்தமே (மூச்சே) வந்திச்சு. (ஹீ..ஹீ....).

அப்பாடா.. நெருங்கீட்டோம் இல்ல என்று நம்மளுக்கு ஒரே குஷியாப்போச்சு. சரி எல்லோரும் எங்க இருந்து தொடங்குவாங்க நாமளும் அங்கேயிருந்தே தொடங்குவோம் என்று நினைச்சவாறே... 'குட்டிம்மா உனக்கு என்னென்ன பிடிக்கும் பிடிக்காது என்று சொல்லேன்' என்றமா 'சின்ன வயசிலேருந்து பார்த்துட்டே இருக்கே, உனக்கு தெரியாதா எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று..? உடனே அவ வார, நாம கடுப்போட 'அடி லூஸு.. கேட்டா கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுடி..' என்று எகிற அவ சிரித்தபடியே.. 'ஓக்கே துஷிக்குட்டி (அவ்வ்வ்) உனக்கு பிடிச்ச எல்லாமே எனக்கும் பிடிக்கும்.. உனக்கு பிடிக்காத எதுவுமே எனக்கும் பிடிக்காது' என்று சொ(ஜொ)ல்ல நாம அப்படியே உருகிப்போயிட்டம் அப்படிண்ணு சொல்லப்போறேன் என்று தானே நீங்க நினைக்கிறீங்க..!! ஆனா அதான் இல்ல நாம பதிலுக்கு செம காண்டாகிட்டோம் இல்ல. 

'அடியே மக்கு.. மக்கு.., இப்படி ஊரில எத்தன பேரடி கிளம்பியிருக்கீங்க.. அதெப்படி எனக்கு பிடிச்சது எல்லாமே உனக்கும் பிடிக்கும்..?! பொய் சொல்லுறதுக்கு ஒரு அளவே வேணாம்.. பொண்ணுங்க எல்லோருமே இப்படித்தாண்டி பசங்கள பற்றி தப்புக்கணக்கு போடுறீங்க.. இப்படி சொல்லுற பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு பிடிக்குமுண்ணு நீங்களாவே நினைச்சுக்கிட்டு இப்படியெல்லாம் அடிச்சுவிட்டே இம்சை பண்றீங்க.. நிஜமாவே இப்படியான பொண்ணுங்கள பசங்களுக்கு கொஞ்சமும் பிடிக்காது தெரியுமா..' என்று நாம கொஞ்சம் சூடாவே எகிற.

பதிலுக்கு அவ 'நா ஒண்ணும் பொய் சொல்லல நெசமாவே அப்படித்தான்.. அதெல்லாம் தன் பார்ட்டனர ரெம்ப நேசிக்கிறவங்களாலதான் புரிஞ்சுக்க முடியும்.. உன்னால எல்லாம் புரிஞ்சுக்க முடியாதிடா..' என்று கடுப்பாக, அப்போத்தான் நமக்கு ஆஹா... கொஞ்சம் ஓவறாத்தான் போயிட்டோமோ என்று ஒரே பீலிங்காப்போச்சு.

அப்புறம் சட்டுண்ணு நாமளும் கூலாகி 'கோவிச்சுக்காத குட்டிம்மா.. ஏதோ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்(!) ஹீ..ஹீ... சரி வுடு., பசங்களுக்கு எப்படியான பொண்ணுங்கள பிடிக்குமுண்ணு சொல்லுறேன்.. சரி வாணாம் (அவ்வ்வ்..). துஷி கூட குட்டிம்மா எப்படி எல்லாம் இருக்கணும், எப்படி எப்படி எல்லாம் நடந்துக்கணும் என்று துஷி ஆசைப்படுதுண்ணு சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ.. நோட் பாயிண்ட் செல்லம்.. :))' ஆங்...... 


"அஜீத் என்றா எனக்கு ரெம்ப பிடிக்கும் தெரியுமா..? என்ன ஒரு அழகு.. என்ன ஸ்டையில்.. ஹீரோண்ணா அது அஜீத்'தான்" அப்படிண்ணு நா சொல்லுவேன். உடனே, "யாரு... மாசமா இருக்கிற பொண்ணு மாதிரியே இருப்பாரு.. டான்ஸாடுவாரு அவரா...? அதுசரி.... :)) என்னதான் இருந்தாலும் நம்ம விஜய் மாதிரி வருமாண்ணு.." நீ சொல்லணும். 

"சாண்டில்யன் புத்தகங்கள் படிச்சுப்பாறேன்.. அவர் புத்தகங்கள் பெரும்பாலும் எல்லாமே படிச்சுட்டேன் தெரியுமா..? ஒரு அறையில் சாண்டில்யன் புத்தகங்களை நிறைச்சுப்போட்டு எனக்கு சாப்பாடு தண்ணி தராமா அடைச்சு வைச்சாக்கூட அங்கேயே இருக்க சம்மதிப்பேன். சாண்டில்யன் புத்தகம் என்றால் எனக்கு உசிரு.. ஜ லவ் சாண்டில்யன்" அப்படிண்ணு நா சொல்லுவேன் உடனே நீ "அடப்பாவி.. எப்ப பார்தாலும் கடலு.. கொள்ளை.. பொண்ணு.. என்று கற்பனையிலேயே கட்டு கட்டா எழுதுவாரே.. அவரா..??ஹய்யே... அவரு புத்தகம் எனக்கு ஆகவே ஆகாதுப்பா... நமக்கு இந்த கனவு கற்பனை என்று எதுக்குமே பிரயோசனம் இல்லா புத்தகங்க எழுதுறவங்கள கொஞ்சமும் பிடிக்காது நமக்கு எப்பவுமே சுஜாதா'தான். ரியலி கிரேட் சுஜாதா தெரியுமா.." என்றணும். 

