அவள் வீட்டில் இருந்து அப்பாவின் முரட்டு பிடியில் கிட்டத்தட்ட இழுபட்டபடியே வீடு வந்தேன். கதவை திறந்தவர் வீட்டினுள் கழுத்தை பிடித்து தள்ளினார். வேகமாக உள்ளே சென்ற நான் சுவற்றுடன் மோதி அப்படியே அருகில் இருந்த கதிரையில் 'பொத்தென்று அமர்ந்தேன். அவமானமும் அழுகையும் என்னை முட்டி மோதிக்கொண்டிருந்தன.
"டேய்.. உனக்கு என்னடா வயசு? இப்பவே உனக்கு கல்யாணம் கேக்குது இல்ல..!
அவ அப்பன் கிட்ட என்ன கேட்ட? வெக்கமா இல்லையா என்றா? முதலில் உனக்கு வெக்கமா இல்லையா....!! என்னத்துக்கு இங்கே வந்தே... காதலிக்கவா...?!
அப்பா என்னைப்போட்டு உலுக்கிக்கொண்டு இருந்தார். பதில் பேசாது தலை குனிந்து இருந்தேன். கண்களில் இருந்து பொல பொல என்று கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தது.
"எப்படிடா... அவளை தெரியும் உனக்கு?? எத்தன நாள் பழக்கம் இது!! உன்ன சொல்லி குற்றமில்லை அவளைச்சொல்லனும்.. எவன் கிடைப்பான் என்று அலைஞ்சிட்டு இருந்திருக்காள் போல இருக்கு. அதான் வெளிநாட்டில் இருந்து வந்த இளிச்சவாய் நீ கிடைச்ச, கெட்டியா பிடிச்சுட்டா. பணத்துக்கு பணம் சுகத்துக்கு சுகம் அதுதான அவளுக்கு தேவை... அவளுக்கு காதலுக்கு ஆள் தேவைப்படல படுக்கிறதுக்கு ஆள் தேவைப்படுது அதான்.. இவளெல்லாம்...."
"அப்பா....." உடம்பில் இருந்த அத்தனை பலத்தையும் திரட்டி வீடே அதிரும்படி உரக்க கத்தினேன்.
"என்னடா... சவுண்டு விடுற, ஓ.. அவ்ளோத்துக்கு பெரிய ஆள் ஆகிட்டீயா?? அங்க சொல்ல இங்கே வலிக்குதோ... உண்மைய சொல்லும்போது பொத்திட்டு இருக்கணும்... அவளையும் அவ குடும்பத்தை பற்றியும்தான் ஊரே சிரிக்குதே... இதில் நான் வேற புதுசா சொல்லனுமா.... அவ அப்பனுக்கு வேலை வெட்டியில்லை. ஆனா அவள்! நல்லா தின்று கொளுத்து ஆளை மயக்கிற அளவுக்கு எப்படி இருக்கிறா... போடா போ...
போய் அவளிட்டையே கேளு.. என்னை மாதிரி இன்னும் எவன் எவனோட எல்லாம் சுத்திர என்று."
கழுத்தை இறுக்கி தள்ளினார். திமிறிக்கொண்டு நின்று கண்களில் தீப்பொறி பறக்க அவரை பார்த்தேன்.
"போதுமப்பா... நிப்பாட்டுங்க. அவளை அசிங்கப்படுத்திறதா நினைச்சு உங்க மனசுக்க இருக்கிற வக்கிரத்தை வெளில கொட்டாதீங்க.... நல்ல வேளை உங்களுக்கு கடவுள் ஒரு பொம்புள பிள்ளையை கொடுக்கல்ல..." விரக்தியாய் சிரித்தபடியே சொன்னேன்.
அடுத்தகணம் அப்பாவின் கைகள் என் கன்னங்களை மாறி மாறி பதம் பார்த்தது. கத்தியபடியே பிடிக்க வந்த அம்மாவும் அப்பம்மாவும் அப்பா பார்த்த உக்கிரபார்வையில் ஒடுங்கி சுவற்றுடன் சாய்ந்தபடி வாய்பொத்தி அழுதுகொண்டிருந்தார்கள். நான் அவர் அடிக்கும் அடிகளை தடுக்க கூட விரும்பாமால் கல்லு மாதிரி நின்றேன்.
அடிப்பதை நிறுத்தியவர். அம்மாவை பார்த்து..
"வெளிக்கிடு... இப்பவே உடனேயே கொழும்பு போறோம்.. டேய் உன்னையும் தான் உடனே உடனேயே..." முதுகில் கைவைத்து தள்ளிவிட்டு, வெளியே போக எத்தனித்தார்.
"நான் வரல்ல..." அழுத்தமாகவே சொன்னேன்.