"ஹேய்ய்.. நீ உன் கண்களுக்கு மட்டும் தான் அழகா லேசா மை தீட்ற.. மற்றும் படி அதிகம் நீ மேக்கப் போட்டுக்கிறதே இல்ல.. இது எனக்கு பிடிக்கவே இல்ல தெரியுமா.. நீ ரெம்ப அழகுதான் ஒத்துக்கிறேன் ஆனாலும் அந்த அழக இன்னும் பளிச்சுண்ணு காட்ட லைட்டா மேக்கப் போட்டுக்கிறது ஒண்ணும் தப்பில்லையே. குறிப்பா.. உன் உதடு செகப்பா கிளிச்சொண்டு போல் அவ்ளோ அழகு.. இதனாலேயே என்னவோ அதற்கு நீ லிப்டிக் என்ற ஒரு ஜட்டத்தை கண்ணுலேயே காட்டுறது இல்ல.. அந்த செவந்த சின்ன உதட்டுக்கு கொஞ்சம் லைட்டா லிப்டிக் போட்டு பாறேன்.. சான்ஸே இல்ல.. அவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா..??" இது நானு, உடனே நீ... "ஹேய்.. ஸ்டாப் ஸ்டாப்... என்னடா சொல்லுற... ஸப்பா... இதெல்லாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது.. முகத்துல ஒரு கிலோ ரோஸ் பவுடர அள்ளி தப்பிறதும் உதட்டுக்கு கலர் கலரா லிப்டிக் அடிக்கிறதும் நல்லாவா இருக்கும்..?! எப்பவும் இயர்க்கையா கடவுள் கொடுத்த அழகு  மட்டுமே  அழகு அதுவே எனக்கு போதும் இந்த ஆடம்பர அலங்காரம் எல்லாம் எனக்கு பிடிக்கவும் மாட்டுது எனக்கு அது தேவையும் இல்லை" என்று மூஞ்சல அடிச்சாப்ல சொல்லணும். 

"ஹேய்ய்ய்... குட்டிம்மா, பிடுங்கியெடுத்து ஃபிரஸா கழுவி வைச்ச மஞ்சள் கிழங்கு மாதிரி என்னமா கலரு உன் கலரு...!! ஃப்ராண்ஸில எனக்கு Riitou's Rts  என்று ஒரு மச்சாள் இருக்கா, அப்படியே உன் கலரு.. உன் அழகு. அவ போன சண்டே ஒரு விழாவுக்கு வந்திருந்தா.. மஞ்சள் நிற சுடிதார், மஞ்சள் நிற வளையல்கள், மஞ்சள் நிற மாலை என்று எல்லாமே மஞ்சள் மஞ்சளாவே. அவ கலருக்கும் அழகுக்கும் மஞ்சள் அவ்ளோ பொருத்தமா எடுப்பா இருந்திச்சு தெரியுமா..? ஏதோ தேவதையே நேரில வந்தா போல இருந்திச்சு. ஹேய்ய்.. ஹேய்ய்ய்... ப்ளீஸ் ப்ளீஸ் நீயும் அப்படி ரெஸ்ட் பண்ணிப்பாறேன் செமையா இருக்கும் தெரியுமா..?" அப்படின்பேன், உடனே நீ "அடேய்ய்ய்... தெரியாமாத்தான் கேக்குறேன் உன் Riitou  மச்சாள் என்ன ராமராஜன் ஃபானா..?? மஞ்சள் பச்சைண்ணு கலர் கலரா ரெஸ்ட் பண்ண.. ஆள விடு இப்படியான மட்டமான ரசனையெல்லாம் எனக்கில்லைப்பா.." அப்படிண்ணு சொல்லனனும்.

இப்படி எல்லா மேட்டரிலும் அவ (நீ தாண்டி.. அவ்வ்வ்) நினைச்சதையே பேசணும் அவளுக்கு பிடிச்சதையே செய்யணும். அவ எப்பவும் அவளாவே இருக்கணும். அழகில அன்பில மட்டும் இல்ல கோபத்திலயும் பிடிவாதத்திலயும் ஏன் திமிரில கூடவும் ராட்சஷியா இருக்கணும். அவ எனக்காக விட்டுக்கொடுத்தும் போகக்கூடாது என்னோடு எந்த விடயத்திலும் அனுசரிச்சும் போகக்கூடாது.. எப்போ பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் என் கூட ஃபைட் பண்ணிக்கிட்டே இருக்கணும்.

இப்படி நம்ம ஆசை'கள சொல்லிட்டே போனமா.. அங்காலப்பக்கம் சத்தமே இல்ல. நாமளும் ஒரு டவுட்டாகி "குட்டிம்மா... லைன்ல தான இருக்க..??" அப்படிண்ண. அங்கிட்டு... "ஆமா... எல்லாம் சொல்லி முடிஞ்சுதா சார்.. சரி வைச்சுடட்டுமா ஃபோன.. ?" உடனே நாம... "என்ன குட்டிம்மா.. இவ்வ்வ்ளோ...... நேரமா நானும் தம் கட்டி என் ஆசை'களை எல்லாம் கொட்டி கொட்டி சொன்னேனே.. நீ பதிலே சொல்லலேயே...?' என்றோமா  அப்பாவியா.

அவ "இப்போ என்ன.. உன்னோட சண்டை போடணும் அவ்ளோ தானே..? உன்ன......... பாரு இப்படியே பேசிட்டு இருந்த இனி மாமாக்கிட்ட தான் சொல்லுவேன். நீ வழமை போல அத்த மாமா வீட்ட நிக்கும் போதே இனி கால் பண்ணு சரியா....? ப்ளாக்'ல எழுதுறேன் எழுதுறேன் என்றுட்டு அங்க யாரோடயாவது வம்பிழுத்து சண்டை போட்டுப்போட்டே அந்தப்பழக்கம் இப்ப வீடு வரைக்கும் வருது. முதல்ல உன் ப்ளாக் ப்ரெண்ஷிப்'க்ல கட் பண்ணுடா... முடிஞ்சா ப்ளாக்'ல எழுதுறேன் என்ற பேர்ல குப்பை கொட்டுறதையும் நிப்பாட்டு.. "டொக்க்க்க்க்.........." யோவ் அவ ஃபோனை வைச்சுட்டாய்யா வைச்சுட்டா... இப்போ மறுபடியும் முதல் வரிய படியுங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.