போனவர் திரும்பி என் அருகே வந்தார்.
"ஓ... அப்போ சார் வரல்ல... இங்கே இருந்து என்ன பண்ணபோறீங்க!! அந்த மானம்கெட்டவள கட்டப்போறீங்களோ..!!"
"அப்பா... திரும்பவும் சொல்லுறேன். அவளைப்பற்றி விமர்சிக்கிறத நிறுத்துங்க.. அந்த உரிமை உங்களுக்கு மட்டும் அல்ல யாருக்குமே இல்ல ... என்னை அடியுங்க கொல்லுங்கோ அதுக்கு மட்டும்தான் உங்களுக்கு உரிமை இருக்கு." அவர் கண்களை நேரே பார்த்தபடியே அழுத்தமாக கத்தி சொன்னேன்.
என் கண்களில் தெரிந்த அனலும் உறுதியும் அவரை கொஞ்சம் தடுமாறவே செய்தது. சட்டென தன் குரலை தாழ்த்திக்கொண்டார்.
"சரி... எவ எப்படியிருந்தா எனக்கென்ன.. இப்போ நீ வாறீயா..?? இல்லையா?? என் கண்களை உற்றுப்பார்த்தபடியே கேட்டார்.
"சாரிப்பா... நான் வரல்ல... இதுக்கு மேலே என்னை கட்டாயப்படுத்தினால் என்னை உயிரோடேயே பார்க்க மாட்டீங்க.." என் கடைசி ஆயுதத்தை கையில் எடுத்தேன்.
அம்மா பதறியடித்துகொண்டு என்னருகே வந்தார். அப்பா..!!!
அதை அலட்சிய படுத்தியவராக, அம்மாவை பார்த்து சொன்னார்.
"கார் வெளிலே ரெடியாவே இருக்கு.. சாமான்கள் எல்லாவற்றையும் ஏற்று உடனே கிளம்புறோம்.." சொல்லியபடியே என்னைப்பார்த்தார்.
"என்ன சார் அப்படிப்பாக்குறீங்க... உங்களுக்கே அவ்ளோ இருந்தா எனக்கு எவ்ளோ இருக்கும்!! நீ விரும்பின மாதிரி இங்கேயே நில்லு.. அல்லது முதல் சொன்னது, அதான் செத்திருவேன் எண்டியே.. இதில் எதையாவது உன் விருப்பப்படி செய். ஆனா... ஒன்று இதில் எது நடந்தாலும் அதை தொடர்ந்து போகபோறது என்றையும் என் பொண்டாட்டி உயிரும்தான். என்னைப்பற்றி உனக்கு நல்லாவே தெரியும் என்று நினைக்கிறேன்.." என் கண்கள் பார்த்து சொன்னார்.
இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அப்பாவை பற்றி எனக்கு நன்கு தெரியும். எடுத்த முடிவுகளில் இருந்து எப்போதும் பின் வாங்க மாட்டார். எப்படியும் அவள் கிடைப்பாள் என்று இருந்த கொஞ்ச நெஞ்ச நம்பிக்கைகளும் கண் எதிரேயே சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது. சொல்லிவிட்டு நகர்ந்த அப்பாவை பரிதாபமாகவே பார்த்துகொண்டு நின்றேன்.
அப்பம்மா தரையில் அமர்ந்து அழுதபடியே இருந்தார். அப்பாவும் அம்மாவும் காரில் சாமான்களை ஏற்றுவதில் குறியாக இருந்தார்கள். வெளிக்கிடும் நேரமும் நெருங்கி விட்டது. ஏதோ ஒரு உச்சி மலையில் இருந்து யாரோ என்னை தள்ளிவிட்ட உணர்வு. என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டு இருந்தேன். போனால் சுலக்க்ஷிகா இல்லை. நின்றால் அப்பா சொன்னதை செய்துவிடுவார்.. மனம் மிக பெரிய போராட்டத்தில் சிக்கி சிதறி நரக வேதனையை தந்து கொண்டிருந்தது.
அப்பா காரில் ஏற.. ஓடிப்போய் அவர் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டேன்.
"அப்பா.. ப்ளீஸப்பா.... என்னை விட்டுட்டு போகாதீங்கோ.. அவ எனக்கு வேணுமப்பா... அவ ரெம்ப நல்லவ அப்பா... என்னை பிரிஞ்சா அவ உடைஞ்சு போயிடுவாப்பா.. என்னாலையும் அவ இல்லாம வாழவே முடியாது.. அவ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால ஜடம் போலதான் வாழ முடியும். ப்ளீஸ் புரிஞ்சுகோங்க.. அப்பா எனக்கு அவ வேணுமப்பா....ப்ளீஸ்.." அப்பாவின் கைகளை நெஞ்சோடு அணைத்தபடி கெஞ்சி கதறினேன்.