ஞாயிறு, செப்டம்பர் 23, 2012

'வைகோ'வை புறக்கணிக்கும் 'நக்கீரன்'..


                                   வைகோ
த்தமில்லாமல் வைகோவை புறக்கணிக்க தொடங்கியுள்ளது நக்கீரன். வைகோவை பற்றிய செய்திகளோ படங்களோ தவறிக்கூட நக்கீரனில் வந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

நக்கீரனை யாராவது பகைத்தாலோ, அல்லது நக்கீரனுடன் ஒத்துப்போகாமல் விட்டாலோ எப்படி எல்லாம் கீழ் இறங்கி பழிவாங்குவார்கள் என்பதற்க்கு பல உதாரணங்கள் இருந்தாலும், முக்கியமான உதாரணம் ஜெயலலிதா.

MGR க்கு பின் மக்களிடையே அதிக கவர்ச்சி உடைய அரசியல் தலைவர் என்றால் அது ஜெயலலிதாவே தான். (இந்த கவர்ச்சியால்தான் ஜெயலலிதா இத்தனை தவறுகள் விட்ட பின்னும் ஆட்சியில் இருக்கிறார்) இதை இன்று வரை சரியாக கணித்து வைத்து இருப்பது ஜெயாவின் பரம எதிரி நக்கீரனே. இதனாலேயே ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ஜெயாவை பற்றியே செய்தி போட்டு கல்லா கட்டுகின்றது நக்கீரன். (இவர்களுக்கு அடுத்து கல்லா கட்ட உதவுவது பிரபாகரன்)
ஆரம்பத்தில் இப்படியான செய்திகளால் கடுப்பான ஜெயா, வீரப்பன் கேஸில் 'நக்கீரன்' கோபாலை தூக்கி உள்ளே போட அங்கே ஆரவாரமாய் ஆரம்பித்த இவர்கள் குடும்பிப்பிடி சண்டை 'மாட்டுக்கறி மாமி' என்று இன்றுவரை தொடர்கிறது.
'நக்கீரன்' கோபால்
ஆனால் என்ன.., இவர்கள் சண்டையில் யார் ஜெயித்தாலும் பலனை அனுபவிப்பது நக்கீரன் மட்டுமே. தங்கள் பத்திரிகை எப்போது எல்லாம் விற்பனையில் ஆட்டம் காண்கிறதோ அப்போது எல்லாம் ஜெயாவை கடுமையாக சீண்டி கோபப்படுத்தி அதன் பின் நடக்கும் கலவரத்தில் நக்கீரனுக்கு இலவச விளம்பரம் தேடிக்கொள்வது இவர்களின் வெற்றி ரகசியங்களில் ஒன்று.

பத்திரிகைகளுக்கு இருக்க வேண்டிய முக்கிய தகுதியே 'எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பத்திரிகைகள் எதிர்கட்சியாகவே இருக்க வேண்டும்' ஆனால் நக்கீரன் யார் ஆட்சியில் இருந்தாலும் ஜெயா ஆட்சியில் இருக்கும் நினைப்பிலேயே செய்தி போடும். கருணாநிதியை திட்டாமல் இதுவரை பத்திரிகை நடத்துவதற்க்கே இவர்களுக்கு பாராட்டு விழா எடுக்கணும்.. இவர்கள் பார்வையில் கருணாநிதி இதுவரை எந்த தவறும் விடாதவர். :))

இப்படியான பல புகழ்களை(!) எல்லாம் தன்னகத்தே கொண்ட நக்கீரன், இப்போ தன் கோப பார்வையை புறக்கணிப்பு மூலம் வைகோ மேல் திருப்பியுள்ளது. இதை எல்லாம் பார்க்கும் போது எங்க தாத்தா அடிக்கடி சொல்லும் "குளத்தோட கோவிச்சு கொண்டு ............ " என்ற பழமொழிதான் எனக்கு நினைவுக்கு வருகின்றது. :))

கடந்த தேர்தல் ஒன்றில் வைகோ பிரச்சாரத்துக்கு போகும் இடங்களில் எல்லாம் 'ஜீனியர் விகடனை' தயாநிதி மாறன் விலைக்கு வாங்கி விட்டார் ஆகவே அந்த பத்திரிகை செய்திகளை நம்பாதீர்கள் என்று விகடன் மேல் வீண்பழி சுமத்தினார், ஆனால் அதை விகடன் நேர்மையாக கையாண்டு அந்த செய்தி தவறு என்று நிரூபித்தது. அதன் பின் இன்று வரை கருணாநிதி ஜெயலலிதா போன்றவர்களின் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வைகோவுக்கும் கொடுத்து வருகிறது. எங்கேயும் வைகோவை பழிவாங்கி பழைய கணக்கை தீர்க்கவோ புறக்கணிக்கவோ இல்லை விகடன். இதுதான் ஒரு தரமான பத்திரிகைக்கு இருக்கக்கூடிய நேர்மை. இதுதான் பத்திரிகை தர்மமும் கூட.

அது சரி, இந்த நேர்மையை நக்கீரனிடம் எதிர்பார்ப்பது நம்ம தவறுதான். மளிகைக்கடையில் வேலை செய்தவர் எல்லாம் பத்திரிகை நடத்தினால் இப்படித்தான் இருக்கும்.

எது எப்படியே 'இதான் பிரச்சனை' என்று வைகோவோ நக்கீரனோ வாயை திறக்கும் மட்டும் அவர்களுக்குள் அப்படி என்னதான் பிரச்சனை என்று நமக்கு தெரிய போவது இல்லை. ஆனால்..... ஒரு மூத்த அரசியல்வாதியை புறக்கணிப்பதோ, தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை எல்லாம் பத்திரிகை மூலம் காட்டுவதோ, ஒரு நாட்டின் முதுகெலும்பான பத்திரிகைத்துறைக்கு பெருமை சேர்க்காது என்பதை நக்கீரனார் இனிமேலாவது உணரவேண்டும்.

வெள்ளி, செப்டம்பர் 14, 2012

ஊர் நினைவுகள்... (மறுபடியும் வந்துட்டோம் இல்ல..)

ரெம்ப பெரிய்ய்ய்..ய இடைவெளிகளுக்கு பின் மீண்டும் வலைப்பூ பக்கம் திரும்பி இருக்கோம்.
 இந்த இடைவெளிக்குள்ள வாழ்க்கையில் ரெம்ப பெரிய சந்தோஷங்கள் மாற்றங்கள் எல்லாம் நடந்திருக்கு.. அவை எல்லாத்தையும் இங்கே பகிர முடியாது என்பதால ஒரு சந்தோஷத்தை மட்டும் இங்கே பகிர்ந்துக்கிறேன்.

வவுனியா காட்டுக்குள்.. :))
என் சொந்த நாட்டிற்க்கு (இலங்கை) போயிட்டு வந்தோம் இல்ல :)) சின்ன வயசில் இலங்கையை விட்டு பிரிந்து வந்த பின் இப்போழுதுதான் முதல் முதலாய் இலங்கை போயிருந்தேன்.

அங்கு நின்ற ஒரு மாசம் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அந்த ஒரு மாசத்தில் கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, ஒட்டிசுட்டான், கிளி நெச்சி, முல்லைத்தீவு, நெடுங்கேணி என்று பார்க்க ஆசைப்பட்ட அத்தனை இடங்களையும் பார்த்தாச்சு.
 
முல்லைத்தீவு கடற்கரையில் "அவங்களோடு.." :))
முல்லைத்தீவு கடற்கரையில் குளித்துவிட்டு அப்படியே நந்திக்கடற்கரையோரம் நடந்த போது ஏதேதோ நினைவுகளில் மனசு கனத்துப்போய்விட்டது :((

அப்புறம் நெடுங்கேணி...
ஆச்சரியம் தான்.. இறுதியாக இருந்து வந்த வவுனியாவில் உள்ள இடங்களே மறந்துவிட்ட நிலையில்.. பிறந்து, 8 வயது வரையே வாழ்ந்த நெடுங்கேணியில் ஒவ்வொரு இடமும் நினைவில்...!

"அப்பா இவ்வடத்த ஒரு பெரிய புளியமரம் நின்றதல்லோ இப்போ கானல்ல.." "இந்த கொண்டை மரத்துக்கு கீழதான நாதம்பிரான் கோயில் இருந்திச்சு.. இப்போ மரம் மட்டும் நிக்குது..!" "இதானே ராஜலிங்கம் மாமா இருந்த வீடு.. சுவருகள் மட்டும் இன்னும் உடையாம இருக்குப்பா" "என்னப்பா இது..! முந்தி என் ப்ரெண்டுட்ட எல்லாம் எவ்ளோ பெருமையா சொல்லி கூட்டிக்கொண்டு வந்தெல்லாம் காட்டி இருக்கேன் எங்க காணிக்கேயே குளம் (ஆறு) இருக்கென்று.. இப்போ என்னப்பா இப்படி மணல்மேடா இருக்கு" இப்படி கேள்விமேல் கேள்வி கேட்டு துளைக்கும் என்னை ஆச்சரியமாய் பார்த்தபடி கனத்த மனத்துடன் பதில் சொல்லிக்கொண்டே வந்தார் அப்பா.
 
எங்கள் வீடு இருந்த இடம்.. இந்த மாமரம் துஷி நட்டது.. :))
எங்கள் வீடு இருந்த காணி..! என் மனசை ரெம்ப வேதனை படுத்திய இடம் அது :(( கேற்றில் ராட்ஷச உருவில் ஒரு கூழா மரம் அதன் கீழ் எங்கள் குல தெய்வம் வைரவர். பெரிய வீடு.. அதை சுற்றிய பூஞ்சோலை (இவை அம்மாவின் உயிர்) தென்னை,தேக்கு,விளாமரம்,மாமரம் என்று தேவையான எல்லாமே காணிக்குள் இருக்கும் (வன்னியில் பெரும்பாளும் எல்லோர் வீடுகளும் இப்படியே).
எங்கள் குலதெய்வம் வைரவர் :((
இன்று....
வேலிகள் அற்று அலங்கோலமாய்...
காணிக்குள் ஒரு விளாமரம் ஒரு மாமரம் மட்டுமே.. :(( உன்னிபற்றைகளுக்குள் அவை மட்டுமே கம்பீரமாய் நிக்க கேற்றடியில் கூழாமரமும் அதன் கீழ் சிறு சீமந்து கொட்டினுள் சருகுகளுக்குள் எங்கள் குல தெய்வம் வைரவர் (சீமந்து கொட்டில் போருக்கு பின் அண்ணா கட்டியது).

வவுனியாவில் இருந்து வேன் பிடித்து குடும்பத்தில் எல்லோரும் போயிருந்தோம்...
ரெம்ப நேரமாகியும் யாருக்குமே காணியை விட்டு வர மனமே இல்லை. நான் வருவேன் என்று தெரிந்தோ என்னவோ மாமரம், விளாத்தி, கூளாமரம் மூன்றும் பழங்களால் நிறைந்து போயிருந்தது.. மரங்களில் ஏறி பறித்து அங்கேயே இருந்து சாப்பிட்டு மிகுதியை வவுனியாவுக்கு கொண்டுவந்து பக்கத்து வீட்டுக்காரருக்கு எல்லாம் கொடுத்து ஃப்ராண்ஸ் வரை கொண்டு வந்தேன் :))

காணிக்குள் மரத்தில் ஏறி, ஒருவரை ஒருவர் துரத்தி உன்னிப்பற்றைகளுக்குள் ஓடி.. நானும் தம்பியும் தங்கச்சியும் பண்ணிய அட்டகாசங்கள் சமாளிக்க மிடியாமல் அப்பாவும் அம்மாவும்தான் தடுமாறிப்போனார்கள். நாம போட்ட சத்தத்தில் அயலவர்கள் எல்லாம் வந்து என்னை தம்பியை தங்கச்சியை அடையாளம் கண்டு பெயர் சொல்லி கட்டிதழுவி ஆனந்தகண்ணீர் விட்டது ஆச்சரியமான நெகிழ்ச்சி.
 