என் கைகளை உதறியவர். கார் கதவை திறந்து உள்ளே போய் அமர்ந்துகொண்டார்.
பின்னால் வந்த அம்மாவை பரிதாபமாக பார்த்தேன்.
அப்பாவையும் என்னையும் மாறி மாறிப்பார்த்தவர் பொங்கி வந்த அழுகையை கைகளால் அடக்கியபடியே உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்.
அப்பம்மா வீட்டை விட்டு வெளியேயே வரவில்லை. கார் புறப்பட ஆயுத்தமானது. சில வினாடிகளில் கார் அப்பம்மா வீடைவிட்டு விரைய தொடங்கியது. என் நிலையை என் உணர்வுகளை என் துடிப்பை எந்த வார்த்தைகள் கொண்டு சொல்லிவிடுவது என்று எனக்கு தெரியவில்லை.
சட்டென காரின் பின்னால் ஓட தொடங்கினேன்.
சென்ற கார் சடார் என பிறேக் அடித்து நின்றது.
ஓடிச்சென்று கார் கதவை திறந்து உள்ளே அமர்ந்துகொண்டேன்.
அப்பாவின் முகத்தில் சந்தோஷ ரேகைகள். அம்மா அழுதபடியே என்னை அணைத்துக்கொண்டார். திமிறியபடியே அவர் அணைப்பை தட்டி விட்டு விறைப்பாய் இருந்தேன்.
கார் அவள் வீட்டையும் கடந்து விரைந்து கொண்டிருந்தது. அவள் வீட்டு வாசல் கதவோடு ஒட்டியபடி எங்களை பார்த்துகொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் நான் அவளையோ அவள் வீட்டையோ திரும்பி கூட பார்க்கவில்லை. பார்க்கும் அந்த சக்தியும் எனக்கில்லை.
கொழும்பு வந்து சில தினங்கள் அவள் பற்றிய நினைவுகளுடன் நரகமாக கழிந்த பின் ஒரு வழியாக உயிரையும் உணர்வுகளையும் அவளிடம் தொலைத்துவிட்டு வெறும் ஜடமாக பிராண்ஸ் வந்து சேர்ந்தேன்.
பிராண்ஸ் வந்தும் அவளை மறக்க முடியாமல் தினம் தினம் செத்துக்கொண்டிருந்தேன்.
மீண்டும் அவளை பார்ப்பதர்க்கும் அவளுடன் சேர்வதற்கும் நான் எடுத்த முயற்சிகள் பிடிவாதங்கள் எல்லாம் அப்பா அம்மா முன் தவிடு பொடியாக..
"அவள்" எனக்கு நிறைவேறாத கனவு என்பதை மெல்ல மெல்ல உணர தொடங்கினேன்.
சில வருடங்களின் பின் நான் வழமையான என் வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்ப தொடங்கிவிட்டேன். ஆனாலும் அவள் நினைவுகள் மட்டும் என்னை அடிக்கடி தீண்டி தீண்டி ரணமாக்கி கொண்டிருந்தன. அவள் இனி எப்போதும் எனக்கு கிடைக்க மாட்டாள் என்ற முடிவுக்கு நான் வந்ததால் அந்த ரண வலி மிக அதிகமாகவே என்னை வாட்டியது. ஆனாலும் அவளுக்கும் எனக்குமான உறவு அவ்ளோ சீக்கிரத்தில் முடிந்துவிடும் உறவா.. என்ன?!!!
இனி எப்போதும் இலங்கை போக முடியாது அவளை பார்க்கவே முடியாது என்றிருந்த எனக்கு அந்த சந்தர்ப்பம் இதோ.. இவ்ளோ சீக்கிரம் ஒரு துயர செய்தி மூலம் வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க வில்லை.
"அப்பம்மாவுக்கு சீரியஸ் உடனே வரவும்" என்ற அந்த அவசர செய்தியால் பதறியடித்தபடி வெளிக்கிட்ட நாங்கள் இதோ அப்பம்மா வீட்டை நெருங்கிகொண்டிருக்கிறோம்.
அப்பாம்மாவின் நிலையை நினைத்து மனசு துடித்தாலும், மீண்டும் அவளை பார்க்கு போகிறேனே.. பேசப்போகிறேனே.. என்று நினைக்கும்போது மனசு சந்தோஷத்தில் வானில் சிறகடித்து பறக்க தொடங்கியது.
அடுத்த பகுதியில்.. முற்றும்.
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 01
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. ௦2
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 03
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 04
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 05
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா..06
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 07
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 08