மணி படித்த பாடசாலை.. ( மீயும் இங்கேதான் மூன்றாம் வகுப்பு வரை. பெருமை.. பெருமை lol)
இறுதியில் இருட்ட தொடங்கியும் யாருக்கும் கிளம்ப மனசே இல்லை.. பிரிய மனமே இல்லாமல் கலங்கிய கண்களோடு வேனுக்குள் ஏறி புறப்பட்டோம். வரும் போது பாட்டு பேச்சு என்று அல்லோலப்பட்ட வேன் திரும்பும் போது அமைதியாகவே இருந்தது. யாரும் யாருடனும் பேச வில்லை.. ஒவ்வொருவர் மனசிலும் கனமான நினைவுகள்.

எனக்கு ரெம்ப பிடித்த பதிவர்களில் மிக முக்கியமானவர்கள் 'மருதமூரான்'அண்ணாவும் 'ஜீ'அண்ணாவும். இருவரையும் கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஹுமும்.. நாட்கள் படு வேகமாய் நகர்ந்ததில் அவர்களை சந்திக்கவே முடியவில்லை. அப்புறம் நம்ம தோஸ்த் ராஜ், மைந்தன், வரோ, சுதாண்ணா என்று யாரையுமே பார்க்க முடியவில்லை :((

பதிவர், நன்பன் என்று சந்தித்தது என்றால்.. நம்ம 'சிறகுகள்' மதுரனை மட்டுமே. (மதுரனை சந்திக்காமல் வந்தால் அப்புறம் ஃப்ராண்ஸுக்கு ஆள் அனுப்பியே போட்டுத்தள்ளிருவேன் என்று மிரட்டி வைத்திருந்தான்.. ஆவ்வ்வ்).

முன்பே இலங்கைக்கு போய் வரும் பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அதிக விருப்பம் இல்லாததால் இலங்கை பயணத்தை தவிர்த்துக்கொண்டே வந்தேன். இப்பொழுது இலங்கை சென்று வந்ததில் இருந்து இவ்ளோ நாளா அங்கே போகாமல் மிஸ் பண்ணிவிட்டேனே என்று கவளையாய் இருந்திச்சு. இப்போ முடிவே பண்ணியாச்சு.. இனி ஒவ்வொரு ஆண்டு விடுமுறையையும் இலங்கையில்தான் கழிப்பது என்று.
 


செவ்வாய், மே 01, 2012

மின் நூல் வெளியீடும், தோள்கொடுத்த உறவுகளுக்கு உவப்பூட்டும் நன்றிகளும்

எனது வலைப்பூவில் வெளிவந்த "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.." தொடர் பற்றி நிறைய பேசி விட்டாச்சு என்று நினைக்கிறேன். ஆகவே இந்த பதிவு என்பது இந்த தொடருக்கு அங்கீகாரம் தந்த என் நண்பர்களுக்கு  நன்றி தெரிவிக்க மட்டுமே.

தொடர் வெளிவந்து முடிவடைந்த நிலையில் திடீரென என் நண்பன் மதுரன் "வார்த்தை தவறி விட்டாய் கண்ணமாவை.." மின் நூல்  ஆக்கி அதை நாற்றில் வெளியிடப்போவதாக அறிவிக்க "நாற்று" குமத்தில் இருந்து நிரூபன், மணி, காட்டான், அம்பலத்தார், கந்தசாமி எல்லோரும்  தங்கள் தொடர் வேலைப்பளுவுக்கு மத்தியில் கடந்த ஒரு மாதமாக இது சமந்தமாக ஒழுங்குகள் செய்து மற்றும் பல நண்பர்களுடன் சேர்ந்து  சென்ற (29.04.2012) அன்று நாற்றில் "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா .." மின் நூல் வெளியீட்டை மிக விமர்சையாக கொண்டாடினார்கள்.

இனி விழாவில் இருந்து...

"வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.." மின் நூல் வெளியீட்டு நிகழ்வை நம்ம "வசந்த மண்டபம்" மகேந்திரன் அண்ணா தலைமையேற்று நடத்தினார்.



நிகழ்ச்சியை "விக்கியுலகம்" விக்கி மாமா விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.


அதை தொடர்ந்து என் நண்பன் "சிறகுகள்" மதுரன் வரவேற்பு உரை நிகழ்த்தினான்.

அதை தொடர்ந்து "வீடு" சுரேஷ்குமார் அண்ணா "வார்த்தை  தவறி  விட்டாய் கண்ணம்மா.." மின் நூலை  "நாற்று" குழுமத்தில் வெளியிட்டார்.
 

அதனை தொடர்ந்து நம்ம "மாத்தியோசி" மணி நூல் விமர்சன உரையை நிகழ்த்தினார்.

நாற்றில் மிக சந்தோஷமாக நடந்து  முடிந்த  இந்த  நிகழ்ச்சியின்  இறுதியில்  நம்ம "விழியில் விழுந்தவை.." கலைவிழி  அக்கா  நன்றியுரை  நிகழ்த்தி  நிகழ்ச்சியை  இனிதே நிறைவடைய செய்தார்.
 

"வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.." தொடரை மின் நூல் ஆக்கி வெளியிட்ட  நாற்று குழுமத்துக்கும், நிகழ்வில் கலந்து கொண்ட  எல்லோருக்கும் என் நன்றிகள்.

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா..  மின் நூலை தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும் / இணைய வேகம் குறைவாக இருப்பவர்கள் இங்கே  கிளிக்  செய்யவும்.

இந்த நிகழ்வு  பற்றியும்  தொடரின் பாதிப்பிலும் "வீடு" சுரேஷ் அண்ணா  எழுதிய  கவிதை  பதிவை  படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


சனி, ஏப்ரல் 28, 2012

ஈழ தமிழனுக்கும் கருணாநிதியை பிடிக்கும். காரணங்கள் சில..

ரு காலத்தில் புலிகள் வேறு ஈழத்தமிழர்கள் வேறு இல்லை என்று
சொன்னவர் நீங்கள். ஆனால்  உங்கள் தொண்டன் வைகோவுக்கு
கிடைத்த  செல்வாக்கை பார்த்து எங்கே நான் பூதம் போல் பாதுகாத்து
வைத்திருக்கும் திமுகா என்ற சொத்து எனக்கு பின் என் வாரிசுகளுக்கு
போகாமல் வைகோவுக்கு போய்விடுமோ என்ற அச்சத்தில் கொஞ்சமும்
நா கூசாமல் "வைகோ புலிகளை வைத்து என்னை கொலை செய்ய
திட்டம் போடுகிறார்" என்று அத்தனை மீடியாவையும் அழைத்துவைத்து
அசராமல் பொய் சொன்னீர்களே அப்போதே உங்களை ஈழ தமிழனுக்கு   
ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ல்லா நாட்டு, மாநில முதல்வர்களும் எப்போது பார்த்தாலும் நேரம் இல்லை நேரம் காணாது என்று பந்தா பண்ணுகிறார்கள், ஆனால் நீங்கள் இவ்வளவு பிஸியிலும் "சித்தி" மெகா தொடர் வெற்றி விழாவிலும் "மெட்டி ஒலி" மெகா  தொடர் வெற்றி விழாவிலும்  மேடை ஏறி ஒரு எபிசோட் கூட தவறாமல்  பார்த்தேன் என்று சொல்லி புகழ்ந்து தள்ளி அண்டை மாநில முதல்வர்களை மட்டும் அல்ல கழக கண்மணிகளையும் வீட்டு பெண்மணிகளையும் உங்கள்
கலைத்தாகத்தை பார்த்து மூக்கில் விரலை வைக்க வைத்தீர்களே அப்போதும்  உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்விட்டது.

ம்மையார் ஆட்சிக்கு வந்துவிட்டார். உங்கள் கைதும் நெருங்கி விட்டது, உங்களை கைது செய்யும் நாளும் தெரிந்துவிட்டது. அட நேரம் கூட தெரிந்து விட்டது. சன் டிவிக்காரனுக்கு அதான் உங்க பேரனுக்கு போனைப்போட்டு   உங்கள் வீட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் ஒளிந்து இருக்க செய்து விட்டு, போலிஸ் உங்கள் வீடு வந்து கைது செய்த போது எதுவுமே தெரியாதவர் போல "லுங்கியுடன்"  நின்று "ஐய்யோ  கொல்லுறாங்களே.."  "அய்யோ கொல்லுறாங்களே.."  என்று   கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் கத்தி,  ஒளிந்து நின்ற பேரன்களைக்கொண்டு  படம் பிடித்து அதை உங்கள் பேரன்கள் டிவியில்  ஒளிபரப்பும் செய்து உலக தமிழருக்கே உங்கள் நடிப்பு திறமையை காட்டினீர்களே அப்போதும்  உங்களை  ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.


நீங்கள் ஒரு மிக சிறந்த நாத்திகவாதி(!!). ஆனால் பேரன்களோ தங்கள் டிவியிலும் பத்திரிகைகளிலும் ஆன்மிகம் வளர்த்து கல்லா கட்டுகிறார்கள்.  ஏன் உங்கள் தொலைக்காட்சியிலேயே விநாயகர் சதுர்த்திக்கு  விடுமுறை  தினமென்று சொல்லி சிறப்பு படம் காட்டுகிறீர்கள். உங்கள்  வீட்டு மனைவி-துணைவி உட்பட்ட உறவுகளே  கோயில் கோயிலாக ஏறி இறங்கி உங்கள் நலம் வேண்டி பிரார்த்திக்கிறார்கள். இது கூட பெரிய விடயம் இல்லை. பாபா என்ற சாமியாரை வீட்டுக்கு அழைத்து அவர் மந்திரமாக வரவழைத்து தந்த மோதிரத்தை கைவிரலில் ஆசையாக பாதுகாப்பாக போட்டு வைத்தீர்களே  அப்போதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ஜெயலலிதா-சசிகலா ஒரு  கோயில் விழாவில் பங்கேற்ற போது, ஜெயலலிதா தனக்கு அணிவித்த மாலையை கழட்டி சசிகலா கழுத்தில்  போட்டார், உடனே நீங்கள் உங்கள் ஆக்களைகொண்டு அதை படம் பிடித்து உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில்  திரும்ப  திரும்ப  ஒளிபரப்பாக்கி ஜெயாவும்-சசியும் மாலை மாற்றினார்கள் என்று அவர்கள் இருவரும் "ஓரினசெயர்க்கையாளர்கள்"  என்ற ரேஞ்சில் சொல்லி நல்ல மனிதர்கள் பலரை உங்கள் முகத்தில் காறி துப்ப வைத்தீர்களே (எழுத்தாளர் ஞானி கூட உங்களை குமுதத்தில் கண்டித்து இருந்தார்) அப்போதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ருத்துக்கணிப்பு என்ற பெயரில் உங்கள் பேரன்-மகன்களுக்குள்
நடந்த பொழுது போக்கு சண்டையில் "தினகரன்" அலுவலகம்
கொளுத்தப்பட்டு அப்பாவி உயிர்கள் சில பலியாக, பெரிய நாட்டாமை போல் அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இனி  இல்லை என்று பேரங்களை தள்ளி வைத்தீர்களே.. அவர்களின் சன் டிவிக்கு போட்டியாக மக்கள் சொத்தில் உங்கள் சொத்தாக கலைஞர் தொலைக்காட்சியையும்  ஆரம்பித்தீர்களே  எல்லாம் ஒக்கேதான் ஆனால்.. திடீர் என ஒருநாள் உங்களுக்கு "இதயம் இனிக்க கண்கள் பனிக்க" சில லாபம் தேடி ஒட்டிவிட்டீர்கள் பேரன்களுடன். கழக கண்மணிகள் கூட ஒருநிமிடம் ஆடித்தான் போய்விட்டார்கள். ஆனால் இதில் உள்ள உங்கள் ராஜ தந்திரங்களையும் அதில் உள்ள உங்களின் நரி மூளையையும் பார்த்து அப்போதே உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ழத்தில் இறுதிப்போர் ஆரம்பமாகிவிட்டது, கொத்து கொத்தாக எம்
சனத்தை எல்லாம் கொன்று குவிக்க ஆரம்பித்து விட்டான் சிங்கள
இனவெறியன். நாங்கள் கத்தினோம் கதறினோம் தமிழ்நாட்டில் மக்கள் கொந்தளித்து வீதியில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டார்கள்.
"முத்துகுமார்" என்ற ஒரு புனித உயிர் எங்களுக்காக உங்களிடம் மன்றாடி தீக்கு இரையாகிவிட்டது, உலக தமிழினமே உங்களிடம் கையேந்தி நிக்குது அசைந்தீர்களா  நீங்கள்..? இப்போ பாருங்கள் பாஷிச..!  ஜெயலலிதாவை  தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற என்னால் முடியாது என்றவர் இந்த சிறு மக்கள் கொந்தளிப்பை பார்த்தே மனம்மாறி அவர்களை காப்பாற்ற சட்டமன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வந்து அந்த உயிர்களை அப்போதேனும் தூக்கில் பலி போகாமால் காப்பாற்றினார். அடிக்கடி  முடிவை மாற்றும் இவர் எல்லாம் ஒரு முதல்வரா?? ஆனால் நீங்கள் அப்படியா கடிதம் எழுதி எழுதி, ஆர்ப்பாட்டக்காரர்களை  கைது செய்தும் கடைசி வரை
காங்கிரஸின் ஆசையை நிறைவேற்ற இத்தாலி அன்னைக்கு ஆதரவாகவும்  பக்க பலமாக இருந்தீர்களே, நீங்கள் அல்லவா முதல்வர்!! அப்போதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ழத்தின் இன அழிப்பு வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது.
மக்கள் கொந்தளிப்பையும் மீடியாக்கள் கேள்விக்கனைகனைகளையும்
சமாளிக்க முடியவில்லை உங்களால், திடீரென ஒருநாள்   காலையில்
பிரேக் பாஸ்ட் சாப்பிட்டுவிட்டு செரிக்காமல் மெரினாவீச்சுக்கு
காத்து வாங்க வந்த நீங்கள் சட்டென மனைவி தலைமாட்டுக்கும்
துணைவி கால்மாட்டுக்கும் இருக்க படுத்துவிட்டீர்கள் "உண்ணாவிரதம்"
என்ற பெயரில் மெரினாவில். சில மணித்தியாலங்கள் கரைய பசி
குடலை புடுங்க லஞ்சுக்கு வூட்டுக்கு போகணும் என்ற பரிதவிப்பில் "அங்கே" இருந்து போன் அடிச்சாங்க யுத்தம் எல்லாம் நின்னுட்டாம்.
என்று   சொல்லி விட்டு உண்ணாவிரதத்தை! நிறைவு செய்தீங்க
பாருங்க அப்பொழுதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

டுத்த நாள் மீடியாவே திரண்டு வந்து உங்களை செருப்பால
அடிக்காத குறையாக, யுத்தம் எல்லாம் நின்னுட்டாம் என்று சொல்லி உண்ணாவிரதத்தை முடித்த பின்னர்தான்  கொத்துக்குண்டுகளில்
கொத்துகொத்தாக எம் இனம்  கொலைசெய்யப்பட்டதை சொன்ன போது
அசராமல்  உங்கள் அக்மார்க் புன்னகையோடு "மழை விட்டாலும்
தூறல் இன்னும் விடவில்லைப்போல்" என்று அந்த நேரத்திலும்
உங்கள் இலக்கிய திறமைய காட்டினீர்களே.. அப்போதும் உங்களை
ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ல்லாமே முடிந்துவிட்டது. சொந்த நாட்டிலேயே அகதி ஆகி
விட்டோம் நாங்கள். எங்களிடம் இருந்து உறிஞ்சப்பட்ட ரத்தம்
காங்கிரஸ் பற்களிலும் தெரிகிறது, அது உங்கள் கண்களுக்கும்
தெரிகிறது.அப்போது கூட நீங்கலாக விலக்க வேண்டாம் காங்கிரசை,
பிடிச்ச  சனியன் லேசில் போகாது இங்கே உங்களை விட்டு தானே
காங்கிரஸ் போகிறேன் என்று அடம்பிடிக்குது விட்டீர்களா நீங்கள்..?
கோவிச்சுக்கொண்டு அம்மா வீட்டுக்கு போன புது மனுசியை
சமாதானப்படுத்துவது போல் போய் கையில் காலில் விழுந்து
கூட்டி வந்து தேர்தலில் அத்தனை இடங்களை அள்ளி கொடுத்து
பார்த்து பார்த்து இடங்களை கூட தெரிவு செய்து கொடுத்தீர்களே
அப்போதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

யுத்தம் என்ற பெயரில் சிங்கள காடையன் எங்களை  அழித்து கொண்டிருந்த  நேரத்தில் தமிழ் நாடே  கொந்தளித்துக் கொண்டு இருக்கும் போது தமிழ் நாட்டின் முக்கிய தலைவர்கள் சோனா நமிதா பாபிலோனா எல்லோரையும் அறிவாலயம் அழைத்து பேசி நாளொரு வண்ண வண்ண புகைப்படத்தை முரசொலியில் பிரசுரித்து சுய இன்பம் கண்டுகொண்டு  
இருந்தீர்களே   அப்போதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ழத்து உயிர்களை  காப்பாற்ற சொல்லி  மத்தியரசுக்கு வெறும்  தந்தி
மட்டும் அடித்துக்கொண்டு இருந்த நீங்கள் உங்கள் வாரிசுகளுக்கு
பதவி வேண்ட மட்டும் புள்ளைகள் படை சூழ இந்த தள்ளாத
வயதிலும் தள்ளு வண்டியில் டெல்லி விரைந்தீர்களே அன்று அப்போதும்
உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

னிமொழி மகளை முக்கிய புள்ளியாக வைத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் 
ஊழலில் மக்கள் பணம் ரூ. 1.76 லட்சம் கோடியை அலாக்கா கொள்ளை அடித்துவிட்டு அந்த பணத்தை மனைவி துணைவி மகள் என்று
எல்லோர் பெயரிலும் போட்டு கலைஞர் தொலைக்காட்சி வேறு ஆரம்பித்துவிட்டு கொஞ்சம்  கூட குற்ற உணர்வு இன்றி இப்படிப்பட்ட 
ஒரு ஊழல்  நடக்கவே இல்லை என்று சத்தியம் பண்ணாத 
குறையாக  அண்டைப்புளுகு புளுகினீர்களே அப்போதும் உங்களை
ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

திமுகாவை அதன் முந்தைய தலைவர்கள் வளர்த்து இந்த நிலைக்கு
கொண்டுவர எவ்வளவு பாடுபட்டு இருப்பார்கள். ஆனால் இன்று
நீங்கள் பார்த்துகொண்டு இருக்கவே ஸ்டாலின்&அழகிரி பதவி வெறி கோஸ்டி சண்டையில்  மெல்ல மெல்ல திமுகாவை சிதறித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் "திமுகா என்ன அப்பன் வீட்டு சொத்தா" என்ற கணக்கில் திமுகாவை விட என் உறவுகள்தான் முக்கியம் என்று கன்றும் காணாததுபோல் இருக்கிறீர்களே இப்போதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ண்மையில் ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு
தூக்கு தண்டனையை நிறைவேற்ற முயன்ற போது,  குற்றம் சாட்டப்பட்ட
அந்த மூவரையும் தூக்கில் போட பரிந்துரைத்தவர்  சிபாரிசு  செய்தவர் 
நீங்கள்தான் என்பதையும் மற(றைத்)ந்து, ஐயோ காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்  என்று  அம்மையாருக்கு அன்பாகா  கருணை மடல் வரைந்து கபட நாடகத்தை ஜோராக அரங்கேற்றினீர்களே அப்போதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ட அது மட்டுமா  அதை தொடர்ந்து  பேரறிவாளன் முருகன் சாந்தன்
ஆகியோரை காப்பாற்ற(!)  சட்டமன்றத்தில் அம்மையார் தீர்மானம் கொண்டுவந்தது. நான் இந்த விடயத்தை கையில் எடுத்ததை பார்த்து பயந்துதான் என்று நேர்மையாக உண்மையாக அறிக்கை விட்டீர்கள் பாருங்கள் இப்போதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துபோய்விட்டது.
ல்லாம் முடிந்துவிட்டது. ஈழதமிழன் நடுத்தெருவுக்கு வந்துவிட்டான். சொந்த நாட்டிலேயே அகதி ஆகிவிட்டான். நடக்க கூடாதது எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நீங்கள் நினைத்து இருந்தால் எவ்ளோவோ செய்து இருக்கலாம். எந்தனையோ ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். பதவி ஆசை உங்கள் கண்களை மறைத்துவிட்டது. சரி விடுங்கள் போகட்டும் உங்களை நம்பியது எங்கள் தப்புத்தான் அந்த தவறுக்கு நன்றாக அனுபவித்து உணர்ந்து சுதாரித்துக்கொண்டோம். ஆனால்.. நீங்கள்!!  திமுகா கேவலமாக  விஜயகாந்த் கட்சிக்கு அடுத்த நிலைக்கு போய் தமிழக அரசியலில் இருந்து மறையும் நாட்கள் நெருங்குவதை பார்த்து நாடாளுமன்ற தேர்தலும் நெருங்குவது  உறைக்க உங்களை தக்க வைக்க இப்போதும் கொஞ்சமும் மனச்சாட்சியே இல்லாமல் தமிழீழம் அமைப்பதுதான் என் குறிக்கோள், ஈழத்துக்காகா காந்தி வழியில் போராடுவேன் என்று கண்டபடி உளறி  மீண்டும் நொந்துபோய் இருக்கும் எங்களை வைத்தே அரசியல்  நடத்த&நடத்தி பார்க்கிறீர்களே இப்போதும் இந்த ஈழ தமிழனுக்கு உங்களை ரெம்ப கொலைவெறியோடு பிடித்துப்போய்விட்டது.
                                           
                                                *** .... *** .... *** .... *** .... ***
'அபி அப்பா' என்ற ஒரு அரைகுறை எழுதிய மஞ்சள் பதிவை சாரி.. மஞ்சள் துண்டுக்காரனுக்கு ஜால்ரா அடித்த பதிவைத்தொடர்ந்து ஈழபதிவர்கள் சிலருக்கும் கருணாநிதியின் வால்களுக்கும் இடையே  நடக்கும் சண்டையில் பெரும்பாலான முகா எடுபிடிகள் கேக்கும் ஒரே கேள்வி   ஈழ தமிழனுக்கு ஏன் கருணாநிதியை பிடிக்கவில்லை என்பதே (பார்டா). அதற்கான விடையே இந்த பதிவு. இது ஒரு மீள் பதிவு ஆனாலும் இப்போதைய நிலையில் இந்த பதிவு சிறந்தது என்பதால் பதிவில் சில மாற்றங்கள் செய்து வெளியிடுகிறேன். இதில் கருணாநிதியை பிடித்ததற்கான காரணங்கள்  சொன்னது கொஞ்சம்தான்.  சொல்லாதது  இன்னும்  இன்னும்...... :(

மீண்டும் ஒரு கருணாநிதி புகழ் பதிவோடு சந்திப்போம்.
துஷ்யந்தன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...